எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – இரண்டு

இரண்டாம் இடம்

படிப்பு முதல் விளையாட்டு வரை இரண்டாம் இடம் என்பது சற்று கடினமான இடம்தான். ஒட்டுமொத்த உழைப்பையும் கொடுத்துப் போராடி முதல் இடத்தைத் தவறவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்குப்  பாராட்டுக்களை விட அறிவுரைகள்தான் அதிகம் வந்து சேரும். ஏன் முதல் இடத்தைத் தவறவிட்டீர்கள் என்று எல்லோரும் கேள்விகளால் துளைத்தெடுப்பார்கள். இத்தனை நாள் உழைத்த உழைப்பே வீணாகிவிட்டது போன்ற மனநிலைக்குக் கொண்டு வந்து விடுவார்கள் இரண்டாம் இடம் பெற்றவரை. இரண்டாம் இடம் பெற்றவர் மட்டுமல்ல, படிப்போ, விளையாட்டோ, கலந்து கொண்ட அனைவரின் உழைப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இரண்டு என்ற எண் மற்றும் வார்த்தை தொடர்பான தகவல்களுக்குள் நாம் நுழைவோம்.

இரண்டு – வேர்ச்சொல்

இரண்டு என்ற சொல்லின் வேர்ச்சொல் ஈர் என்ற வார்த்தை. ஈர் என்ற வார்த்தைக்குப் பின்னால் பிறப்பின் பொருளே அடங்கியிருக்கிறதென்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். ஈர்தல் என்றால் இரண்டாதல் என்று பொருள். ஈர்தல் என்ற வார்த்தையில் இருந்துதான் ஈனுதல் என்ற வார்த்தை பிறந்தது. ஈனுதல் என்றால் குழந்தையைப் பெற்றெடுத்தல் என்று பொருள். ஒன்றாக, ஓருடல் ஈருயிராக இருந்த தாயும், சேயும் ஈர் உடலாகப்  பிரிவதற்கு ஈனுதல் என்று பெயர். பிறப்பில் இருந்து பிறந்ததுதான் இரண்டு என்ற வார்த்தை.

இரண்டு என்ற வார்த்தையைப் பிரித்தால் இரு + அண்டு என்று வரும். அண்டு என்ற சொல்லுக்கு அருகில், பக்கத்தில் என்று பொருள். ஈன்ற பின் தாய், சேய் இருவரும் அருகில் இருப்பது போல் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது இரண்டு என்ற சொல். பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இரண்டு நம்மைப் பின் தொடர்கிறது. உண்மைதான். இறுதி வரையிலும் நம்முடன் கலந்து உறவாடிய உயிர் இந்த உடலைப் பிரியும்போது நாம் மனிதன் என்ற நிலையைத் துறக்கிறோம். உடலும், உயிரும் இரண்டாகப் பிரிந்து விட்டால் வாழ்க்கையில்லை. பிறப்பு, இறப்பு இரண்டுக்கும் இரண்டோடு தொடர்பிருக்கிறது.

உடு

தமிழில் எண் இரண்டைக் குறிக்க “உ” என்ற எழுத்தைப் பயன்படுத்துவார்கள். “உ” என்ற எழுத்து “உடு” என்ற வார்த்தையைக் குறிக்கிறது. “உடு” என்றால் ஆடு என்று அர்த்தம். ஆட்டின் இரண்டு கொம்புகளைக் கொண்டு எண் இரண்டைக் குறிப்பிட்டுச் சொன்னதுதான் “உடு” என்ற வார்த்தை.

உடு, உடுத்து என்ற சொல்லுக்கு ஆடை உடுத்துதல் என்ற பொருளும் உண்டு. ஆடை என்றாலே, மேலாடை, கீழாடை என்ற இரண்டையுமே குறிக்கும் சொல்தான். ஆகையால் உடுத்து என்றாலே மேலாடை, கீழாடை இரண்டையும் அணிவது என்றுதான் பொருள். “உடு” என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த பல வார்த்தைகளும் இரண்டுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன.

“உடு” என்ற சொல்லில் இருந்து “விடு” என்ற சொல் பிறந்தது. நாம் ஒன்றைப் பிடித்து வைத்திருக்கிறோம், பிடித்து வைத்திருக்கும் வரை ஒன்றாய் இருந்தது விட்டால் இரண்டாகி விடும். இது மனதிற்கும் பொருந்தும். மனம் ஒருமித்திருக்கும் வரை ஒன்றாய் வாழலாம், மனதை விட்டு விட்டால் பிரிவுதான். மனம் இரண்டாகி விடும். விடு என்ற சொல் ஒன்றாக கூடியிருந்தது இரண்டாகப் பிரிந்து விட்டது என்பதையேக் குறிக்கிறது. இரண்டு பக்கங்களைக் கொண்ட “உடுக்கை” என்ற சொல்லும் உடு என்ற சொல்லிலிருந்துதான் பிறந்திருக்க வேண்டும்.

