அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து
உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்தே எல்லோருடைய காதிலும் அறம் என்ற வார்த்தை ஆற்று வெள்ளம் போல பாய்ந்திருக்கும், அந்த அறம்தான் திருக்குறளின் மையம். அறம் என்ற வார்த்தையை நாம் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. நாம் பயன்படுத்தும் சொல்லிலிருந்து, அறம் என்ற சொல்லுக்குப் பொருள் கூற முனைந்தால், நீதி என்று தோராயமாக சொல்லலாம். ஆனால் அறம் நீதியை விட மிகவும் மேம்பட்ட சொல். நீதி தமிழ் சொல் கிடையாது. ஆகையால் அறம் என்ற சொல்லுக்குப் பிற மொழியில் விடை தேடுவதை நிறுத்தி வள்ளுவரிடம் சரணடைவோம்.
இரண்டு வரிக் குறளில் அறத்தை விளக்கி விட முடியுமா? என்றால் இல்லை. ஆனால் வள்ளுவர் ஒரே வரியில் விடை தருகிறார். அறம் என்ற சொல்லுக்கு, அதை விட உலகில் வேறு எவரும் விளக்கம் தர முடியாது. அறம் என்றால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்”. இந்த ஒற்றை வரியில் அறத்தின் ஒட்டுமொத்த விளக்கமும் வந்து விடுகிறது. குற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. குற்றம் செய்யப் பயப்படுதல் என்பது வேறு, குற்றம் செய்ய சந்தர்ப்பம் வரும்போதும் அதைத் தவிர்த்தல் என்பது வேறு. நாம் வாழும் வாழ்க்கைக்கு நம் மனம் மட்டுமே சாட்சி. உலகில் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நம் மனதுக்குத் தெரியும் நாம் குற்றவாளியா இல்லையா என்று. மனசாட்சியை விட பெரிய சாட்சி உலகில் இல்லை. ஆகையால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதே அறம். மனதாரக் குற்றம் செய்யாமல் வாழும் வாழ்க்கைதான் அறம்.
வள்ளுவர் மனோதத்துவ நிபுணரோ என்ற சந்தேகம் திருக்குறள் படிக்கும் அனைவருக்கும் வரும். அதை நிரூபிக்க “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்று மனதை சாட்சியாக வைத்த அடுத்தக் குறளில் மனதில் வரும் மாசுகள் எவை என்று பட்டியலிடுகிறார். அறத்தின் வழி வாழ, அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (கோபம்), இன்னாச்சொல் (கடுஞ்சொற்கள்) ஆகிய நான்கையும் ஒதுக்க வேண்டும். எவை நம் மனதில் புகுந்தால் அறம் தவறுமோ, அந்த நான்கையும், அறம் எது என்று விளக்கியபின் பட்டியலிட்டது ஒரு கைதேர்ந்த மனோதத்துவ நிபுணர் மட்டுமே செய்யக்கூடிய செயல். அறம் என்ற சொல்லுக்கு மனதை சாட்சியாகத் தந்த நமது பாட்டையா வள்ளுவரின் திருக்குறளை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். சில குறள்களை எடுத்துக்கொண்டு அவற்றின் பொருளை மட்டும் பார்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. நமது வாழ்வின் நெறிமுறைகளுக்கு வள்ளுவரின் விடை 1330 குறள்களிலும் பரவிக்கிடக்கிறது. நாம் தேடும் தகவலுக்கு திருக்குறளின் பல அதிகாரங்களைத் தொகுத்து விடைகாண வேண்டியது நமது கடமை. திருக்குறள் என்னும் கடலுக்குள் நுழைவோம் வாருங்கள்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (குறள்: 34)
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)
கடவுளில் ஏன் ஒருமை
திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து, ஆனால் கடவுள் என்ற வார்த்தை, கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பைத் தவிர திருக்குறளில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் வேறு எந்த ஒரு அதிகாரத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் அந்தத் தலைப்பில் வரும் வார்த்தை அந்த அதிகாரத்தின் கீழ் வரும் குறள்களில் கட்டாயம் பயன்படுத்தப்பட்டிருக்கும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தைத் தவிர. கடவுள் என்ற வார்த்தையை ஏன் வள்ளுவர் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை? காரணம் என்னவென்றால், பல உருவங்களில் வணங்கினாலும் கடவுள் ஒருவன்தான் என்பது தமிழர்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வலியுறுத்தவே கடவுள் என்ற பதம் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தெய்வம் என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. யார் தெய்வம் என்பதற்கும் வள்ளுவர் விடை தருகிறார், அதையும் நாம் வள்ளுவர் வாய்மொழியிலே கேட்போம்.
கடவுள் வாழ்த்து என்று தலைப்பிலே ஒரு செய்தியை சொல்லும் வள்ளுவர், கடவுள் வாழ்த்துக் குறள்களில் ஒரு குறளில் கூடக் கடவுளின் பெயரைக் குறிப்பிடவில்லை. கடவுளின் பெயர்கள் எல்லாம் உவமையாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. பெயர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, எல்லா உவமைகளும் ஒருமையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்” என்ற குறளில் தீமை செய்தவரைக் கூட அவர், இவர் என்று மரியாதையாகக் குறிப்பிடும் வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறப்படும் உவமைகள் அனைத்தையும் ஏன் ஒருமையில் பயன்படுத்துகிறார்? வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான் என்று அனைத்து உவமைகளும் ஒருமையில்தான் கூறப்பட்டிருக்கிறது.
