தமிழர்கள் ஏன் அடிமையானார்கள்? – பாகம் 2

முதல் பாகத்தின் தொடர்ச்சி 

தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகள் ஆராயப்பட இருக்கின்றன. கிட்டத்தட்ட 1200 ஆண்டு வரலாற்றை சில பக்கங்களுக்குள் அடக்கி விட முடியுமா என்ற வியப்பு பலர் கண்முன்னே விரிந்து நிற்குமென்று நம்புகிறேன். ஆனால் தமிழர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போட்ட சில நிகழ்வுகளை மட்டும்தான் ஆராய இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பதிவு செய்வது மட்டும் வரலாறல்ல, அந்த நிகழ்வால் ஒரு சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் என்னென்ன என்று அலசுவதுதான் வரலாறு என்பது எனது பார்வை. அந்த வரலாற்று சிந்தனையோடு கட்டுரைக்குள் நுழைவோம்.

இனப்படுகொலை

ஆரியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற அந்நியர்கள் தமிழகத்தில் ஊடுருவி ஆட்சி செய்தார்கள் என்று முதல் பாகத்தில் பார்த்தோம். அவர்கள் நுழைவுக்குப் பின்னும் தமிழர்களின் அறிவாற்றலும், போர்க்குணமும் கொஞ்சமும் குறையவில்லை. அதற்கு வலுவான காரணங்கள் இரண்டு. ஒன்று தமிழகத்தில் சங்ககாலம் முதல் பரவலாக இருந்த கல்வியறிவு. இரண்டாவது காரணம் சித்தர்கள். இவை தமிழ்மண்ணின் ஆணிவேர்கள். தமிழ் செழித்திருந்த காலம் வரை தமிழர்களைத் தொடமுடியவில்லை. ஆனால் ஆரியர்கள், களப்பிரர்கள், பல்லவர்கள்  போன்றவர்களால் பிற மொழிகளின் தாக்கம் தமிழ் மண்ணில் அதிகரித்திருந்தது. பாளி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழ் மண்ணில் ஆதிக்கம் செலுத்தின. இதைத் தெரிந்துகொள்ள வரலாற்றை அதிகம் புரட்ட வேண்டியதில்லை. களப்பிரர்களுக்குப் பின் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் பெரும்பாலும் தமிழ்ப்பெயர்களை வைத்துக்கொள்ளவில்லை. பெயர்கள் மட்டுமல்ல, பட்டங்கள் கூட தமிழில் வைத்துக்கொள்ளவில்லை. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், சுந்தரபாண்டியன் என்று தமிழல்லாத பெயர்களைத்தான்  பெரும்பாலான மன்னர்கள் வைத்துக்கொண்டனர். மன்னர்கள் பெயர்கள் மட்டுமல்ல ஊர்களின் பெயரும் பிறமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன.  

ஒரு இனம் அடிமைப்பட்ட வரலாற்றை ஆய்வு செய்யும் இடத்தில் பெயர்களுக்கு முதன்மைத்துவமா என்று யோசிக்கிறீர்களா? அவை வெறும் பெயர்களல்ல, மொழியின் வெளிப்பாடு. நமது மொழிப்பெயர்களை விட பிறமொழிப்பெயர்கள் அழகென்ற உணர்வு நமக்குள்ளே வருகிறதென்றால், நம் ஆழ்மனதில் தாய்மொழியின் மகத்துவத்தைக் குறைக்கிறோம் என்று அர்த்தம். நம் தாய்மொழியை விட அந்நிய மொழியை பெரிதாக எண்ணுகிறோமென்று அர்த்தம். தாய்மொழி சிதைகிறதென்றால், மொழியோடு நமது தொன்மை, வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரிய அறிவு அனைத்தும் சேர்ந்தே அழிகிறதென்று அர்த்தம்.

ஆம். தமிழினத்தின் மீது, தமிழின் தொன்மை மீது, தமிழரின் வாழ்வியல் விழுமியங்கள் மீது, தமிழரின் பண்பாட்டின் மீது, தமிழரின் கலாச்சாரத்தின் மீது, தமிழரின் பாரம்பரிய அறிவின் மீது அன்று தாக்குதல் துவங்கியிருந்தது. அது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை. அதுவும் தமிழர்களை வைத்தே, தமிழர்களைக் கொன்று குவித்த கொடூரம். நிச்சயமாக போர்கள் மூலமாக இல்லை. நாம் தமிழினத்தின் வேர்களை அறுத்துக்கொண்டிருக்கிறோம் என்ற புரிதல்கூட இல்லாத மானங்கெட்ட அரசர்கள் சிலர், ஆரிய நாய்களுக்கு வாலாட்டிக் கொண்டிருந்ததால் வந்த விளைவு. தமிழினம் அடிமையானதன் மூலக்காரணமே அந்த இனப்படுகொலைதான். அதற்கு அவர்கள் வைத்த பெயர் சித்ரவதை.