இரண்டில் ஒன்று

இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என்று நாம் சூளுரைப்பது வழக்கம். ஆனால் இரண்டில் ஒன்றுதான் உண்மை என்ற பார்வை தவறு. பகல் x இரவு, சூடு x குளிர், ஆண் x பெண் என்று எல்லாவற்றையும் நாம் இரண்டாகப் பார்க்கிறோம். ஆனால் பகல் என்பதை, குறைவான இருள் என்றும் சொல்லலாம். இருள் என்பதை, குறைவான பகல் என்றும் சொல்லலாம். குளிரை, குறைவான சூடு என்றும், சூட்டை, குறைவான குளிர் என்றும் சொல்லலாம். இந்த அறிவியல் பார்வைக்கு சார்புநிலை கோட்பாடு (Relativity Theory) என்று பெயர். ஐன்ஸ்டீன் (Einstein) பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சார்புநிலை கோட்பாட்டை எளிமையாக விளக்கியவர் வள்ளுவப் பெருந்தகை. எடுத்துக்காட்டாக இரண்டு குறள்களைப் பார்க்கலாம்.

“குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”

உலகில் நூறு சதவிகிதம் நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ யாரும் இருக்க மாட்டார்கள். நல்லவை, கெட்டவை இரண்டும் கலந்த மனிதர்கள் இருப்பார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இதை வள்ளுவர் அவ்வளவு நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறார். நல்லவை, கெட்டவை இரண்டையும் கணக்கில் கொண்டு அவற்றில் நல்லவை அதிகம் இருந்தால் அவன் நல்லவன், அவ்வளவுதான். ஆனாலும் நல்லவனுக்குள்ளும் சில கெட்ட குணங்கள் இருக்கவே செய்யும். இந்த அறிவியல் பார்வை நமக்கு வள்ளுவன் வழங்கிய கொடை.

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்”

பொய்யே சொல்லக்கூடாது என்று கடிந்துரைக்கும் வள்ளுவர் எங்கே பொய் சொல்லலாம் என்றும் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்கிறார். குறையேதும் சொல்லமுடியாத அளவுக்கு நன்மை மட்டுமே விளையுமானால் பொய் சொன்னால் குற்றமில்லை என்று சொல்கிறார். உதாரணமாக குடிபோதையில் செய்வதறியாது ஒருவன் அரிவாளோடு அவன் மனைவியை வெட்ட வருகிறான் என்றால், ஒளிந்து கொண்டிருக்கும் அவன் மனைவி இங்கே இல்லை என்று அவனிடம் சொல்லும் பொய் ஒரு உயிரைக் காப்பாற்றுகிறது. அங்கு பொய் சொல்வது தவறில்லை. இந்த சார்புநிலைக் கோட்பாட்டை உலகிற்கு அளித்தவர் வள்ளுவர் என்றால் மிகையாகாது. இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் என்ற பார்வையைத் தகர்த்து இரண்டிலுமே கொஞ்சம்  உண்மை இருக்கலாம் அல்லது இரண்டிலுமே கொஞ்சம் பொய் இருக்கலாம் என்று இரட்டைகளின் மாயையை உடைத்த பெருமையும் ஐயன் வள்ளுவனையே சாரும்.

இரண்டகம்

ஒருவர் செய்யும் துரோகத்திற்கு இரண்டகம் என்ற சொல் ஏன் வழக்கத்திற்கு வந்தது. மனதால் ஒருமித்து ஒரே குடும்பமாய் வாழ்ந்தவர்களிடையே பிரிவினை வரும்போது அங்கு மனம் இரண்டாகிறது, அதனால்தான் இரண்டகம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இரண்டகம் என்ற வார்த்தையை இரண்டு + அகம் என்று பிரிக்கலாம். அகம் என்ற சொல்லுக்கு மனம் என்று பொருள். இரண்டகம் என்றால், மனதை இரண்டாக்குதல் என்று பொருள். “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா?” என்றால் வீட்டில் ஒற்றுமையாக  இருப்பவர்களிடையே பிரிவினையை உண்டாக்க நினைக்கலாமா என்று அர்த்தம்.