கடவுளைப் பற்றிய உவமைகள் ஒருமையில் கூறப்பட்டதும் கடவுள் ஒருவன் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான். ஒருவேளை மரியாதைக்காக “ர்” விகுதி சேர்த்து, அது பன்மையாகப் பார்க்கப்பட்டு, பல கடவுள்கள் உண்டு என்று திரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் கடவுளின் உவமைகள் அனைத்தும் ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி, கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெயர் ஒன்றுமே இல்லையென்பதால், திருக்குறளில் எங்குமே கடவுள் பெயர் இல்லையென்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். திருக்குறளில் ஒரே ஒரு குறளில் மட்டும் இந்திரன் என்ற கடவுள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறள் 25ல் இந்திரன் என்ற பெயர் வருகிறது. இந்திரன் என்ற சொல், கடவுளைக் குறிக்கவில்லை, இந்திரன் என்பதற்கு மேகம் என்ற பொருளும் உண்டு என்று வாதாடும் உரையாசிரியர்களும் உண்டு. ஆனால், வள்ளுவர் “விசும்புளார் கோமான்” என்று தெளிவாகவேக் குறிப்பிடுகிறார். ஆகையால் வள்ளுவர் இந்திரன் என்று குறிப்பிடுவது கடவுளின் பெயர்தான். இறைவனை அங்கங்கே திட்டினாலும் வள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று சொல்லிவிட முடியாது.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” (குறள்:2)
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.” (குறள்: 3)
“வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள்: 4)
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.” (குறள்: 6)
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள்:
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” (குறள்: 9)
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.” (குறள்: 25)
கடவுள் மறுப்பாளர்கள்
கடவுள் மறுப்பாளர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்களா? என்ற கேள்விக்கு வள்ளுவர் கடவுள் வாழ்த்திலேயே விடை கூறியிருக்கிறார் என்றால் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், பத்தில் ஐந்து குறள் கடவுள் மறுப்பாளர்களைப் பற்றிப் பேசுகிறதென்றால் நம்ப முடிகிறதா? கடவுள் வாழ்த்தில், கடவுள் மறுப்பாளர்களுக்கும் 50 சதவிகித இட ஒதுக்கீடு அளித்திருக்கும் வள்ளுவரின் தாராள குணத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டியது போதும், விடையைச் சொல்லுங்கள் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோபப்படுவது புரிகிறது.
கடவுள் வாழ்த்தில் 5 குறள்கள், “தொழாஅர்”, “சேர்ந்தார்க் கல்லால்” “வணங்காத் தலை”, “அடி சேராதார்” என்று கடவுளின் காலடிகளைத் தொழாதவர்களை எச்சரிக்கும் விதமாக எதிர்மறையாக அமைக்கப்பட்டுள்ளது. தெய்வத்தின் காலடிகளைத் தொழ வேண்டும் என்று நேரிடையாக செய்தியைச் சொல்லாமல், எதிர்மறையாக “தொழா விட்டால் என்ன பயன்” என்று சொல்லும்போதே, கடவுளைத் தொழாதவர்கள் அன்றும் வாழ்ந்தார்கள் என்று நிரூபணமாகிறதல்லவா. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல வள்ளுவர் கடவுள் மறுப்பாளர் இல்லை, ஆனால் கடவுள் மறுப்பாளர்களையும் அணைத்துக்கொள்ளும் சமதளப் பார்வை கொண்டவர் என்பது விளங்கும்.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” (குறள்: 2)
“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள்: 7)
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.” (குறள்: 8)
“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” (குறள்: 9)
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.” (குறள்: 10)
யார் தெய்வம்?
கடவுள் ஒருவன்தான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர், தெய்வம் என்ற வார்த்தையை மொத்தம் 6 குறள்களில் கையாண்டிருக்கிறார். ஆகையால் கடவுள் என்ற வார்த்தையைப் போலல்லாமல் தெய்வம் என்ற வார்த்தையைப் பல இடங்களில் கையாண்டதிலிருந்து, தெய்வங்களில் பன்மையை ஏற்றுக் கொள்கிறார் என்ற முடிவுக்கு வரலாம். தெய்வம் என்ற வார்த்தை 6 இடங்களில் இடம்பெற்றாலும், யார் தெய்வம் என்ற கேள்விக்கு இரண்டு குறள்களில் தெளிவாக விடை கூறப்பட்டிருக்கிறது.
ஐம்பதாவது குறள் யார் தெய்வம் என்று தெளிவாக வரையறுக்கிறது. அறம் பிறழாது, மண்ணில் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் தெய்வமாக மதிக்கப்படுவார்கள் என்கிறது அந்தக் குறள். அது வள்ளுவரின் குரல். அதன்படி ஆராய்ந்தால் தெய்வம் என்பது நமது முன்னோர்கள்தான். முன்னோர் வழிபாட்டை வலியுறுத்தும் இடமாகவே இந்தக் குறள் அமைக்கப்பட்டிருக்கிறது.