சித்ரவதை 

சித்ரவதை என்ற வார்த்தை நாம் இன்றும் சாதாரணமாக பயன்படுத்துகிறோம், அந்த வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் புரியாமல். அது சாதாரண வார்த்தையல்ல. ஒரு இனத்தினை அடிமையாக்க, அதன் வரலாற்றை வேரறுக்க ஒரு கயவர் கூட்டத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி. சித்ரவதை என்ற வார்த்தையே சித்தர்களை வதைக்க உருவாக்கப்பட்ட வார்த்தை. சித்தர்கள் அழிக்கப்பட்ட விதம் கொடூரத்தின் உச்சம். கழுவேற்றம் மூலமாகத்தான் பெரும்பாலான சித்தர்கள் கொல்லப்பட்டார்கள். உலகில் ஒரு மனிதனை அதைவிடக் கொடூரமாகக் கொலை செய்ய முடியாது. கழுவேற்றம் என்றால், ஒரு கூர்மையான கம்பை நட்டு வைத்து, ஒருவரின் ஆசனவாய் மூலமாக நுழைத்து, குடலைத் துளைத்து வாய் வழியாக கம்பு வரும் வரை அழுத்துவார்கள். அந்த கம்பில் சொருகி வைக்கப்பட்ட மனிதர் துடிதுடித்து, வெகுநேரம் வேதனையை அனுபவித்து இறந்து போவார். சித்தர்கள் அனைவரும் இவ்வாறு கழுவில் ஏற்றப்பட்டுதான் கொல்லப்பட்டார்கள். அதனால்தான் அதன் பெயர் சித்தர்வதை. சித்தர்வதை என்ற பெயர்தான் காலப்போக்கில் சித்ரவதை என்று மாறிப்போனது.

ஒருவர் இருவர் அல்ல, ஒட்டுமொத்தமாக சித்தர்கள் என்ற இனமே இருக்கக்கூடாதென்று, கொத்துக்கொத்தாக ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டார்கள். சித்தர்களைக் கொன்று குவிப்பதால் என்ன பயன்? சித்தர்  என்றால் ஒரு தனிமனிதனல்ல. ஒவ்வொரு சித்தரும் ஒரு பல்கலைக்கழகம். கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், போர்க்கலை என்று சித்தர்களுக்குத் தெரியாத வித்தைகளே இல்லையென்று சொல்லலாம். சித்தர்கள்தான்  தமிழர்களின்  பண்பாடு மட்டும் கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த அடையாளம். ஒரு சித்தர் அழிகிறாரென்றால், ஒரு நூலகம் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுகிறது என்பதற்கு சமம். சித்தர்கள் அழிந்தால் தமிழர்களின் வரலாறும் அழிகிறதென்று பொருள்.

ஞானசம்பந்தன் என்னும் கொலைகாரன் 

தலைப்பு திசைமாறுகிறதோ என்ற ஐயம் வேண்டாம். நாம் இன்னும் சித்தர் கொலை தொடர்பான தகவல்களைக் குறித்துதான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மதுரையை ஆண்ட, கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட நின்றசீர் நெடுமாறன், சமண சமயத்தைத் தழுவியிருந்தான். ஆனால் அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை விரும்பினாள். மங்கையர்க்கரசியும், கூன் பாண்டியனின் அமைச்சன் குலச்சிறையார் என்பவரும் சேர்ந்து மன்னனை சைவமதத்திற்கு மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்தார்கள். மன்னனை மதமாற்றம் செய்ய ஞானசம்பந்தன் என்பவனது உதவியை நாடினார்கள். ஞானம்பந்தன் என்பவன், கையிலிருந்து விபூதி எடுக்கும் சாமியார்கள், வாயிலிருந்து லிங்கம் எடுக்கும் சாமியார்கள் போன்றோர்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எப்படி என்கிறீர்களா?

ஞானசம்பந்தன் சமணர்களை அனல்வாதம், புனல்வாதம் செய்ய அழைத்தான். அனல்வாதம் என்றால், ஓலைச்சுவடிகளை நெருப்பில் போடுவார்கள். அந்த ஓலைச்சுவடிகள் எரிந்து போனால், அந்த ஓலையை எழுதியவர் போட்டியில் தோற்றுவிட்டார் என்று அர்த்தம். புனல்வாதம் என்றால், ஓலைச்சுவடிகளை ஆற்றில் போடுவார்கள். அவை நீரில் மூழ்கிப்போனால், அந்த ஓலையை எழுதியவர் போட்டியில் தோற்றுவிட்டார் என்று அர்த்தம். ஓலைச்சுவடிகளை நெருப்பில் போட்டால் எரிந்துதானே போகும், ஆற்றில் போட்டால் மூழ்கித்தானே போகும், ஒருவரின் மொழியாற்றலை ஆய்வு செய்ய இது போன்ற செயல்கள் பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லையே என்று நமக்குத் தோன்றும். ஆனால் அந்தக் கூன் பாண்டியனுக்கு ஏனோ தோன்றவில்லை.

