சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி அடையாளங்கள். இவர்கள் அனைவரும் அழிந்துபோன சில மொழிகளைப் பேசிய கடைசி மனிதர்கள். அவர்களுக்கு வாரிசே இல்லை என்று அர்த்தம் அல்ல. அந்த வாரிசுகளுக்கு அவர்கள் தாய்மொழி தெரியவில்லை என்று அர்த்தம்.
ஒட்டுமொத்த உலக மக்களையும் டி.என்.ஏ, நிறம், உருவம், மதம் போன்ற பல காரணிகளைக் கொண்டு பகுக்க முடியும். இந்தியாவில் மட்டும் மக்களைப் பிரிக்க ஜாதி என்ற கேவலமான ஒரு நடைமுறை இருக்கிறது. இவை அனைத்தையும் வைத்து ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியுமா என்றால், முடியும். ஆனால் ஜாதி, மதம் போன்ற அடையாளங்கள் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. இவை அனைத்தையும் தவிர்த்து ஒரு இனத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஒன்று உண்டென்றால் அது மொழிதான். மொழி மட்டும்தான்.
மனித இனம் தோன்றியது ஏறக்குறைய முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்று அறிவியலுலகம் சொல்கிறது. அதலிருந்து ஒரு மொழியின் மூலக்கூறு உருவாவதற்கு குறைந்தது சில இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். ஆக கற்காலம் தொடங்கி தற்காலம் வரை நம் மனித இனத்துடன் பயணித்த ஒரே கருப்பொருள் மொழிதான்.
செரிப்ரல் கோர்டக்ஸ், ப்ரீஃப்ரண்டல் கோர்டக்ஸ். வாய்க்குள் நுழைய மறுக்கும் இந்த வார்த்தைகள் மூளை என்ற ஒரு ப்ளேட் மினி இட்லிக்குள் உள்ள சில இட்லிகளின் பெயர்கள்தான் அவை. சரி இந்த இட்லிகளுக்கும் மொழிகளுக்கும் என்னதான் தொடர்பு. இது கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்பதுபோன்ற பெரிய கேள்வி. ஏனெனில் மனிதன் மனதில் மொழியின் மூலக்கூறுகள தோன்ற ஆரம்பித்த நேரம்தான் நமது மினி இட்லி ப்ளேட்டில் மேற்கூறிய சில இட்லிகள் வந்து சேர்ந்தன. ஆக பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவு, மிருகங்களிடமிருந்து நம்மைப் பிரித்துக்காட்டிய அந்த அறிவு உற்பத்தியாகும் மூளையின் பகுதிகள் உருவாகக் காரணமே மொழிதான்.
நம் கொள்ளுத்தாத்தாவுக்கு எள்ளுத்தாத்தா எங்கோ காட்டுக்குள் கற்களில் எழுதிய கிறுக்கலில் ஆரம்பித்த முதல்மொழி, அதுதான் உலகின் முதல் அகரத்தின் ஆரம்பம். இது பழங்கதைதான். ஆனால் நம் இனத்தின் ஆணிவேர் அங்குதான் ஊன்றப்பட்டது. ஒரு மொழியின் அழிவு என்பது ஓரினத்தின் அழிவுதான், அதில் சந்தேகமேயில்லை.
ஹிட்லர் ஒரு நாட்டைப் பிடித்தவுடன் அவன் இடும் கட்டளை இதுதான். இந்த நாட்டின் மொழியையும், பண்பாட்டையும் அழித்து விடுங்கள். சரி அதனால் என்ன இலாபம். ஒரு மொழியையும் பண்பாட்டையும் அழித்த பின்பு அந்த இனம் கடலில் கலந்த ஆறுபோல அடையாளமழிந்து போகிறது. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு வெள்ளைக் காகிதம். நமக்குத் தேவையான எல்லாக் கருத்துகளையும் அதில் எழுதலாம். ஒட்டுமொத்த நாட்டுமக்களையும் ஒருமுகப்படுத்த உலகில் எல்லா கொடுங்கோல் ஆட்சிக்காரர்களும் பயன்படுத்திய ஒரே ஆயுதம் வாளோ, பீரங்கியோ அல்ல அது மொழியை அழிப்பதுதான்.
மாயன்கள், அமெரிக்க சிவப்பிந்தியர்கள், ஆஸ்திரேலிய அபாரிஜன்கள் போன்ற பூர்வக்குடிகள் எல்லோரும் சொந்தமண்ணில் அகதிகளாக வாழ்வதற்கு மிகமுக்கிய காரணம் அவர்கள் மொழி அழிந்ததுதான். உலகில் அடுத்த 50 ஆண்டுகளில் குறைந்தது 4000 மொழிகள் அழிந்துவிடும் என்று யுனெஸ்கோ சொல்கிறது. அதில் தமிழும் ஒன்று. அதனைக் காப்பாற்ற புதிதாக யாரும் பிறந்து வரவேண்டியதில்லை. அவரவர் குழந்தைகளுக்கு தமிழைக் கற்பித்தாலே போதுமானது. வாழ்க தமிழ்.
One Response
ஆர்வத்தை தூண்டும் பதிவு.. நன்றி..
இன்றைய அதிநவீன உலகின் மனிதனால் கூட மேலும் ஒரு மொழியை உலகில் தோற்றுவிக்க இயலாது என்பது மறுக்க முடியாத உண்மை.. அவ்வளவு ஏன் நடைமுறையில் இருக்கும் மொழியில் ஒரு வார்த்தையை கூட அவன் உருவாக்கியிருக்கவில்லை… இதன்மூலம் மொழிகளின் கண்டுபிடிப்பு எவ்வளவு உயர்ந்த ஒன்று என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது.. ஆகவே இனிவரும் மனிதனாலும் கண்டுபிடிக்க, மேம்படுத்த இயலாத ஒன்றை காப்பாற்றி வருவதே ஆகசிறந்த ஒன்று.. ஆகவே இது கண்ணை திறக்கும் பதிவு என்பதில் நெல் முனையளவும் அய்யமில்லை…