குறள் 702, யார் தெய்வம் என்று சுட்டிக்காட்டுகிறது. மற்றொருவர் மனதின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலுடைய ஒருவர் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்படுவார் என்கிறார் வள்ளுவர். மனதை அறிந்து கொள்ளுதல் என்பது தவத்தின் பலனால் வரும் அறிவு. சித்தர் நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர்களை நாம் தெய்வமாக வழிபட்டிருக்கிறோம் என்பதற்கு திருக்குறளே சாட்சி.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.” (குறள்: 702)
உலகிலேயே பெரியவர் யார்
பெண்களுக்காகக் குரல் கொடுத்த முதல் மனிதர் என்ற பெருமையை நாம் வள்ளுவருக்குத் தயங்காமல் கொடுக்கலாம். பெண்ணின் பெருமையைக் கூறும் குறள்கள் பல இருந்தாலும், குறிப்பாக இரண்டு குறள்களை மட்டும் விளக்குவதற்கு விழைகிறேன். அந்த இரண்டு குறள்களிலுமே “பெருந்தக்க” என்பது நாம் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய சொல். “பெருந்தக்க” என்ற சொல்லை அந்த இரண்டு குறள்களைத் தவிர வள்ளுவர் வேறு எங்கும் பயன்படுத்தவில்லை. பெருந்தக்க என்ற சொல்லுக்கு உலகிலேயே பெரியது என்று பொருள். இரண்டு குறள்களிலுமே, உலகிலேயே பெரியவள் என்று பெண்ணைத்தான் குறிப்பிடுகிறார். எல்லாப் பெண்களையும் பெரியவர்கள் என்று சொல்லவில்லை, அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார். குறள் 54, கற்புள்ளப் பெண்களைப் போல உலகில் பெரியது எதுவும் இல்லை என்று பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. குறித்துக் கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் “கற்பென்னும் திண்மை” என்ற வார்த்தை. திண்மை என்றால் மனவுறுதி என்று அர்த்தம். நாம் தற்காலத்தில் கற்பு என்ற சொல்லை மனவுறுதி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. மனவுறுதி கொண்ட பெண்ணை விட உலகில் எதுவும் பெரிதில்லை என்று பெண்மையை உயர்த்தியது வள்ளுவர்தான்.
பெருந்தக்க என்ற சொல் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது இடம் குறள் 1137. குறள் 54ல் கற்பு என்னும் கட்டுப்பாடு விதித்தது போல், குறள் 1137ல் மடல் ஏறக்கூடாது என்ற கட்டுப்பாடு. அது என்ன மடல்? நமக்கு மடல் என்றால் கடிதம் என்றுதான் அர்த்தம் தெரியும். ஆனால் மடல் என்றால் கடிதம் என்று அர்த்தமல்ல. ஒருதலையாகக் காதலிக்கும் ஒருவர், தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி விடும் மிரட்டல்தான் மடலேறுவது. தன்மீது சாம்பலைப் பூசிக்கொண்டு, எருக்கம்பூவைச் சூடி, காதலித்தவரின் பெயரையோ, படத்தையோ வரைந்து கழுத்தில் மாட்டிக்கொண்டு, குதிரை போல் செய்யப்பட்ட பனைமட்டையில் அமர்ந்து ஊரை வலம் வருவதற்கு மடலேறுதல் அல்லது மடலூர்தல் என்று பெயர். பொதுவாக பெண்கள் மடலேறுவதில்லை. மடலேறுதல் என்பது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அது ஒருதலைக் காதலைச் சொல்லும் கைக்கிளை அல்லது பெருந்திணையில் வரும். மடலேறுதல் ஐந்திணை ஒழுக்கத்தில் சேராததால், மடலேறாதப் பெண்களை உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.” (குறள்:54)
“கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்” (குறள்:1137)
வள்ளுவர் கூறும் அறிவு
அறிவுக்கு வள்ளுவரைப் போன்று உலகில் யாரும் விளக்கம் கூறியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அறிவு என்ற சொல் திருக்குறளில் 25 முறைக்கு மேல் கையாளப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறும் அறிவைப் பற்றி அறிவோம். முதலில் நாம் காணும் பொருட்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதைப் பற்றி குறள் 355ல் குறிப்பிடுகிறார். அது உலகில் நாம் காணும் பொருட்கள் பற்றிய அறிவியல் பற்றி பேசும் அறிவு. குறள் 423, “யார் யார் வாய்க் கேட்பினும்” என்று ஒருவர் சொல்லிய வார்த்தையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் உளவியல் பற்றிய அறிவு. வள்ளுவர் “யார்” என்ற சொல்லை ஒருமுறை சொல்லியிருந்தால் அந்த குறளின் ஆழம் புரிந்திருக்காது. மிகக் கவனமாக இரண்டு முறை “யார்” என்ற சொல்லை உபயோகப்படுத்தியிருக்கிறார். நண்பர், பகைவர் என்று செய்தியைச் சொன்னது யாராக இருப்பினும் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்று பகுத்தறிவின் உச்சத்தைத் தொடுகிறது இந்த இரண்டு குறள்களும். அறிவியல், உளவியல் என்று இரண்டு பிரிவின் ஆழத்தைத் தொடும் குறள்கள் அவை.
மேலும் 424ம் குறளில் இன்னும் மிக நுட்பமாக, எது அறிவு என்று சொல்லப்படுகிறது. ஒருவர் கூறும் நுட்பமான தகல்வல்களைக் கூட தெளிவாகப் புரிந்து கொள்வதும், தான் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு எளிமையாகப் புரிய வைப்பதும் அறிவு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆசிரியர், விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர் என்று அனைவருக்கும் பொருத்தமான செய்தி இரண்டு வரிகளில் இதைவிடத் தெளிவாக வள்ளுவரைத் தவிர யாரால் சொல்ல முடியும்.
அறிவைப் பற்றி இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்யும் வள்ளுவர், அறிவுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அறிவின் வளர்ச்சியாக இருந்தாலும் அது அழிவுக்கும் வழிவகுக்கக் கூடுமென்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் எவ்வாறு கணித்தார் என்பது ஆச்சர்யம்தான். அணுகுண்டை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தது மிகப்பெரிய அறிவுதான், ஆனால் ஹிரோஷிமா, நாகசாகியில் பல இலட்சம் கொல்வதற்கு உதவியபோது அந்த அறிவால் என்ன பயன்? அறிவுக்குள் மறைந்து கிடைக்கும் அழிவைக் கணக்கில் கொண்டு, நல்லவற்றுக்குப் பயன்படுவது மட்டுமே அறிவு என்று எச்சரிக்கை செய்யும் குறள் 422.