சரி. சமணர்கள் போட்ட ஓலை மட்டுமல்ல, ஞானசம்பந்தன் போட்ட ஓலைச்சுவடியும் தீயில் எரிந்தோ, ஆற்றில் மூழ்கியோப் போயிருக்க வேண்டுமல்லவா. அதனால்தான் முன்பே சொன்னேன், ஞானசம்பந்தன் இன்றைய பித்தலாட்ட சாமியார்களுக்கு முன்னோடி என்று. அது எப்படி ஞானசம்பந்தனால் வெற்றிபெற முடிந்தது? அதன் சாத்தியக்கூறுகள் விளங்கவில்லை. நீரெழுந்து வேர் என்ற வேரை, ஓலைச்சுவடிகளுக்கு நடுவில் வைத்து கட்டிவிட்டால் அது நீரில் மூழ்காது என்கிறார்கள். அதெல்லாம் உண்மையா என்று தெரியவில்லை. மேலும் ஒருவித வேதியியல் பொருளை ஓலையில் தடவினால், ஓலை தீயில் எரியாது என்கிறார்கள். அதுவும் என்னவென்று விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் மறுக்கமுடியாத உண்மை, ஞானசம்பந்தன் செய்தது பித்தலாட்டம். இந்த பித்தலாட்டத்திற்கு பலியானவர்கள் 8000 சித்தர்கள். ஒரு அரசனின் முட்டாள்தனம், ஒரு பித்தலாட்டக்காரனின் வஞ்சனை இரண்டும் சேர்ந்து 8000 உயிர்களைப் பழிவாங்கியது. சித்தர்கள் கழுவேற்றம் தொடர்பான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் தமிழகத்தின் பல கோயில்களில் காண முடியும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் போன்ற இலக்கியங்களும் இந்த வரலாற்று உண்மையைப் பதிவு செய்கிறது,

மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
துன்னிய வாதில் ஒட்டி தோற்ற இச்சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசி தம்முற்றச் செய்தார்
கொல்நுனைக் கழுவில் ஏற்ற முறை செய்க என்றுகூற
புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும்
இகல் இலர் எனினும் சைவர் இருந்து வாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா இருந்தவேலை
பண்புடை அமைச்சரன்னாரும் பாருளோர் அறியும் ஆற்றால்
கண்புடைப்பட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற
நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீநாடி இட்ட
எண்பெரும் குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் (பெரியபுராணம்) 

‘மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ்
சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப்
பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.’ (திருவிளையாடற்புராணம்)

ஞானசம்பந்தன்தான் கழுவிலேற்றுவதைத் துவங்கி வைத்தான் என்று சொல்ல முடியாது. அதற்கு முன்பும், பின்பும் நிறைய நடந்திருக்கலாம். ஆனால் ஞானசம்பந்தன் செய்ததற்கு வரலாற்றில் நிறைய ஆதாரங்கள் கிடைக்கிறது. வெறும் 16 ஆண்டுகளே வாழ்ந்த ஞானசம்பந்தன், இத்தனை பேரை கொன்று குவித்திருக்கிறான் என்பது நமக்கு அதிர்ச்சியான செய்திதான். ஆனால் ஒரே ஒருவன் மட்டும் செய்த சதியல்ல. ஆரியக்கூட்டமே தமிழினத்தின் வரலாற்றை அழிக்க திட்டமிட்டு சதி செய்துகொண்டிருந்தது. தமிழகத்தின் பல இடங்களிலும், அனல்வாதம், புனல்வாதம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான சித்தர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமணர்கள் அனைவரும் சித்தர்களா என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழும். கழுவேற்றம் தொடர்பான ஓவியங்கள், சிற்பங்கள் அனைத்திலும், கழுவேற்றப்பட்டவர்கள் பெரும்பாலானோர், நீண்ட முடியுடனும், தாடியுடனும் இருப்பதைக் காணமுடியும். சமணர்கள் மொட்டையடித்திருப்பார்கள், தாடி வைத்திருக்க மாட்டார்கள். ஆகையால் கொலையுண்டவர்கள் ஆசீவகர்கள் என்றும் சில வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் சமணர்களா, ஆசீகர்களா என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையற்றது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சித்தர்கள் என்பது உண்மை.  அதனால்தான் அதற்குப் பெயர் சித்தர்வதை.

