வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம், சம்பவங்கள் அனைத்துக்கும் படக்குழுவினரே பொறுப்பு” என்று முதல் திரையிலே நமது புருவங்களை உயரச்செய்த படக்குழுவினருக்கு பாராட்டுகள்.
தெருக்கூத்துக் கலைஞர்கள், தமிழினத்தலைவர் பிரபாகரனின் வரலாற்றைச் சொல்வதுபோல திரைப்படத்தை அமைத்திருப்பது மிகச்சிறப்பு. தெருக்கூத்து என்றாலே, ராமாயணம், மகாபாரதம் போன்ற வடக்கத்திய கதைகளை மட்டும் பெரும்பாலும் சொல்வார்கள் என்ற நிலைமாறி, இனி தமிழர் வரலாறு பேசவேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். தெருக்கூத்து துவங்கும் முதல் காட்சியிலேயே சுவரின் உடைந்த பகுதியைப் போல, ஈழத்தின் வரைபடத்தைக் காட்டியிருப்பது மிக அருமை.
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா.
என்ற பாவேந்தர் கனகசுப்புரத்தினத்தின் குரல் ஒரு புலியின் காதுகளில் ஓங்கி ஒலித்தால் என்ன நடக்கும்? எல்லை மீறிவிட்டால் பூனை கூட சீறிப்பாயும், புலியைச்சீண்டினால்? புலியைச் சீண்டியது யார்? புத்தகங்கள் தவழ்ந்திருக்க வேண்டிய நம் தலைவனின் கரங்களில் ஏன் துவக்கு (துப்பாக்கி)? என்ற கேள்விகளுக்கான ஒட்டுமொத்த விடைதான் இந்த திரைப்படம்.
சிங்கள இனவாதம், பௌத்த மதவாதம் என்ற இரண்டுக்கும் நடுவில், ஈழத்தின் பூர்வக்குடிகளான தமிழர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக பதிவு செய்திருக்கிறார்கள். தரப்படுத்தல் என்ற பெயரில் தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதி, தமிழ் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டதும் நடந்த படுகொலைகள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் போன்ற சம்பவங்கள் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஈழத்தில் தமிழ்ப்பெண்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளானார்கள் என்று உலகத்துக்கே தெரியும். ஆனால் அது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. மாறாக, ஆண்களை நிர்வாணப்படுத்தும் காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆண்களையே நிர்வாணமாக்கத் துடிக்கும் ஒரு வெறிபிடித்த நாய்கள் பெண்களிடம் எப்படி நடந்திருக்கும் என்பதை மறைமுகமாக புரிய வைத்திருக்கிறார் இயக்குனர். தமிழ்ப்பெண்ணிடம் அத்துமீறும் ஒருவனை அடித்துக்கொள்ளும் காட்சி, தமிழ்ப்பெண்ணின் மீது கைவைத்தால் என்ன நடக்கும் என்று எச்சரிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருப்பது அருமை.
தலைவர் கதாபாத்திரம் தோன்றும் ஒவ்வொரு காட்சிகளும் மிக நுணுக்கமாக, கவனமாக கையாளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அவர் வீட்டுக்குள் நடந்து வரும்போது, வீட்டிலிருக்கும் தூணைத் தட்டிக்கொண்டு வருவதுபோல காட்சி இருக்கும். வீட்டுக்குள்ளே அவருக்கு இருந்த தடையை உணர்த்தும் விதமாக இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் கதாபாத்திரம் சிறுவனாக இருக்கும்போது, கடற்கரையில் ஒரு சிறிய குச்சியை ஏறிட்டுப் பார்க்கும் காட்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. வளைந்த அந்த குச்சி ஈழத்தின் ஒரு பகுதியைக் குறிக்கிறதோ என்று தோன்றியது.
முதல் காட்சியில், மகிழ்ச்சியோடு வயிற்றைத் தொட்டுப்பார்க்கும் அம்மா, கடைசிக்காட்சியில் வருத்தத்தோடு வயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பது போல் படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். ஊருக்கொரு தலைவன் கிடைத்துவிட்டான் என்றாலும் குடும்பத்தில் பிள்ளையைப் பற்றிய கவலை இருக்கத்தானே செய்யும். குறிப்புகள் மூலம் செய்தியைச் சொல்வதில் தான் வல்லவன் என்பதை பல காட்சிகளில் உணர்த்தி விடுகிறார் இயக்குனர் கிட்டு. தலைவர் கதாபாத்திரத்தில் நடித்த குட்டிமணியும், தன் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
தலைவர் நம்பிய பல இயக்குனர்கள் செய்து முடிக்காத வேலையை, கிட்டு கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். தலைவரின் வரலாற்றை எழுதும்போது கிட்டுவின் பெயரும் சேர்த்தே எழுதப்படும் என்பதில் சந்தேகமில்லை.
திரைப்படத்தில் மனதைக் கொள்ளை கொண்ட வசனங்கள்.
“நாம் ஏன் அப்பா திருப்பி அடிக்கவில்லை”
“இனி எவரும் அழ வேண்டாமென்று ஒரு அழுகுரல் கேட்டது”
“பிறந்தான் பிறந்தான் ஒரு சமரசமில்லாத மாவீரன் பிறந்தான்”
“போர்க்கப்பல் என்றால் உடனே போகிறேன் என்று அப்பாவிடம் சொல்லுங்கள்”
நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்த தலைவனின் வரலாறு. தமிழர்களே புரிந்து கொள்ளாத சொந்த இனத்தின் வலி. உரிமைக்குரலுக்கும், ஆதிக்க மனப்பான்மைக்கும் இடையில் நடந்த இனப்படுகொலை. இவை அனைத்தையும் நேர்மையான முறையில் பதிவு செய்திருக்கிறது இந்த திரைப்படம்.
தரமாக பதிவு செய்யப்பட தமிழர்களின் வரலாற்று ஆவணம் மேதகு. அனைவரும் மேதகு திரைப்படத்திற்கு தங்கள் ஆதரவைத் தருமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.