இரண்டு வரங்கள்

மகாபாரதத்திலும் , ராமாயணத்திலும் இரண்டு தவிர்க்க முடியாதது. கைகேயிக்கு தசரதன் கொடுத்தது இரண்டு வரங்கள். குந்தி கர்ணனிடம் கேட்டுப்பெற்றது  இரண்டு வரங்கள். கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் வாங்கவில்லையென்றால், ராமாயணம் என்ற கதையே தேவையில்லாமல் போயிருக்கும். ராமன் காட்டுக்குப் போயிருக்க மாட்டான், ராவணனும் சீதையைத் தூக்கியிருக்க மாட்டான். கைகேயின் இரண்டு வரங்கள்தான் ராமாயணக் கதைக்கே அச்சாரம் என்று சொல்லலாம்.

குந்தி கர்ணனிடம் இரண்டு வரங்கள் வாங்கவில்லையென்றால் மகாபாரதக் கதையின் முடிவும் மாறியிருக்கும். அர்ஜுனன் மீது பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேல் ஏவமாட்டேன் என்று சத்தியம் செய்யாவிட்டால், கர்ணன் அர்ஜுனனை நிச்சயம் கொன்றிருப்பான், பஞ்ச பாண்டவர்கள் மற்ற நான்கு பேரையும் சேர்த்தே கொன்றிருப்பான். கௌரவர்கள் பக்கம் வெற்றி கிடைத்திருக்கும். குந்தியின் இரண்டு வரங்கள்தான் மகாபாரதத்தின் திருப்புமுனை. இரண்டு வரங்கள் இல்லையென்றால் ராமாயணம், மகாபாரதம் இரண்டுமே இல்லை.

அத்வைதம்

அத்வைதம் என்ற சொல் த்வைதம் என்ற சொல்லுக்கு எதிராக உருவாக்கப்பட்டது.  எதிரெதிர் என்றவுடன் இரண்டில் ஒன்று கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லையோ என்று யோசிக்காதீர்கள். த்வைதம், அத்வைதம் இரண்டுமே கடவுளை ஏற்றுக்கொண்ட தத்துவங்கள்தான். இரண்டுக்கும் இருந்த பிரச்னை உயிரைப் பற்றியது. அந்த தத்துவங்களைப் பொருத்தவரை பரமாத்மா, ஜீவாத்மா என்று இரண்டு இருக்கிறது. நமது உடலில் உயிராக இருப்பது ஜீவாத்மா. இந்த உலகும் முழுமையும் பரவியிருப்பது பரமாத்மா.

த்வைத தத்துவப்படி, பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு. அதனால்தான் அதன் பெயர் த்வைதம். த்வா என்றால் இரண்டு என்று அர்த்தம். பரமாத்மா, ஜீவாத்மா இரண்டுமே ஒன்றுதான், பரமாத்மாவின் ஒரு துகள்தான் ஜீவாத்மா, அதனால் இரண்டையும் பிரித்துப்பார்ப்பது பொருளற்றது என்பது அத்வைதம் முன்வைக்கும் வாதம். அத்வைதம் என்ற சொல்லுக்கு “இரண்டல்ல” என்று பொருள். கடவுள் நம்பிக்கை கொண்ட இரண்டு தத்துவங்களுக்கிடையேயான சண்டையைப் பார்த்தோம். அப்படியானால் கடவுள் உண்டு, இல்லை என்றும் இரண்டுவிதமான சண்டைகள் நடந்திருக்க வேண்டுமல்லவா?

கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம்

கடவுள் உண்டு என்று சாதிக்கும் ஒரு பிரிவினரும், அப்படி யாரும் இல்லை என்று ஒரு பிரிவினரும் சண்டையிட்டுக் கொண்டதற்கு இரண்டு பெயர்கள் உண்டு. கடவுளை நம்பும் பிரிவினர் முன்வைக்கும் வாதத்துக்கு கருத்துமுதல் வாதம் என்று பெயர். கடவுளை மறுப்பவர்கள் முன்வைக்கும் வாதத்துக்கு பொருள்முதல் வாதம் என்று பெயர். ஆகமொத்தம் இரண்டு வாதங்கள். ஆனால் அவற்றுக்கு நம் நாட்டில் வேறு இரண்டு பெயர்கள் வைத்திருக்கிறார்கள், ஆஸ்தீகர்கள், நாஸ்தீகர்கள் என்று. கடவுளை ஏற்றுக்கொண்டவர்கள் ஆஸ்தீகர்கள், கடவுளை மறுப்பவர்கள் நாஸ்தீகர்கள் என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. நாஸ்தீகர்கள் என்றால் கடவுளை மறுப்பவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. “நாஸ்திக வேத நிந்திக” என்றுதான் இந்துமதம் சொல்கிறது, அதாவது வேதத்தை யார் இழிவு செய்கிறார்களோ அவர்களே நாஸ்தீகர்கள்,  கடவுளை மறுப்பவர்கள் அல்ல. ஆகையால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா, இல்லையா என்பது இந்து மதத்தில் தேவையற்றது. நீங்கள் வேதத்தை ஏற்றுக்கொண்டால் ஆஸ்தீகன், மறுத்தால் நாஸ்தீகன், அவ்வளவுதான்.