தமிழர்களின் வீழ்ச்சியின் துவக்கம் 

மதம் என்ற பெயரால், ஒரு இனத்தின் ஆணிவேர் அறுக்கப்பட்டது. அதையும் அந்த ஆரியக்கூட்டம், அறிவிழந்து, மதவெறி பிடித்த சில தமிழ் மன்னர்களின் உதவியோடு செய்து முடித்தார்கள். ஆரியர்களின் சூழ்ச்சியால், தமிழ்ப்பல்கலைக்கழகம் போல வாழ்ந்த சித்தர்கள் அழிக்கப்பட்டார்கள். மேலும், அனல்வாதம், புனல்வாதம் என்ற பெயரில் தமிழர்களின் ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டன. அழிந்து போன இலக்கியங்கள் எவ்வளவு என்று கணக்கிட முடியாது. திருக்குறள், தொல்காப்பியம் போல எத்தனை இலக்கியங்கள் தமிழர்கள் கையில் கிடைக்காமல் தீயில் கருகிப்போனதோ தெரியாது. அதுவும் போதாதென்று போகிப்பண்டிகை என்ற பெயரில், பழையவற்றைக் கொளுத்துங்கள் என்று மக்களை ஏமாற்றி ஓலைச்சுவடிகளை தீயிலிட்டு எரிக்க வைத்தார்கள். தமிழக வரலாற்றில், சித்தர்கள் அழிக்கப்பட்டது மற்றும் தமிழர்களின் இலக்கியங்களைத் தாங்கி நின்ற ஓலைச்சுவடிகள் அழிக்கப்பட்டது ஆகிய இரண்டும்தான்  தமிழர்களின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமென்று ஆணித்தரமாக அடித்துக்கூறலாம்.

6ம் நூற்றாண்டுவாக்கில் துவங்கிய சித்தர்வதை, மதம் என்ற போர்வையில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தது.  ஆரியர்களின் செல்வாக்கு தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே போனது. நமது மக்கள் கட்டிய கோயில்கள் எல்லாம், ஆரியர்கள் கைவசம் சென்றது. சித்தர்கள் எண்ணிக்கைக் குறைந்தபின் தமிழர்களின் கலை, இலக்கியம், போன்றவற்றில் ஒரு தொய்வு ஏற்பட்டது. இலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கலாம். ஆனால் சித்தர்கள் இருந்தபோது, மக்களிடையே கல்வி பரவலாக இருந்தது. ஆனால் ஆரியர்கள் செல்வாக்கு அதிகரித்த பின்பு, கல்வி சாமான்ய மக்களை சென்றடையவில்லை. போதாக்குறைக்கு, ஆரியர்களுக்கு, நிலங்கள், ஊர்கள் எல்லாம் தானமாக வாரிவழங்கப்பட்டன. சொந்த மண்ணிலேயே, மண்ணின் மைந்தர்களின் முன்னுரிமை மறுக்கப்பட்டு, பிறமொழி பேசுபவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. தாய்மொழியின் அருமையறியாமல், பிறமொழிகளால் ஈர்க்கப்பட்ட ஒரு சமூகம் தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருந்தது. தாய்மொழியின் பெருமையை உணராத இனம், மற்றொரு இனத்திடம் மெல்ல மெல்ல அடிமைப்பட்டுப்போகும் என்பதற்கு தமிழினமே சான்று.

சோழர்களின் எழுச்சி 

6ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரையில், தமிழகத்தில் மதம் என்ற பெயரில் மன்னர்கள் மதம்பிடித்து ஆடினார்கள். சித்தர்கள் கொத்துக்கொத்தாக கொன்றுகுவிக்கப்பட்ட பின்னர், பாண்டிய நாட்டின் வீழ்ச்சியும் மெல்லத் துவங்கியது. 9ம் நூற்றாண்டு வரை பல்லவர்கள் போன்ற அந்நிய மக்களின் ஆட்சி தமிழகத்தில் கோலோச்சியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் 9ம் நூற்றாண்டு முதல் சோழர்கள் தலையெடுக்கத் துவங்கினார்கள். விஜயாலச்சோழன் துவக்கி வைத்த வெற்றி வரலாற்றை, ராஜராஜ சோழனது மகன் ராஜேந்திர சோழன் உலகின் உச்சத்துக்கே கொண்டு சென்றார் என்றால் மிகையாகாது. மாவீரன் ராஜேந்திர சோழன் போன்ற மாமன்னன் உலக வரலாற்றில் கிடையாது. அக்காலத்தில் சோழர்கள் கடலைக் கையாண்ட விதத்தைக்  கண்டு, போர்ச்சுக்கீசியர்கள் தமிழகக் கடலுக்கு சோழ ஏரி என்று பெயரிட்டு அழைத்தார்கள். கடலையே, சிறு ஏரி போலப் பயன்படுத்துமளவுக்கு சோழர்கள் கப்பல் கட்டுவதில் சிறந்து விளங்கினார்கள். 11ம் நூற்றாண்டு வரை சோழர்கள் கொடி உலகின் பல பகுதிகளில் பறந்தது. ராஜேந்திர சோழன், இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம் (மலேசியா), ஸ்ரீவிஜயம் (சுமத்திரா), இந்தோனேஷியா, கம்போடியா, பர்மா (மியான்மர்), போன்ற பகுதிகளை வெற்றி கொண்டார். இது மாவீரன் அலெக்சாண்டர் வென்ற இடங்களை விட அதிகம். உலகின் மாவீரன் என்றே ராஜேந்திர சோழனை அழைக்கலாம். ஆனால் சோழர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் செயலை அவரே செய்தார்.