வெறும் எச்சரிக்கையோடு விட்டிருந்தால் பரவாயில்லை. வேறொரு குறளில் அறிவினால் என்ன பயன் என்று சற்றுக் கடுமையாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அறிவுக்கு இவ்வளவு முதன்மைத்துவம் அளிக்கும் வள்ளுவர், “அறிவினால் ஆகுவதுண்டோ” என்று கோபப்படும்போது, நாம் அந்தக் கோபத்தின் காரணத்தை அவரிடம் கேட்டே ஆக வேண்டும். இதற்கான விளக்கம் குறள் 315ல் இருக்கிறது. இன்னொரு உயிர் படும் துன்பத்தை தன்னுடைய துன்பமாகக் கருதி வருந்தவில்லையென்றால் அறிவினால் என்ன பயன்? ஒரு சமுதாயம் எவ்வளவு அறிவு வளர்ச்சியை எட்டினாலும், அந்த அறிவினால் எந்த வித தீங்கும் நேராமல் இருக்க வேண்டும், மற்றவரின் துன்பங்களை தன்னுடைய துன்பமாக உணர்ந்து அவற்றைப் போக்க வேண்டும், இவை இல்லாத அறிவு அறிவல்ல என்பது வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிமுறை.
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள்: 355)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள்: 423)
“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.” (குறள்: 424)
“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.” (குறள்: 422)
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை” (குறள்:315)
ஆரிய எதிர்ப்பு
குறள் 30ல் அறத்தின் வழி வாழ்கிற அனைவருமே அந்தணர் என்று தனது சாதி எதிர்ப்பை வள்ளுவர் முதலில் பதிவு செய்கிறார் என்று கருதுகிறேன். வள்ளுவர் காலத்தில் வேளாண்மை செய்யும் உழவர்கள் நான்காம் வர்ணம் என்றும், சூத்திரன் என்றும் வர்ணாசிர தருமம் என்ற பெயரால் ஒதுக்கப்பட்டார்கள். வர்ணாசிரம தருமம் என்ற கருமத்தில், நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட உழவனை முதலில் இடத்தில் வைத்தார் வள்ளுவர். குறள் 47ல் இல்வாழ்க்கை வாழும் உழவன்தான் எல்லோரையும் விட தலை சிறந்தவன் என்று கூறுவதிலும் மறைந்திருப்பது ஆரிய சாதி எதிர்ப்புதான். 47வது குறளில் குறிப்பிடப்படும் முயல்வார் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. தவம் செய்ய முயல்வார், பதவியைக் கைப்பற்ற முயல்வார், பொருள் ஈட்ட முயல்வார் என்று, பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற மூன்று வர்ணத்தவரையும் குறிக்கும் ஒற்றைச்சொல் முயல்வார் என்ற சொல். அந்த மூன்று வர்ணத்தவரையும் விட இல்வாழ்க்கை வாழும் உழவனே உயர்ந்தவன் என்ற சாட்சிதான் குறள் 47.
இல்வாழ்க்கை வாழ்பவன்தான் உழவன் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா என்று நமக்கு சந்தேகம் வரலாம். அதற்கான விடையை வள்ளுவர் குறள் 81ல் கூறியிருக்கிறார். குறள் 81ல் இல்வாழ்க்கை வாழ்பவன் உழவன் என்று உறுதி செய்யும் வள்ளுவர், வர்ணாசிர தருமத்தை உடைத்தெறியும் இடம் பின்னால் வருகிறது. குறள் 972ல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லும் இடத்தில் வர்ணாசிர தருமம் குப்பையில் போடப்படுகிறது. அதன் பின்னரும் குறள் 1031ல் உழவனைச் சுற்றிதான் உலகமே சுழல்கிறதென்று, உழவனை உலகின் உச்சத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறார். மேலோட்டமாக உழவின் பெருமையைச் சொன்னாலும் இவை அனைத்திலும் இழையோடியிருப்பது ஆரிய எதிர்ப்புதான்.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.” (குறள்: 30)
“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.” (குறள்: 47)
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு .” (குறள்: 81)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள்: 972)
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.” (குறள்:1031)
வேள்வி எதிர்ப்பு
ஆரிய எதிர்ப்பு என்பது சில குறள்களோடு முடிந்துவிட வில்லை, அது வேள்வித்தீயாக இன்னும் பல குறள்களில் பற்றி எரியத்தான் செய்கிறது. தீயை வழிபடுவது ஆரியர்கள் மரபு. ஆரியர்கள் கொண்டு வந்ததுதான் வேள்வி என்னும் யாகம். வேள்வி என்பதே ஆரியக் குறியீடுதான். திருக்குறளில் இரண்டு இடங்களில் வேள்வி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்தான் வேள்வி என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது. குறள் 87 மற்றும் 88 இரண்டுமே வேள்வியை விட விருந்தோம்பல்தான் சிறந்தது என்று கூறும் குறள்கள். வீணாக வேள்வி வளர்ப்பதை விட்டுவிட்டு, விருந்தோம்பலில் ஈடுபடுங்கள், அதைவிட சிறந்த வேள்வி ஏதுமில்லை என்று உணர்த்தும் குறள்கள் அவை. வேள்வி எதிர்ப்பு என்பதும் ஆரிய எதிர்ப்புதான்.