கடவுளை மறுப்பவர்கள் அனைவரும், மதங்களுக்கு எதிரிகள் என்ற பார்வையை உடைத்தெறிய நான் இங்கு இரண்டு வரலாற்று சம்பவங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆஸ்தீகனுக்கு எதிரி ஆஸ்தீகனே என்பதை சுட்டிக்காட்ட ஒரு சம்பவம், நாஸ்தீகனும் வெற்றி பெறுவான் என்பதை உணர்த்த ஒரு சம்பவம். முதல் சம்பவத்தில், கடவுள் நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக நம்பிக்கையில் இருந்த சில தவறுகளை சுட்டிக்காட்டிய ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கருத்துமுதல் வாதமும், பொருள்முதல் வாதமும் சங்கமித்த இடத்தில் நடந்த முதல் கொலையாக இந்த சம்பவத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது சம்பவத்தில், கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர், கடவுள் என்ற வார்த்தையை உச்சரிக்க விரும்பாததால் அவருக்கு பதவி பறிபோனது, ஆனால் இறுதியில் அவர்தான் வென்றார். இரண்டையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கடவுள் நம்பிக்கை கொண்ட கியார்டனோ புரூனோ (Giordano Bruno) என்பவர், சூரியன்தான் நடுவில் இருக்கிறது, நமது பூமி சூரியனை சுற்றுகிறது என்ற அறிவியல் உண்மையைத்தான் சொன்னார். ஆனால் பூமிதான் பிரபஞ்ச மையம் என்ற கத்தோலிக்க மத நம்பிக்கையை சீரழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு 17.02.1600 அன்று புரூனோ எரித்துக் கொல்லப்பட்டார். ஆன்மீகம் அறிவியலின் கண்ணை மறைக்க நினைத்தது, ஆனால் அறிவியல்தான் வென்றது, சற்று தாமதமாக. 400 ஆண்டுகளுக்குப் பிறகு 17.02.2000 அன்று அவர் எரித்துக்கொல்லப்பட்ட அதே இடத்தில, அவருக்கு சிலை வைக்கப்பட்டது. அவரைக் கொன்றதற்காக கத்தோலிக்கத் திருச்சபை மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவருக்கு மத நம்பிக்கைகளே எதிரியானது.

கடவுள் மறுப்பாளர் சார்லஸ் பிராட்லாஃப் (Charles Bradlaugh) (கி.பி. 1833 – 1891) 1880ம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். அதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அவருடைய பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து மூன்று முறை அவர் தேர்தலில் வெற்றி பெற்றார், ஆனால் மூன்று முறையும் அவர் கடவுள் பெயரால் உறுதிமொழி எடுக்க மறுத்துவிட்டார். கடைசியாக 1886ம் ஆண்டு கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்கத் தேவையில்லை என்று சட்டம் திருத்தப்பட்டது, அன்று ஒரு கடவுள் மறுப்பாளர் பாராளுமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்தார்.

இரட்டைக் குவளை

மதத்தைத் தொட்ட கையோடு சாதியையும் தொட்டுப் பார்த்து விடலாம். இரட்டைக் குவளை என்ற வார்த்தையை நகரத்து மக்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இரட்டைக்குவளை என்றால், கீழ் சாதியினர் என்று கருதப்படும் மக்களுக்கும், மேல் சாதி என்று தங்களைக் கூறிக்கொண்ட கீழ்த்தரமான மக்களுக்கும், தேநீர் விடுதிகளிலும் (Tea Shop), உணவு விடுதிகளிலும் (Hotel) தேநீர் அருந்தவும், தண்ணீர் அருந்தவும் இரண்டு வெவ்வேறு குவளைகள் வைத்திருப்பார்கள், அதைத்தான் இரட்டைக் குவளை என்று சொல்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவரையே கீழ் சாதி என்று சொல்லும் நிலை வந்து விட்டதென்றால், இந்த சாதிக்கொடுமைகள் தீரும் நாள் விரைவில் வருமா என்ற சந்தேகம் வருகிறது. தமிழ்நாட்டில் இன்னும் இரட்டைக் குவளை பல ஊர்களில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் பெயரளவில் தூக்கி எறிவதற்கு ஆயத்தமான நமக்கு உண்மையில் சாதியைத் தூக்கி எறிய மனமில்லை என்பதன் வெளிப்பாடுதான் இன்னும் இரட்டைக் குவளகள் தொடர்வதற்குக் காரணம். இரண்டு என்ற வார்த்தைகளை ஒட்டி இவ்வளவு பிரச்சனைகளா?

