ஆயா முகத்தில் நீ கண்விழிக்க…
அலுவலக வாசலில் நான் இருப்பேன்…
தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்…
தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்….
உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்…
உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்…
தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு…
தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு…
தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை…
முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை…
வீட்டுச்சுமை வேலைக்கு தள்ளியது என்னை…
வீட்டுக்குள்ளே அந்நியமாக்கியது உன்னை…
கருவில் சுமந்த உன்னை கையில் சுமக்க நேரமில்லை…
உயிரில் கலந்த உன்னை உச்சிமுகர காலமில்லை…
அலுவலகத்தில் இருந்தாலும் ஆசை நெஞ்சம் உன்னுடன்தான்…
கணினி முகம் பார்த்தாலும் என் கண் முழுதும் உன் உருதான்…
என் கண்ணீருக்குள் கலையாத காவியம் நீ…
என் உயிருக்குள் கலந்த இன்னொரு உயிர் நீ…
நம் கடன்தீரும் நாளும் ஒருநாள் வரும்…
உனைக் கட்டியணைத்துக் கொஞ்சும் நாளும் வரும்…
காத்திரு மகளே… இந்த Corporate தாய்க்காக…