வேள்வி குறித்த மற்றொரு குறள் “புலான்மறுத்தல்” என்ற அதிகாரத்தில் வருகிறது. புலால் உண்ணாமை தொடர்பான அதிகாரத்தில் வேள்வி தொடர்பான தகவல்கள் ஏன் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய வேண்டியது நமது கடமை. ரிக் வேதத்தில் ஆரியர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டது குறித்துப் பல பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ரிக் வேதத்தில் மாட்டுக்கறி, , ஆட்டுக்கறி, குதிரைக்கறி ஆகியவற்றை வேள்வித்தீயில் போட்டு உண்டதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன, அவற்றில் சில பாடல்கள் தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ரிக் வேதப் பாடல்கள் முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது, அவற்றின் இணையதளமும் பின்னிணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
ரிக் வேதம் மண்டலம் 4 / பாசுரம் 1 / பாடல் 6
ரிக் வேதம் மண்டலம் 10 / பாசுரம் 85 / பாடல் 13
ரிக் வேதம் மண்டலம் 10 / பாசுரம் 86 / பாடல் 14
ரிக் வேதம் மண்டலம் 10 / பாசுரம் 91 / பாடல் 14
மேலே கொடுக்கப்பட்டுள்ள ரிக் வேதப் பாடல்கள் எல்லாம் ஆரியர்கள் மாட்டுக்கறி உண்டது பற்றிய செய்திகளைத் தருகின்றன. ஆரியர்கள் மாட்டுக்கறி உண்டதைப் பற்றி வள்ளுவர் கூறியிருக்கிறாரா என்றால், ஆம் குறள் 259ல் கூறியிருக்கிறார். குறள் 259ல் வேட்டல் என்ற வார்த்தை வருகிறது. வேட்டல் என்றால் வேள்வி என்றுதான் அர்த்தம். அந்தக் குறளில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு வார்த்தை முதன்மையானது, அது அவிஸ் என்ற வார்த்தை. “அவிஸ் (ஹவிஸ்)” என்ற வார்த்தைக்கு யாகத்தில் பயன்படுத்தப்படும் பொருள் என்று அர்த்தம். யாகத்தில் எவற்றையெல்லாம் ஹவிஸாகப் பயன்படுத்தலாம் என்று ஆரியர்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். ஹவிஸ் பட்டியலில் 5 பொருட்கள் இருக்கின்றன.
1. பால்
2. நெய்
3. மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகள்
4. சோம பானம் அல்லது சாராயம்
5. செடி கொடிகள்
ஹவிஸ் என்பது இந்த ஐந்தில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் ஹவிஸாக பெரும்பாலும் பயன்படுத்தியது மாடுகள். மாட்டை வெட்டி வேள்வித்தீயில் போட்டுத் தின்று விடுவதுதான் வேள்வியின் முதன்மையான நோக்கம். இதன் பின்னணியில்தான் நாம் குறள் 259ஐ அணுக வேண்டும். ஆடுகள், மாடுகள் போன்ற உயிரனங்களைக் கொன்று வேள்வி செய்வதை எதிர்த்து எழுதப்பட்டதுதான் அந்தக் குறள். வேள்வி எதிப்பு என்பதன் வாயிலாக முன்வைக்கப்பட்டது ஆரிய எதிர்ப்பன்றி வேறில்லை.
“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.” (குறள்: 87)
“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.” (குறள்: 88)
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.” (குறள்: 259)
வள்ளுவரின் கோபம்
பொறையுடைமை என்று பொறுமைக்காகத் தனி அதிகாரமே அளித்த வள்ளுவர் எங்கெங்கெல்லாம் கோபப்படுகிறார் என்று நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அழுக்காறாமை அதிகாரத்தில் “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.” என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பித் தனது கோபத்தை மென்மையாகப் பதிவு செய்த வள்ளுவர், முதன்முதலில் குறள் 183ல்தான், புறங்கூறுவதை விட செத்துப்போ என்று தனது குரலை உயர்த்திக் கோபப்படுகிறார் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் குறள் 214ல், ஊரோடு ஒத்து வாழாதவன் செத்ததற்கு சமம் என்று மீண்டும் கோபப்படுவது தெரிகிறது.
வள்ளுவர் கோபப்படும் இடங்கள் நிறைய உண்டு. ஆனால் இரண்டு இடங்கள் சிறப்பானவை என்று கருதுகிறேன். ஒருவன் மிகவும் வறுமையில் வாடுகிறான். அவன் வறுமை நிலையைப் பார்த்த பிறகும், பெற்ற தாயே அவனை மாற்றானைப் பார்ப்பது போல் ஏளனமாகப் பார்ப்பதாக குறள் 1047 கூறுகிறது. வறுமையில் வாடுகிற மகனுக்கு ஈன்ற தாய் கூட துணை நிற்காமல் மாற்றானைப்போல் நோக்குவதன் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், அவனுக்கு வறுமை நிலை அறத்தின் வழியாக வரவில்லை. வறுமையே வந்தாலும் அதுவும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் வாதம். சான்றோன் எனக் கேட்டபோது பெற்றெடுத்தத் தருணத்தை விட மகிழும் தாய், மகன் அறம் தவறி விட்டான் என்றால் அவனை மாற்றான் போல நோக்குவாள் என்பது குறளின் பொருள்.