ஒளவையாரும் அறிவியலும் சொன்ன இரண்டு சாதிகள்

ஒளவையார் காலத்தில் இரட்டைக்குவளை முறை எல்லாம் இருந்ததா என்று தெரியவில்லை, ஆனால் அவர் இரண்டு சாதிகளைக் குறிப்பிடுகிறார். ஒளவையார் சொல்லும் சாதிகள் என்னவென்று பார்ப்போம்.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி”

ஒளவையார் சொன்னபடி, மனதார கொடுப்பவர்கள் ஒரு சாதி, எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே கொடுப்பதற்கு மனமில்லாதவன் கீழ் சாதி அவ்வளவுதான். 

ஒளவையார் மனிதரின் குணநலத்தை வைத்து இரண்டு சாதி என்று சொன்னார். அறிவியல், தாவரங்கள் உட்பட உயிருள்ள எல்லாவற்றையும் இரண்டு விதமாக பிரித்தது. ஒன்று சைட்டோபிளாசம் (Cytoplasm) மற்றொன்று மைட்டோகாண்ட்ரியா (Mitochondria). உயிரினத்தின் செல்லில் சைட்டோபிளாசம் இருந்தால் அது தாவரம், மைட்டோகாண்ட்ரியா இருந்தால் அது மிருகம் அவ்வளவுதான். அறிவியலின் பார்வை ஒளவையாரையும் தாண்டி விசாலமானது.

தமிழை அழிக்க இரண்டு வாதங்கள்

சங்ககாலத்தில், நம் புலவர் பெருமக்கள் எழுதிய ஓலைச்சுவடிகளை எல்லாம் ஒரு கூட்டம் திட்டமிட்டு, இரண்டு வாதங்கள் என்ற பெயரால் அழித்தொழித்தது. தமிழே தெரியாத ஒரு சதிகாரக் கூட்டம், புலவர்களின் ஓலைச்சுவடிகளை தரம் பரிசோதிக்கிறோம் என்ற பெயரில் இரண்டு கேவலமான நடைமுறைகளை அறிமுகப்படுத்தின. தமிழை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசுக்கு முன்னோடிகளான அந்த கயவர்கள் வகுத்த இரண்டு வாதங்களுக்கு அனல்வாதம், புனல்வாதம் என்று பெயர்.

10eb0-023_kulachirai-nayanar-1024x564

புலவர்களின் ஓலைச்சுவடிகளை நீர்ச்சுழியில் போட்டு, நீர்ச்சுழியில் தப்பி வரும் ஓலைகளில் இருக்கும் பாடலை மட்டும் நல்ல தரமுள்ள தமிழ் பாடலாக ஏற்றுக்கொண்டார்கள். இது புனல் வாதம். இன்னொன்று, ஓலைகளை மொத்தமாக தீயிலிட்டுக் கொளுத்தி விடுவது, தீயில் மிஞ்சும் ஓலைகளை மட்டும் நல்ல தமிழ் கொண்ட ஓலைகள் என்று சொன்னார்கள். இதற்கு அனல்வாதம் என்று பெயர். தமிழை அழிப்பதற்கு காலந்தோறும் நடக்கும் முயற்சிகளின் சங்ககால வடிவங்களுக்கு அனல்வாதம், புனல்வாதம் என்று இரண்டு பெயர்கள்.

அர்த்தம்

அர்த்தம் என்ற சொல்லுக்கு சரிபாதி மற்றும் இரண்டு என்று பொருள். ஒன்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறோம் என்றால் அதன் ஆதி, அந்தம் இரண்டையும் முழுமையாய்ப் புரிந்து கொள்கிறோம் என்று பொருள். அர்த்தம் விளங்கியதா என்று கேட்டால், ஒன்றைப் பற்றி நாம் துவக்கம் முதல், முடிவு வரை முழுவதுமாக புரிந்து கொண்டோமா என்று கேள்வி எழுப்புவதாக பொருள். “அறிதல்” என்ற சொல்லுக்கும் முழுமையாகப் புரிந்து கொள்ளுதல் என்றுதான் அர்த்தம்.