சாளுக்கியர்களுடன் கொண்ட திருமண உறவு, தமிழ்நாட்டையும் பாதிக்குமென்று அவர்கள் அன்று உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஒருமறையல்ல, இரண்டு முறை சாளுக்கியர்களுடன் திருமண உறவு வைத்துக்கொண்டார்கள். ராஜராஜ சோழன் தனது மகள் குந்தவையை, கீழைச்சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கு மணமுடித்து வைத்தார், அதாவது ராஜேந்திர சோழனின் தங்கை குந்தவையை. ராஜராஜ சோழனது அக்காளின் பெயரும் குந்தவைதான், இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். விமலாதித்தனுக்கும், குந்தவைக்கும் பிறந்தவன் ராஜராஜ நரேந்திரன். விமலாதித்தனுக்கு இரண்டு மகன்கள். விமலாதித்தன் இறந்தபிறகு, கீழைச்சாளுக்கியத்தின் ஆட்சி யாருக்கு என்று போட்டியில், ராஜேந்திர சோழன் தனது மூக்கை நுழைத்தார். ராஜராஜ நரேந்திரன் தனது தங்கை மகனல்லவா, ஆகையால் தானாடாவிட்டாலும் ராஜேந்திர சோழன் தசை ஆடியது, விளைவு, படையெடுப்பு. ராஜேந்திர சோழன் வருகிறார் என்றதும் எல்லோரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆட்சி ராஜராஜ நரேந்திரன் கைக்கு வந்துசேர்ந்தது. ராஜேந்திர சோழன் ஆட்சியை மட்டும் கொடுக்கவில்லை, தனது பெண்ணையும் கொடுத்தார். தனது மகள் அம்மங்கா தேவியை, ராஜராஜ நரேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்த மண உறவு தமிழகத்தை எவ்வாறு பாதித்தது?

சாளுக்கிய சோழர்கள் 

ராஜேந்திர சோழன் காலத்துக்குப் பிறகு, கீழைச்சாளுக்கியத்தில் மீண்டும் போர்ச்சூழல் உருவானது. ஆகையால் ராஜராஜ நரேந்திரனுக்கும், அம்மங்கா தேவிக்கும் பிறந்த அநபாயன், சோழநாட்டில் தஞ்சம் புகுந்தான். கி.பி.1070ம் ஆண்டில் அரசுக்கட்டில் ஏறிய அதிராஜேந்திர சோழன், சில மாதங்களிலேயே இறந்துபோனார். அப்போது நடந்த  சைவ, வைணவச்சண்டை காரணமாக அவன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றிசிரியர்கள் கருதுகிறார்கள்.  அதிராஜேந்திர சோழனுக்கு வாரிசும் இல்லை. யாரை அரசனாக்குவது என்ற குழப்பம் சோழநாட்டில்  நிலவியது. குழப்பத்தைத் தவிர்க்க கீழைச்சாளுக்கிய இளவரசன், ராஜேந்திர சோழனின் பெயரன், அநபாயனை அரியணையில் அமர வைத்தார்கள். அநபாயன், குலோத்துங்க சோழன் என்ற பெயரோடு ஆட்சியில் அமர்ந்தான். அதன்பிறகு, தமிழ் வாரிசுகள் சோழ நாட்டை ஆளவே இல்லை.

பாண்டியர்கள் ஆட்சி கி.பி.3ம் நூற்றாண்டில் அந்நியர்களான களப்பிரர்கள் கையில் சிக்கியதுபோல, சோழர்கள் ஆட்சி முதன்முதலில் 11ம் நூற்றாண்டில் அந்நியன் ஒருவன் கையில் சிக்கியது. களப்பிரர்களாவது படையெடுத்து வென்றார்கள், ஆனால் இந்த குலோத்துங்கன், உயிருக்கு பயந்து ஓடி ஒளிந்த இடத்தில் ஆட்சியில் அமர்ந்தான். களப்பிரர்கள், அதன்பிறகு பல்லவர்கள், அப்புறம் சாளுக்கியர்கள் என்று தமிழகத்தில் அந்நியர்கள் ஆட்சி கோலோச்சத் துவங்கியது. இதற்கு நடுவில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. இத்தனை இன்னல்களுக்கு நடுவிலும் தமிழகம் செல்வச்செழிப்போடுதான் இருந்தது.

தமிழர்களின் பெருந்தன்மை 

தமிழர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்ததற்கு முதன்மையான காரணமென்றால், வணிகம்தான். அதிலும் குறிப்பாக கடல்வழி வணிகம். கப்பல்கள் மூலம் பல நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். ஒட்டுமொத்த உலக உருண்டையில் தமிழர்களின் கப்பல் செல்லாத கடலே கிடையாது என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் சோழர்கள் ஆட்சி வலுவிழந்த பின்  கப்பல் பயணங்கள் குறைந்து போனது. கப்பல் பயணங்கள் குறைந்ததால், வணிகமும் நலிந்து போனது. வணிகம் குறைந்தது முதன்மையான காரணம் என்றாலும், தமிழர்களின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் அவர்களின் பெருந்தன்மை என்று சொல்லலாம்.