வள்ளுவர் எந்த இடத்தில் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்றால், சந்தேகமேயின்றி குறள் 1062ஐ சொல்லலாம். நான் முன்பே கூறியபடி, வள்ளுவர் கடவுளைத் திட்டும் இடமும் இதுதான். கடவுளின் மீது வள்ளுவருக்கு எவ்வளவு கடுமையான கோபமென்றால், கடவுளையே பிச்சைக்காரன் போல் அலைந்து திரி என்று சாபம் விடும் அளவுக்குக் கோபம். ஏன் இந்த மிதமிஞ்சிய கோபம்? இந்த உலகில் ஒருவனுக்குப் பிச்சையெடுத்துதான் உண்ண வேண்டுமென்ற நிலை வருமானால் கடவுளும் அவனோடு சேர்ந்து பிச்சைக்காரன் போல் அலைந்து திரியட்டும் என்று சாபம் கொடுக்கிறார் வள்ளுவர். தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னது இந்தக் குறளின் எதிரொலிதான் என்று நினைக்கிறேன். ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தால், வள்ளுவரின் சாபத்துக்கு ஆளான கடவுள், கட்டாயம் இன்று எங்கோ சாலைகளில்தான் அலைந்து திரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
“புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்”. (குறள்: 183)
“ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.” (குறள்: 214)
“அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.” (குறள்: 1047)
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.” (குறள்:1062)
சார்புநிலை
வள்ளுவரின் சிறப்புகளில் ஒன்று சார்புநிலை என்று தயங்காமல் சொல்லலாம். உதாரணமாக வாய்மை, அறிவு போன்றவை நம் வாழ்வின் சூழ்நிலைக்கேற்ப மாறும் என்ற வாதம்தான் சார்புநிலை. “ஏற்பது இகழ்ச்சி” என்று சொன்ன ஒளவை, அடுத்த வரியிலேயே “ஐயமிட்டு உண்” என்று பாடினார். பிச்சை எடுக்கும் ஒருவர் ஆத்திச்சூடி படிக்கும் வாய்ப்பு மிகக்குறைவு, ஆகையால் பிச்சை எடுக்காதே என்று நம்மை வலியுறுத்தும் ஒளவைப்பாட்டி, பிச்சையிட்ட பின் சாப்பிடு என்று கட்டளையும் இடுகிறாள். இரண்டு அறிவுரைகளுமே நமக்குதான் பொருந்துமே தவிர பிச்சையெடுக்கும் நபருக்கு அல்ல. அறம், வாய்மை, அறிவு அனைத்துமே சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது, இதற்கு சார்புநிலைத் தத்துவம் என்று பெயர். ஒளவையின் சார்புநிலைத் தத்துவத்துக்கு திருக்குறள் கூட மூலமாக இருந்திருக்கலாம்.
குறள் 300, வாய்மைதான் உலகிலேயே சிறந்தது என்று கூறுகிறது. தான் கண்டவற்றில் வாய்மையை விட சிறந்தது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவரே வந்து சாட்சி சொல்லும் குறள் இது. வாய்மைக்கு தானே வந்து சாட்சி சொல்லும் வள்ளுவர், 323ம் குறளில் கொல்லாமைதான் சிறந்தது சான்றிதழ் தருகிறார். கொல்லாமைக்கு சான்றிதழ் தருவதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. கொல்லாமைக்குப் பின் சிறந்த இடத்தை பொய்யாமைக்கு வழங்கி விடுகிறார். இப்போது வாய்மை மூன்றாம் இடத்துக்கு வந்து விடுகிறது. தானே சாட்சி சொல்லி வாய்மைதான் சிறந்து என்று பட்டம் கொடுத்த வள்ளுவர், கொல்லாமைக்கும், பொய்யாமைக்கும் பின் வாய்மையை வைத்ததன் காரணம் என்ன?
இதறகான விடையை 292ம் குறளிலேயே வள்ளுவர் கூறி விட்டார். நாம் சொல்லும் பொய் ஒரு உயிரைக் காக்குமானால், அந்தப் பொய் உண்மை என்றே மதிக்கப்படும். ஏனென்றால் நாம் சொன்ன ஒரு பொய், ஒரு உயிரைக் காப்பாற்றி விட்டது. வாய்மை சிறந்ததுதான், ஆனால் ஒருவர் உயிருக்கு ஆபத்து வரும் வேளையில், நான் அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவன், பொண்டாட்டி, பிள்ளைகளை விற்றாலும் தவறில்லை ஆனால் பொய் சொன்னால் மிகப்பெரிய தவறு என்ற உன்னதமான கொள்கைகளைக் கொண்டவன், நீ தேடி வந்த ஆள் இங்குதான் ஒளிந்திருக்கிறார் , வந்து கொன்று விட்டுப்போ என்று உண்மை பேசினால் வள்ளுவரிடம் அரிச்சந்திரன் போன்றோர் அடிவாங்குவதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவேளை அரிச்சந்திர புராணத்தைப் படிக்கும் முன்னர், காந்தி திருக்குறளைப் படித்திருந்தால், அரிச்சந்திரன் காந்தியின் கதாநாயகன் ஆகியிருக்க மாட்டார். திருக்குறளைப் படித்திருந்தால், அரிச்சந்திரனும் மனைவியையும், மகனையும் விற்றிருக்க மாட்டார்.
சார்புநிலை திருக்குறளில் பல இடங்களில் தென்பட்டாலும், அறிவு பற்றிய குறள் சிறப்பானது என்று கருதுகிறேன். ஏனென்றால், அறிவில் சார்புநிலை என்பது நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்காதது. “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று அறிவை உச்சத்தில் வைத்த வள்ளுவர், குறள் 315ல் அறிவினால் ஆகுவதுண்டோ என்று அறிவு பயனற்றது என்பது போன்ற விளக்கத்தைத் தருகிறார். அறிவு பயனுள்ளதுதான், அறிவிருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதும் உண்மைதான், ஆனால் பிறர் அனுபவிக்கும் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பம் போல உணர முடியாதவருக்கு அறிவு இருந்தும் பயனில்லை என்பதுதான் அறிவின் சார்புநிலை.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.” (குறள்: 300)
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.” (குறள்: 292)
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.” (குறள்: 323)
“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.” (குறள்:430)
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை” (குறள்:315)
உள்ளங்கையில் அள்ளி வந்த கடல்நீர்
ஒருவர் “அகர முதல எழுத்தெல்லாம்” என்ற முதல் குறளுக்கு 400 பக்கத்தில் விளக்கம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, திருக்குறளில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் கடல் அளவு இருக்கிறதென்று புரிந்தது. இந்த கட்டுரை, கடலில் இருந்து உள்ளங்கையில் அள்ளி வந்த நீர்தான். அகத்தியர் போல கடலைக் குடிக்க ஆசைதான். திருக்குறள் என்னும் கடலைக் கடக்க வாழ்நாள் போதாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. இருப்பினும், திருக்குறள் சொல்லும் சார்புநிலை போல, திருக்குறளைப் படிக்கும் மனிதர்களைப் பொருத்து அதன் கருத்துக்களும் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும். அப்படியொரு பரிமாணம்தான் இந்தக் கட்டுரையும். இது துவக்கம்தான், தொட்டனைத் தூறும் மணற்கேணி போல திருக்குறள் கட்டுரைகளும் தொடர்ந்து ஊற்றெடுக்கும்.