அர்த்த என்ற சொல்லில் இருந்துதான் அறுந்த, அறுத்த என்ற சொற்கள்  பிறக்கின்றன. நூல் அறுந்தது என்றாலே இரண்டாக அறுந்து விட்டது என்றுதான் பொருள். அதுபோல பழத்தை அறுத்தான் என்றால், இரண்டாகப் பிரித்தான் என்று பொருள். இவையெல்லாம் இரண்டு என்ற வார்த்தை இல்லாமலேயே  மறைமுகமாக இரண்டைக் குறிக்கும் சொற்கள்.

அர்த்தநாரீசுவரர் என்ற வார்த்தையில் “அர்த்த” என்ற வார்த்தைக்கு சரிபாதி என்று பொருள். உற்று நோக்கினால், ஆணில் சரிபாதி பெண் என்பதை உருவகப்படுத்தவே அர்த்தநாரீசுவரர் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது என்று விளங்கும். இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் உண்மை இருப்பதாகத் தோன்றுகிறது. ஆணின் மரபணுவில் (Gene) XY என்ற என்ற இரண்டு குரோமசோம்கள் (Chromosome) இருக்கிறது. X என்பது பொதுவாக பெண் குரோமசோம் என்று சொல்லப்படுகிறது. Y என்பது ஆண்களுக்கான குரோமசோம் என்று சொல்லப்படுகிறது. ஆக ஆணின் மரபணுவில் பெண்மை ஒளிந்திருக்கிறது.  ஆனால் பெண்ணின் மரபணுவில் XX என்று இரண்டுமே பெண் குரோமசோம்கள். ஆணின் மரபணுவுக்குள் பெண் குரோமசோம்  இருக்கிறது என்ற அறிவியல் உண்மையை உணர்த்தவே அர்த்தநாரீசுவரர் உருவாக்கப்பட்டார் என்று அறிவியல் உலகத்தில் ஒரு குண்டைத் தூக்கிப் போட நான் ஆயத்தமாக இல்லை. இருந்தாலும், அர்த்தநாரீசுவரர் என்ற வார்த்தையில், அர்த்த என்னும் சொல்லுக்கும், ஆணின் குரோமசோமுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாகவே தோன்றுகிறது. எது எப்படியோ, அர்த்தநாரீசுவரருக்கும், இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது உண்மை.

சங்கு

சங்குக்கும் இரண்டுக்கும் என்ன தொடர்பு. சங்குகளில் வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு என்று இரண்டு உண்டு. ஆனால் அது தவிர சங்குக்கும் இரண்டுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் நம் வாழ்க்கைக்கும் சங்குக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, குறிப்பாக இரண்டு முறை. ஒன்று பிறப்பில், மற்றொன்று இறப்பில். பிறக்கும்போது நமக்கு சங்கில் பால் ஊற்றப்படுகிறது. இறந்த பின்பு சங்கு ஊதப்படுகிறது. இரண்டும் வேறு வேறு சங்குகள்தான். ஆனால் அவைதான் பிறப்பு, இறப்பு என்ற இரண்டு நிலைகளிலும் நம்முடன் நெருங்கிய தொடர்புடையவை. முதல் சங்கில் பால் ஊற்றுப்படுகிறது. கடைசியில் பால் ஊற்றிய பிறகு சங்கு ஊதப்படுகிறது. முதல் பால் உயிரூட்டும், கடைசிப்பால் உயிரை எடுக்கும். இரண்டுக்கும் சாட்சி சங்குதான்.

அக்டோபர் இரண்டு

அக்டோபர் 2 என்ற தேதி, ஒரு மாபெரும் தலைவரின் பிறப்பையும், இன்னொரு பெருந்தலைவரின் இறப்பையும் குறிக்கிறது. அக்டோபர் 2, காந்தியடிகளின் பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்ததே. காலா காந்தி என்று அழைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், அதே அக்டோபர் 2ம் தேதிதான் காலமானார். வாழ்நாள் முழுவதும் காந்தியின் கொள்கைகளைக் கண்போல் காத்து வாழ்ந்தவரின் உயிர் காந்தியின் மடியிலே போனது என்பதை நமக்கு உணர்த்துகிறது அக்டோபர் 2.