கரிகாற்சோழன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், ராஜேந்திர சோழன் என பல தமிழ் மன்னர்கள் பல்வேறு நாடுகளைக் கைப்பற்றினார்கள். ஆனால் இவர்கள் யாருமே தான் வெற்றி கொண்ட நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்துக்கொள்ளவில்லை. வெற்றிபெற்ற பெரும்பாலான பகுதிகளை மீண்டும் அந்த அரசனிடமே ஒப்படைத்துவிட்டு வந்தனர். இவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழ் மன்னர்களும் அவ்வாறுதான் செய்தனர். இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம், இன்று தமிழகம் என்ற குறுகிய நிலப்பரப்பில் வாழ்கிறதென்றால் அதற்கு மிக முதன்மையான காரணம் தமிழர்களின் பெருந்தன்மை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும். சோழர்களின் ஆட்சி, சாளுக்கியர்கள் நுழைந்தபின் முடிவுக்கு வந்தது. சாளுக்கியச் சோழர்களின் பலம் குன்றியதும் மீண்டும் பாண்டியர்கள் தலையெடுக்கத் துவங்கினர். ஆனால்  பாண்டியர்களின் ஆட்சிக்கும் ஆபத்து வந்தது. அதுவும் தானாக வரவில்லை, அவர்களாகவே வரவழைத்துக் கொண்டார்கள்.

மாலிக்  காஃபூர்  

14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னர் மதுரையை ஆண்டார். மன்னர் குலசேகர பாண்டியனுக்கு இரண்டு மகன்கள். வீரபாண்டியன் என்பவர் மூத்த மகன், ஆனால் அவர் பட்டத்தரசிக்குப் பிறக்கவில்லை. இரண்டாவது மகன் சுந்தரபாண்டியன் பட்டத்தரசிக்குப் பிறந்தவர். ஆட்சிக்கட்டில் மூத்தவனுக்கா, அல்லது பட்டத்தரசியின் மகனுக்கா என்ற குழப்பம் நிலவியது. ஆனால் குலசேகர பாண்டியன் ஆட்சியதிகாரத்தை வீரபாண்டியனிடம் ஒப்படைத்து விட்டார். கோபமடைந்த சுந்தரபாண்டியன், தந்தையைக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். அரசகுடும்பத்துக்குள் கொலை என்பதெல்லாம் தமிழகத்தில் அரிதினும் அரிதான ஒன்று. ஆனால் அழிவை நோக்கிய பயணத்தில் இறப்புகள் தவிர்க்க முடியாதவை.

தந்தை இறந்ததும் ஆத்திரமடைந்த வீரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினார். ஏற்கனவே, தென்னாட்டின் செல்வச்செழிப்பு அவரது கண்ணை உறுத்திக்கொண்டிருந்தது. சொந்தக்காசில் சூனியம் வைக்கிறோம் என்பதுகூட தெரியாமல், வீரபாண்டியன் அலாவுதீன் கில்ஜி முன்பு நின்று கொண்டிருந்தார். அவருக்கு உதவிசெய்ய ஒரு சூனியக்காரனையே அலாவுதீன் கில்ஜி அனுப்பிவைத்தார். அந்த சூனியக்காரனின் பெயர் மாலிக் காஃபூர். மாலிக் காஃபூர் மதுரையில் காலடி வைத்ததும் செய்த முதல் வேலை, வீரபாண்டியனையும், சுந்தரபாண்டியனையும் விரட்டிவிட்டு ஆறஅமர கொள்ளையடித்ததுதான். கோயில், குளம் என்று எதையும் விட்டுவைக்கவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் தமிழகத்தின் பல கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மாலிக் காஃபூர் தமிழகத்தில் கொள்ளையடித்துப் போன செல்வங்களுக்கு கணக்கு வழக்கில்லை. அதன்பிறகு ஏறத்தாழ 52  ஆண்டுகள் மதுரையில் இஸ்லாமியர்கள் ஆட்சி நிலவியது என்கிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் போதிய வரலாற்று சான்றுகள் இல்லை.