பின்னிணைப்புகள்
- குறள் வானம் – அறத்துப்பால். சுப.வீரபாண்டியன்.
- https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_4/Hymn_1
- https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_85
- https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_86
- https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_91
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
- http://periyavaamandali.org/Deivathin%20Kural%20Vol%202.pdf
- http://www.hindupedia.com/en/Havis
5 Responses
நமது கலாச்சாரம், பண்பாடு மேலைநாடுகளில் மதித்து பின்பற்றும் போதுதான் அதனருமை நமக்கு புரிகிறது. அந்த வகையில் நம்மிடையே இருந்தும் நாம் முழுதும் அறிந்திராத புதையல்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது அநேகமாக திருக்குறளாகத்தான் இருக்கும். அந்த புதையல் ஆராய்ச்சியில் ஈடுபட்டமைக்கு முதலில் நன்றியும் வாழ்த்துக்களும். பதிவின் தொடக்கத்தில்
திருக்குறளை அட்சய பாத்திரமாக கன கட்சிதமாக உருவகப்படுத்ததிலேயே அதன் ஆழத்தையும், பெருமையையும் உணர்த்திவிட்டதாக உணர்கிறேன். அதற்கடுத்து வரும் குறள் விளக்கங்கள் அந்த அட்சய பாத்திரம் என்ற கருத்தையே சுற்றி வருவதை தவிர்க்கமுடியாது. அதுதான் திருக்குறளின் மகத்துவம். ஒப்பற்ற உலகப்பொதுமறை என்றாலும் அதை தமிழர் பண்பாட்டின், மொழி உணர்வின் பிரதிபிம்பமாக உலகிற்கு எடுத்துக்காட்டவே மனம் ஏங்குகிறது. அத்தகைய குறளை கொடுத்த அந்த பெருந்தகைக்கு கோடான கோடி நன்றிகள். இறை வாழ்த்து தொடங்கி, உழவு, அரசியல், பண்பு, மனோதத்துவம், இல்லறவியல், உளவியல், ஊடலுவகை என்று முடிப்பதற்குள் அவர் தொட்டு விவரிக்காத ஒன்று இல்லவே இல்லை. ஆதி முதல் இன்றைய நாள் வரை ஒரு மனிதன் தன் பொதுவாழ்வில் மேற்கொள்ளும் அனைத்து நிலைகளுக்கும் இதுவே அகராதி. இதைத்தாண்டிய அறம், மனோதத்துவம் சார்ந்த ஒரு நூல் உலகில் இல்லை என்பது சர்வ நிச்சயம். பதிவில் கடவுள் வாழ்த்து, பெண்ணியம் என்று ஆரோக்கியமாக தொடங்கி கையில் ஏந்தி வந்த கடல்நீர் என்று ஆழமாக விவரித்து, படிப்பவரை பொறுத்து அது பல பரிமாணங்களை காட்டும் என்று முடித்த விதம் அருமை. உண்மையும் அதுவே. குறள் இரண்டடியாக இருந்தாலும் அதன் மதிப்பு இமயமலையாகவே நமக்கு தெரிகிறது. இவ்வளவு சிறப்புகள் இப்பதிவில் இருந்தாலும் நாம் பள்ளி, கல்லூரி வாழ்வில் படிக்க தவறவிட்ட அதிகாரங்களான காதற்சிறப்பு, குறிப்பறிதல், ஊடலுவகை என்ற அதிமுக்கியமான விசயங்களை தொடாமல் விட்டதற்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன். அவைகள் என்ன பாவம் செய்தன?? அவற்றில் முங்கி முத்தெடுத்து பதிவில் காண்பித்திருக்க வேண்டாமா?? போகட்டும்.
கடவுள் வாழ்த்து பகுதியில் விவரிக்கும் போது கடவுள் மறுப்பாளர்கள் அப்பொழுதும் இருந்தார்கள் என்று வளைத்து சொல்லி அதை அவரும் அரவணைத்து சென்றார் என்று ஆரோக்கியமாக சொல்லியதில், தனக்கு தேர்ந்த எழுத்தாளரின் பண்பு வந்து விட்டதை உணர்த்துகிறீர்கள். அருமை.
ஆரிய எதிர்ப்பு விளக்கத்தில் எனக்கு சில மாற்றுக்கருத்துகள் உள்ளன.
குறள் 259ல் வேள்வியை திருவள்ளுவர் எதிர்ப்பதாக விளக்கம் தொடருகிறது. இதில் மட்டுமல்ல பொதுவாக வலைத்தளங்களில் இதே தாகலகம் நிலவுவதால் இதற்கு விளக்கம் கொடுக்க எண்ணுகிறேன்.