சிலேடை

ஒரு வாக்கியத்தில் இரண்டு பொருள்படும்படி கூறுவது சிலேடை அணி என்பார்கள். சில சமயங்களில் பல பொருள் தரும்படியும் அமைவதுண்டு. பெரும்பாலும் இரண்டு பொருள் தருவதால் இது இரட்டுற மொழிதல் என்றும் அழைக்கப்படுகிறது. இரட்டை அர்த்த வசனங்கள் கூட சிலேடை அணியைத்தான் குறிக்கின்றன. சிலேடைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்.

ஒரு மடத்தில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் பேசுவதற்கு ஆயத்தமாக இருந்தார். கடைமடை என்ற ஊரைச்சேர்ந்த ஒருவர் மட்டும் தாமதமாக வந்து சேர்ந்தார், அவரை நேரடியாக திட்ட முடியாது, அதனால் மறைமுகமாக திட்டலாம் என்று முடிவெடுத்தார் தலைவர், சிலேடையாக சொன்னார், “வாருங்கள் கடைமடையரே”. இதற்கு “கடைசியில் வரும் மடப்பயலே” என்றும் பொருள் கொள்ளலாம், “கடைமடை ஊரைச்சேர்ந்தவரே வாருங்கள்” என்றும் பொருள் கொள்ளலாம்.

கடைமடையரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவரும் தலைவரை மறைமுகமாக ஏதேனும் சொல்லியே ஆக வேண்டுமென்று முடிவு கட்டினார். அவரும் சிலேடையாக “வணக்கம் மடத்தலைவரே” என்று சொல்லி அமர்ந்தார். இதற்கு “மடத்தின் தலைவரே” என்றும் அர்த்தம் வரும். “முட்டாள்களின் தலைவரே” என்றும் பொருள் வரும். இரண்டு பொருள்படி பேசுவதென்பது தொன்றுதொட்டு நம்மைப் பின்தொடரும் வழக்கமென்றே நினைக்கிறேன்.

ஈருடல் ஓருயிர்

ஈருடல் ஓருயிர் என்பது நாம் பெரும்பாலும் கணவன் மனைவிக்கு அடைமொழியாக பயன்படுத்துகிறோம். அது சரியென்று தோன்றவில்லை. கணவன் மனைவிக்கு ஓருடல் ஈருயிர் என்ற சொல்லாடல் பொருத்தமாக இருக்கும். ஈருடல் ஓருயிர் என்ற வார்த்தை நம்முடைய உடலையே குறிக்கின்ற வார்த்தைதான். பின்னர் ஏன் ஈருடல் என்ற வார்த்தை? அறிவியல் பூர்வமாக நமக்கு இரண்டு உடல்கள் இருக்கின்றன. நாம் கண்ணால் காணும் பரு உடல் (Physical Body) ஒன்று, சூட்சும உடல் (Astral Body) ஒன்று. சூட்சும உடலை நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாது. அதை உணரும் தருணம் வரும்போது நம்மை பேயோ, பூதமோ அமுக்குவது போல் உணர்கிறோம். அதனால் அதற்கு அமுக்குவான் என்று நமது மக்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். சூட்சும உடலை நாம் உணரும்போது ஏன் அமுக்குவது போன்ற உணர்வு?

சூட்சும உடலும், பரு உடலும் எப்போதும் கலந்தே இருக்கும். சில நேரங்களில் நாம் மிகவும் களைப்பாக உறங்கும்போது, சூட்சும உடல் புத்துணர்வடைந்து எழுந்துகொள்ள முயற்சிக்கும், ஆனால் நமது பரு உடல் களைப்பால் உறக்க நிலையில் இருக்கும். பரு உடலின் உதவி இல்லாமல் சூட்சும உடலால் எழுந்துகொள்ள முடியாது, அதனால்தான் சூட்சும உடலை உணரும் தருணம் நம்மை யாரோ பிடித்து அமுக்குவது போன்று உணர்கிறோம். இதற்கு ஆங்கிலத்தில் Sleep Paralysis என்று பெயர்.

நமது பரு உடலே இரண்டு பாகமாக பிரிந்துதான் கிடக்கிறது. உடலை இரண்டாகப் பிரித்தால், எல்லாம் சமமாக இருக்கும், இதயம் போன்ற சில உறுப்புகளைத் தவிர. நாம் சூரியனைப் பார்த்து நின்று கொண்டு நமது உடலை இரண்டு பாகமாக கற்பனை செய்தால் வலது பக்க உடல் தெற்கு திசையில் இருக்கும். இடது பக்க உடல் வடக்கு திசையில் இருக்கும். தெற்கு திசையில் இருக்கும் உடல் சூரிய மண்டலம் என்றும், வடக்கு திசையில் இருக்கும் உடல் சந்திர மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது. தெற்கு திசையில் உள்ள உடலில்தான் உயிர் இருக்கிறது. அதனால்தான் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று சொல்கிறோம்.