நாயக்கர்களின் நுழைவு 

மாலிக் காஃபூரை அழைத்து வந்தது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதை பாண்டியர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் தவறு. பாண்டியர்கள் மீண்டும் அதே தவற்றை செய்தார்கள். 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில், விஜயநகரப் பேரரசு தென்னிந்தியா முழுவதும் பரவியது. அதன் விளைவாக தஞ்சாவூர், செஞ்சி போன்ற போன்ற இடங்களை நாயக்கர்கள் கைப்பற்றினர். அப்போது, சந்திரசேகரன்  என்ற பாண்டிய மன்னனுக்கும், வீரசேகரச்சோழன் என்ற மன்னனுக்கும் நடைபெற்ற போரில்,  சந்திரசேகரன் தோற்றுப்போனான். தோற்றுப்போன சந்திரசேகர பாண்டியன், விஜயநகரப் பேரரசின் மன்னன், கிருஷ்ணதேவராயரின் உதவியை நாடினான்.  மீண்டும்  ஒரு பாண்டிய மன்னனின் முட்டாள்தனத்தால், தமிழகத்துக்கு இரண்டாவது சூனியம் கிளம்பி வந்தது. அந்த இரண்டாவது சூனியத்தின் பெயர் நாகம நாயக்கன்.

கிருஷ்ணதேவராயர், சந்திரசேகர பாண்டியனுக்கு உதவுதற்காக அவருடைய படைத்தளபதி நாகம நாயக்கனை அனுப்பினான். நாகம நாயக்கன், மாலிக் காஃபூரின் சூத்திரத்தைப் படித்திருப்பான் போலிருக்கிறது. அவனும் மதுரைக்கு வந்ததும் இரண்டு பேரையும் விரட்டிவிட்டு, அவனே ஆட்சிசெய்யத் துவங்கினான். ஆனால் இது கிருஷ்ணதேவராயரை கோபமூட்டியது. நாகம நாயக்கனை யார் கைதுசெய்து வரப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் போகிறேன் என்று எழுந்தவன் விஸ்வநாத நாயக்கன், நாகம நாயக்கனின் மகன். ஆனால், வாக்களித்தபடியே தனது தந்தை நாகம நாயக்கனை கைது செய்து கிருஷ்ணதேவராயர் முன்பு நிறுத்தினான் விஸ்வநாத நாயக்கன். உச்சிக்குளிர்ந்து போன கிருஷ்ணதேவராயர், அவனையே மதுரையை ஆண்டுகொள்ளும்படி கூறிவிட்டார். 1529ம் ஆண்டு விஸ்வநாத நாயக்கன் மதுரையில் மிச்சமிருந்த பாண்டியர்களையும் வீழ்த்தி, விஜயநகர பேரரசுக்குக் கப்பம் கட்டும் சிற்றசனாக பதவியேற்றுக் கொண்டான்.

நமக்கு நாமே 

1676ம் ஆண்டு மராட்டிய சிவாஜியின் அண்ணன் ஏகோஜி தஞ்சையைக் கைப்பற்றி ஆழத்துவங்கினான். 17ம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழ் மன்னர்கள் ஆட்சியே இல்லையென்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டது. அவர்கள் ஆங்காங்கே சிற்றரசர்களாக சில ஊர்களை மட்டும் ஆண்டு கொண்டிருந்தார்கள். தமிழ் மன்னர்களிடம் எள்ளளவேனும் ஒற்றுமை இருந்திருந்தால், அந்நியர்கள் நம் மண்ணில் கால் பதித்திருக்க முடியாது. நமது ஒற்றுமையின்மை எதிரிகளுக்கு வாய்ப்பளித்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆண்ட இனம், சுருங்கி சுருங்கி இந்தியாவின் வாலில் மட்டும் வாழ்ந்து வந்தோம். அங்கும் சண்டையிட்டு, மதவெறி பிடித்து, நாட்டை இழந்தோம். நமக்கு எதிரிகள் நாலாபக்கமும் இருந்தார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை நமக்கு நாமே எதிரி என்பது.

நோவாவின் சாபம்

17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிழக்கிந்திய நிறுவனம், வணிகம் செய்கிறேன் என்ற பெயரில் தமிழகத்தில் கால்வைத்தது. கப்பல் கட்டி வாணிபம் செய்ய வெளிநாட்டுக்கு சென்ற நம் இனம், அடிமையாக கப்பலில் செல்லும் நிலை அதன்பிறகுதான் ஏற்பட்டது. வெள்ளைக்காரர்கள் ஒட்டுமொத்த ஆசிய மக்களையே அடிமை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில்தான்  இங்கு காலெடுத்து வைத்தார்கள். நாம் அடிமைகள் என்பதற்கு அவர்கள் சொன்ன காரணம் வினோதமானது.