முதலில் வேள்வி, யாகம் என்பது ஆரியர்களின் முறையல்ல, அது ஆதியிலிருந்து தொடரும் ஒரு பொதுவான இறை வழிபாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நெருப்பை இறையம்சமாக ஆதி மனிதன் வணங்க தொடங்கியதில் இருந்து ஆரம்பித்தது இந்த வேள்வி, யாக முறைகள். நமது சனாதன/ இந்து மதத்தில் இருப்பது சாத்வீக முறையிலான வேள்வி முறை. வேள்விக்கும் யாகத்திற்க்கும் வேறுபாடு உள்ளது. வேள்வி என்பது ஒட்டுமொத்த உலக உயிர்களின் நன்மைக்காகவும் மேற்க்கொள்வது. யாகம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மையை கருதி மேற்க்கொள்வது. (உதாரணமாக மழையை வேண்டி செய்வது)
நமது சாத்வீக யாக, வேள்வி முறையில் உயிர்வதை என்பது அறவே இல்லை. ஆனால் ஆரிய முறை மாறுபட்டது. உயிர்வதை உள்ளடக்கியது. ஆரியமுறைக்கு புத்தர் தொடங்கி நமது மன்னர்கள் வரை எதிர்ப்பு தெரிவித்தது உண்மை. யாகத்தை விட உலக நன்மைக்காக மேற்க்கொள்ளப்படும் வேள்வி முறைக்கு அதிக சக்தியும், மதிப்பும் இருந்ததும் உண்மை. யாக மற்றும் வேள்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று. அதில் சேர்க்கப்படும் நெய், தானியங்கள், மூலிகைகள் மூலம் வெளிப்படும் புகை, அங்கிருக்கும் மனிதர்கள் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் காற்றிலுமர அருகிலுள்ள நீர்நிலைகளிலும் கூட கரியமிலவாயு உட்பட அனைத்து நச்சுத்தன்மைகளையும் அளிக்கக்கூடியது. மேலும் அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொருத்து காற்றில் கலந்து மழை பெய்யும் காரணிகளை தூண்டுகிறது. ஹெலிகாப்டரில் சென்று அமிலங்களை தூவுவதன் மூலம் மழையை வரவழைக்க முடியும் என்பதை அறிவியல் மூலமாக ஏற்றுக்கொள்ளும் நாம் பண்டைய யாக முறையை ஏற்க தயங்குகிறோம். நமது அகத்தியர் முதல் சித்த பெருமக்கள் சாத்வீக யாகத்தில் என்னென்ன பொருட்களை சேர்த்தால் என்னென்ன விழைவுகள் பெறலாம் என்பது முதற்கொண்டு யாக முறையை சிறப்பித்து சொல்லியிருக்கிறார்கள்.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட அறிவியல் சார்ந்த யாக முறையை பாட்டன் திருவள்ளுவர் எதிர்த்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு ஆதாரம் அந்த குறளிலேயே உள்ளது தமது குறள் 259ல் சொல்லும்பொழுது அவி ‘சொரிந்’ தாயிரம் வேட்டலின் என்றே தொடங்குகிறார். சொரிந்து என்பது ஊற்றுவது அல்லது வார்ப்பது என்றே பொருள்படும். அதாவது நெய் மற்றும் வாசனை திரவியங்களை வார்ப்பதையே ‘சொரிந்து’ என்று குறிப்பிடுகிறார். மேலும் அப்படிப்பட்ட ஆயிரம் வேள்விகளை விட புலால் மறுப்பு சிறந்தது என்கிறார். அதை விட இது சிறப்பு என்று நேர்மறையாகவே சொல்கிறார். எனவே வேள்வியை அவர் மதிப்பான ஒன்றாகவே என்பதே எனது நிலைப்பாடும் உண்மையும். நமது பண்பாடு அதிநவீனமான, மேம்பட்ட ஒன்று என்பதை குறள்கள் மெய்ப்பிக்கின்றன. சமூக நலம் சார்ந்த ஆய்வு தங்களது கட்டுரைகளில் என்றும் இதற்கே முதலிடம் என்பதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் பதிவு செய்கிறேன். அதற்கு மூல காரணமான வள்ளவ பாட்டனின் பாதத்திற்கு அன்பு முத்தங்கள்!!!!! நன்றி..
பதிலுரைக்கு மிக்க நன்றி குமார். தாங்கள் கூறியது போல் குறிப்பறிதல், காதற்சிறப்புரைத்தல் போன்ற அதிகாரங்களுக்குள் நான் நுழையவில்லை. கட்டுரையின் நீளம் கருதி, பல தலைப்புகளுக்குள் செல்லவில்லை. குறிப்பாக குறளில் தோய்ந்திருக்கும் அறிவியல் பார்வையை ஆராய்ந்து எழுதவும் ஆசையும் உண்டு. அவற்றையெல்லாம் மற்றொரு கட்டுரையாக எழுதுவதற்கு முயற்சிக்கிறேன்.
தாங்கள் குறிப்பிட்டது போல், நெய், தானியங்கள், மூலிகைகள் ஊற்றி வளர்க்கப்படும் யாகங்கள் மீது எனக்கு விமர்சனம் இல்லை. ஆனால் குறிப்பாக புலால் உண்ணாமை குறித்த அதிகாரத்தில் வள்ளுவர் “அவிசொரிந் தாயிரம் வேட்டலின்” என்ற குறளை சேர்க்கிறார். மேலும் நெய், மூலிகைகள் என்று தமிழ் பெயர்களை சொல்லாமல் ஹவிஸ் என்று ஆரியப் பெயரையேக் கையாள்கிறார். அதனாலேயே அது ஆரிய வேள்வி எதிர்ப்பு என்ற முடிவுக்கு நான் வந்தேன். மற்றபடி, உயிர்பலி இல்லாத யாகங்கள் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.
தங்கள் பதிலுரையே ஒரு சிறந்த கட்டுரை போல செழுமையாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரை எழுதும்போதும், தங்களின் விமர்சனங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன. அவை அடுத்த கட்டுரையை வடிவமைக்க மிகவும் உதவியாக இருக்கின்றன. கருத்துப் பதிவிற்கு மிக்க நன்றி.