இரண்டு என்ற எண் மற்றும் வார்த்தைகள் தொடர்பான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இருப்பினும் கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன். இதன் தொடர்ச்சியாக, மூன்று தொடர்பான தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட இருக்கிறேன். எண்களுக்குள்ளும், எழுத்துக்களுக்குள்ளும் மேலும் பயணிப்போம்.

உதவிய நூல்களும் இணையதளங்களும்

 1. https://en.wikipedia.org/wiki/Giordano_Bruno
 2. https://en.wikipedia.org/wiki/Charles_Bradlaugh
 3. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
 4. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81
 5. https://en.wikipedia.org/wiki/Sleep_paralysis

2 Responses

 1. மகிழ்ச்சி.. சரவணபவன் சென்று வயிறு முட்ட உண்ட திருப்தி.. இரண்டு என்ற எண்ணை வெறும் இரண்டாகவே பார்த்து பழகிய எதது மூளைக்கு இப்பதிவு பல புதிய பரிமாணங்களை கொடுத்துள்ளது. மிகவும் எதிர்பார்த்த இரண்டாவது பாகத்தின் தன்மை முற்றிலும் புதிய கோணத்தில் அமைந்ததில் முழு திருப்தி.
  ஆராய்ச்சி கட்டுரையில்
  தேடிக்கொணர்ந்த செய்திகளை சுவைபட தொகுத்து வழங்கிய விதம் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியது.
  ஈர்தலில் தொடங்கி, ஆடு, திருவள்ளுவர், கண்மூடித்தனமான மத நம்பிக்கையாளர்கள், ஔவையார், அர்த்தநாரீசுவரர், அறிவியல், அரசியல், பரு உடல், சூட்சும உடல் என்று அனைத்து தரப்பினரையும் வம்பிக்கிழுத்ததில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேர்த்தியான, ஆழமான மெனக்கெடல் அப்பட்டமாக தெரிகிறது. நிச்சயமாக முந்தைய பதிவுகளில் இருந்து மேம்பட்ட பதிவு.
  பதிவில் குறிப்பிட்டது போல் எண்ணற்ற ஓலைச்சுவடிகளை நாம் இழந்தது வரலாற்று பிழையே. அர்த்தநாரீசுவரின் உள்ளே குரோமோசோம்களை ஆராய்ந்த விதம் வியப்பளிக்கிறது. ஒரு தேர்ந்த ஆன்மீகவாதியின் தேடல் போல் தோன்றியது. ஆன்மீகம் என்ற பெயரில் பல மூடநம்பிக்கையாளர்கள் இருந்ததை வரலாறு நிரூபித்திருக்கிறது. எனினும் அவர்களின் கண்மூடித்தனமான செயல்களை ஆன்மீகம் என்று குறிப்பட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் ஆன்மீகத்திற்கும் இவர்களுக்கும் காத்தூரம் என்பது தாங்கள் அறியாததல்ல..
  மேலும் பதிவி உணர்த்துவது மேம்போக்கான ஆய்வு கட்டுரையாக இருந்து விடாமல் அதில் பலதரப்பட்ட தளங்களை ஆய்வு செய்யும் பதிவாகவும் அமைந்ததில்தான் பதிவு முழுமை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.
  அந்த ஆர்வத்திற்க்கும், உழைப்பிற்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு கடவுள் மறுப்பாளரை இப்படி விசாலமான பார்வை கொண்டவராக பார்ப்பது அரிது. இந்த கடவுள் மறுப்பாளரை சதா தன் பெயரை கூறவைத்த அந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கும் மிக்க நன்றி!!!!!!!!!!

  1. கருத்துக்களுக்கு மிக்க நன்றி குமார். தாங்கள் குறிப்பிட்டது போல, ஆன்மீகத்தை மொத்தமாக மூடநம்பிக்கை என்று புறந்தள்ளி விட முடியாது, குறிப்பாக தமிழத்தில் தலைப்பட்ட ஆன்மிகம் என்பது முழுவதும் அறிவியல் பார்வை கொண்டது. உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் மூடநம்பிக்கை என்ற வார்த்தையை மூடப்பட்ட நம்பிக்கைகள் என்று நோக்கினால், அவற்றுக்குள் புதைந்து கிடைக்கும் அறிவியலைக் கணடறிவது நமது கடமையும் கூட. கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index