உலகமே வெள்ளத்தில் மிதந்தபோது, கப்பலில் அமீபா முதல் ஆட்டுக்குட்டி வரை எல்லோரையும் ஏற்றிக்கொண்டு காப்பாற்றியவர் நோவா என்று விவிலியம் சொல்கிறது. அது உண்மையான பொய்யா என்று ஆராய்ச்சி நமக்கு இப்போது தேவையற்றது. ஆனால் நோவா கொடுத்த ஒரு சாபம், நமக்கு மிகவும் தேவையான சங்கதி. கப்பல் மாலுமி நோவா ஒரு வாரக்கடைசி நாளில், கொஞ்சம் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு மட்டையாகி விட்டார். லுங்கி அவிழ்ந்தது கூட தெரியாமல் நோவா உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவரது இரண்டாம் மகன் ஹம் (Ham), சிரித்ததோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் அழைத்து வந்து காட்டி, கைகொட்டி சிரித்தார். இது நோவாவின் மூத்த மகன் ஷெம் (Shem), கடைசி மகன் ஜாஃபெத் (Japheth) இருவருக்கும் அறவே பிடிக்கவில்லை. நோவா போதை தெளிந்து எழுந்ததும், ஹம் எள்ளி நகையாடியதை புட்டு புட்டு வைத்து விட்டார்கள். நோவாவுக்குக் கோபம் கொப்பளித்தது. கண்ணகி மதுரைக்கு சாபம் விட்டது போல, நோவா ஹமின் வம்சா வழியினருக்கு ஒரு சாபத்தைக் கொடுத்தார்.

ஹமின் வம்சா வழியினர் அனைவரும், நோவாவின் மற்ற மகன்கள் ஷெம் மற்றும் ஜாஃபெத்தின் வம்சா வழியினருக்கு அடிமையாக இருப்பார்கள் என்பது நோவா ஹமுக்குக் கொடுத்த சாபம். பிள்ளைப்பாசத்தாலோ என்னவோ, சாபத்தை ஹமுக்குக் கொடுக்காமல் அவனது வம்சத்துக்குக் கொடுத்து விட்டார். ஐரோப்பியர்களுக்கு இந்தக் கதை காதைக் குளிரவைத்தது. ஏனென்றால் அந்த இனிப்புக் கதை நாடுபிடிக்கத் தேவைப்பட்டது. நோவாக் கதைக்கும், ஐரோப்பியர்கள் நாடு பிடிப்பதற்கும் என்ன தொடர்பு? ஐரோப்பியர்கள், ஷெம் மற்றும்  ஜாஃபெத் வம்சத்தினர், ஆகவே ஆளப்பிறந்தவர்கள். ஹம் வம்சத்தினர் அடிமையாக இருக்க வேண்டுமென்று சாபம் பெற்றவர்கள். ஐரோப்பாவைத் தவிர பிற நாடுகளில் வாழ்பவர்கள் அனைவரும் ஹமின் வம்சத்தினர். யார் சொன்னது? கொள்ளுத்தாத்தா நோவாவே கனவில் வந்து சொன்னாரென்று வைத்துக்கொள்ளுங்களேன். ஆக அவர்கள் நம் அடிமைகள். கொள்ளுத்தாத்தா சொன்னால் குலதெய்வமே சொன்னதாக அர்த்தம், வாருங்கள் நாடுபிடிக்கக் கிளம்புவோம், என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு கப்பலேறி விட்டார்கள். நாடுபிடிப்பது என்னவோ தங்கம், வெள்ளி என்று செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கத்தான். ஆனால் அதற்கு ஒரு நொண்டிச்சாக்கு வேண்டுமல்லவா, அதுதான் நோவாவின் சாபம்.

ஐரோப்பிய நாடுகள் முதலில் கண்வைத்தது ஆப்ரிக்க நாடுகளின் மீதுதான். ஆப்ரிக்க மக்களை அடிமைகளாக்கி, அவர்களுக்கு பெரும் கொடுமைகளை செய்தார்கள். ஒரு கட்டத்தில், ஆப்ரிக்க மக்கள் கொதித்தெழுந்து கிளர்ச்சி செய்தார்கள். மக்கள் கிளர்ச்சியை அடக்கவே பெரும் பொருள் செலவானது. கடைசியில் ஆப்ரிக்காவில் அடிமைமுறையை ஒழிப்பதுதான் தங்களுக்கு நல்லதென்று இங்கிலாந்தும், ஃப்ரான்சும் கருதின. ஆனால் அதன்பிறகு அடிமைகளுக்கு எங்கே போவது? அவர்கள் கண்கள் திரும்பியது நமது நாட்டின் பக்கம்தான்.

கிழக்கிந்திய நிறுவனம் இங்கே வந்து நம்மை எவ்வாறு அடிமைசெய்தார்கள் என்பதை மூன்றாம் பாகத்தில் காணலாம்.

பின்குறிப்புகள் 

  1. http://www.sramakrishnan.com/?p=510
  2. https://www.hindutamil.in/news/discussion/4543–3.html
  3. https://en.wikipedia.org/wiki/Medieval_Cholas
  4. https://www.youtube.com/watch?v=3TEzWGSiemo
  5. https://www.nytimes.com/2003/11/01/arts/from-noah-s-curse-to-slavery-s-rationale.html
  6. https://en.wikipedia.org/wiki/Madurai_Nayak_dynasty
  7. http://wikimapia.org/1396288/Samanatham-Shrman-Jains-Raktam-Blood-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-that-is-Jains-Blood-Place-where-worlds-oldest-and-biggest-human-Massacre-happened

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்