நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்று அனைத்துக்குமே நாம் சில சடங்குகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றுவோம். அந்த சடங்குகள் வரிசையில் காலப்போக்கில் பல புதிய பழக்கங்கள் இணைந்துகொள்வது இயல்பு. அந்த வகையில் திருமணம், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில், சில குறிப்பிட்ட திரைப்படப் பாடல்கள் இடம்பெறுவதுண்டு. எனது ஊர் முள்ளக்காடு, தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் கிராமம். எனது கிராமத்தில், இது போன்ற நிகழ்ச்சிகளில் தவறாமல் இடம்பெறும் சில பாடல்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது எனது ஊரில் மட்டுமல்லாது, அந்த வட்டாரத்தில் பின்பற்றப்படும் வழக்கம்.
தூத்துக்குடி பக்கம், பொதுவாக, நிச்சயதார்த்தம், திருமணம் எல்லாம் பெண் வீட்டில் நடப்பது மரபு. பெண்வீட்டில் நிச்சயதார்த்த நாள் அன்று, “மரகதவல்லிக்கு மணக்கோலம், என் மங்கலச்செல்விக்கு மலர்க்கோலம்” என்ற பாடல் ஒலிக்கும். “அன்புள்ள அப்பா” என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். அந்தப் பாடலைக் கேட்டாலே, பெண்ணின் தந்தைக்கு கண்ணீர் வந்து விடும், அவ்வளவு உருக்கமான பாடல் அது.
திருமணத்தில் மணமகளை மேடைக்கு அழைத்து வரும்போது “வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ” என்ற பாடல் கட்டாயம் இசைக்கப்படும். “பாசமலர்” திரைப்படத்தில் இடம்பெற்றப் பாடல் அது. அந்த பாடல் கேட்டாலே, மணப்பெண் மேடைக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
தாலி கட்டியவுடன், “நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்” என்ற பாடல் கேட்கும். பணக்காரன் படத்தில் வரும் பாடல். கெட்டிமேளம் முடிந்து, இந்த பாடல் கேட்கிறதென்றால், தாலி கட்டியாயிற்று என்று புரிந்து கொள்ளலாம்.
திருமணம் முடிந்ததும் மணப்பெண், மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வது ஒரு சம்பிரதாயம். மாப்பிள்ளை வீட்டுக்கு மணப்பெண் வரும்போது, “மணமகளே, மருமகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” என்ற பாடல் இசைக்கும். சாரதா படத்தில் இடம்பெற்ற பாடல் அது. இந்த பாடலைக் கேட்டாலே, மணப்பெண் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து விட்டார் என்று புரிந்துகொண்டு ஊரார் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து விடுவார்கள்.
வரவேற்பு மாப்பிள்ளை வீட்டில் நடக்கும். அப்போது மணப்பெண் எப்படி மாப்பிள்ளை வீட்டாரை அனுசரித்துப் போக வேண்டும் என்பதை வலியுறுத்த ஒரு பாடல் உண்டு. “புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே, தங்கச்சி கண்ணே” என்ற பாடல். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” என்ற திரைப்படத்திலுள்ள பாடல். நீட்டி முழக்கி மணப்பெண்ணுக்கு அறிவுரை சொல்ல பாடல் எழுதிய நம் கவிஞர்கள், மணமகனுக்கு ஏனோ அறிவுரை சொல்ல மறந்து விட்டார்கள்.
துக்க வீட்டில் கூட சில பாடல்கள் தவறாமல் இடம்பெறும். துக்க வீட்டில் உடனடியாக, ஒலிப்பெருக்கிக் கொண்டு வரச்சொல்லி “போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா” என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்வார்கள். “பாலும் பழமும்” படத்தில் உள்ள பாடல். அந்த பாடல் கேட்டாலே, அந்த வீட்டில் துக்கம் என்று அர்த்தம். அந்தப் பாடலைக் கேட்டு, மக்கள் அந்த வீட்டுக்கு வந்து சேர்வார்கள். இந்தப் பாடல் முடிந்ததும் “சட்டி சுட்டதடா, கை விட்டதடா, புத்தி கேட்டதடா, நெஞ்சைச் சுட்டதடா” என்ற பாடலும் ஒலிக்கும். “ஆலயமணி படத்தில் வரும் பாடல். இந்த இரண்டு பாடல்களும், தொலைக்காட்சியில் வந்தால் கூட உடனே சத்தத்தைக் குறைத்து விடுவார்கள், அல்லது அந்த அலைவரிசையை (TV Channel) மாற்றி விடுவார்கள். ஏனென்றால், அந்தப் பாடல் சத்தமாக ஒலித்தால், அந்த வீட்டில் துக்கமென்று ஊர்மக்கள் கிளம்பி வந்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணம்.
இது போல இன்னும் பல பாடல்கள் உண்டு. நினைவுக்கு வரும்போது பதிவு செய்கிறேன். மேலே குறிப்பிட்ட பாடல்கள் சிலவற்றைக் கேட்டதில்லையென்றால், கட்டாயம் ஒருமுறை கேளுங்கள். அந்த பாடல்கள் ஏன் ஒரு சம்பிரதாயமாக மாறின என்று நீங்களே புரிந்து கொள்வீர்கள்.