சீமானுக்கு வாக்களிக்க விரும்புகிறேன்! ஏன்? எதனால்?

யார் இந்த சீமான்

“வாய்ப்பில்லை ராஜா, இனிமேல் தமிழ்நாட்டுல திராவிடன்னு சொல்லி ஓட்டு வாங்க வாய்பில்லை ராஜா” என்ற அசரீரி திராவிட காட்சிகள் காதில் ஒலித்தது. இது என்னடா திராவிடத்துக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டில், திராவிட சாம்பார் புளிக்கத் தொடங்கி விட்டதோ என்ற பயத்தில், திராவிட சாம்பாரில் ஊறித்திளைத்த ஊடக வடைகள் எல்லாம் ஒரு கேள்வியை முன் வைத்தன.

யார் திராவிடன்? என்று கேட்டால் பெரியாருக்கும் மற்றும் பல சிறியார்களுக்குமே நிச்சயம் விடை தெரியாது, அதனால் அவர்கள் கேட்ட கேள்வி, யார் தமிழன்?

ஒருவேளை யார் தெலுங்கன்? யார் மலையாளி? யார் கன்னடன்? என்ற கேள்வியை நாம் திருப்பிக் கேட்டிருந்தால், நமது கொடும்பாவியை அந்த கொடும்பாவிகள் ஊரறிய கொளுத்தியிருப்பார்கள். ஆனால் யார் தமிழன்? என்ற கேள்வி, தமிழர்கள் நடுவே எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. யாதும் ஊரே! பக்கத்து மாநிலத்தவன் மட்டும் எங்கள் கேளிர்! என்ற தமிழ்நாட்டு அரசியலில், அந்தக் கேள்வி சலசலப்பை ஏற்படுத்தவில்லையென்பது பெரிய ஆச்சர்யமில்லை.

யார் தமிழன்? என்ற கேள்விக்கு சமரசமில்லாத பதிலாக தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தவர்தான் அண்ணன் சீமான். திராவிட நாற்காலிகளின் கால்கள் அவர் வந்த பின்புதான் சற்று ஆட்டம் காணத் தொடங்கியிருக்கிறது. ஈழப்படுகொலை திராவிட கட்சிகளின் உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டிய பிறகுதான், தமிழ்த்தேசியம் என்பது காலத்தின் கட்டாயமென்று தமிழர்களால் உணரப்பட்டது.

ஒருவேளை ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை திராவிட கட்சிகள் தடுத்து நிறுத்தியிருந்தால், தமிழ்தேசியத்துக்கான தேவை நீர்த்துப் போயிருக்கக்கூடும். ஆனால், இந்த திராவிட கட்சிகள், ஈழம் தொடர்பான செய்திகளைக் கூட வெளியிடத் தயாராக இல்லை என்று உணர்ந்த நொடி தமிழ்த்தேசியத்துக்கான விதை இந்த மண்ணில் ஆழமாக ஊன்றப்பட்டு விட்டது. தமிழ்த்தேசியத்துக்கான விதை போட்டதில் பல தலைவர்களுக்குப் பங்கிருந்தாலும், அரசியல் கட்சியாக வெற்றிகரமாக வளர்ந்து நிற்பவர் அண்ணன் சீமான் மட்டுமே.

சீமான் தமிழர் என்பதாலோ, சிறந்த பேச்சாளர் என்பதாலோ, தமிழ்நாட்டு இளைஞர்கள் நடுவில் அண்ணன் என்ற பெயர் பெற்றதாலோ சீமானை ஆதரிக்கவில்லை. அப்படியானால், அவரை ஆதரிக்க வேறு காரணங்கள் என்னென்ன?

தொழில் வளர்ச்சி திட்டங்கள்


ஒரு வெளிநாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை கட்டி மகிழுந்துகளை உற்பத்தி செய்கிறது. உற்பத்தி செய்த மகிழுந்துகளை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இதுபோன்ற தொழிற்சாலையை அவர்கள் நாட்டில் தயாரித்து ஏற்றுமதி செய்யலாமே, ஏன் செய்யவில்லை? ஏனென்றால், ஒரு மகிழுந்து உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. அப்படியானால், பல்லாயிரம் மகிழுந்துகளை உற்பத்தி செய்ய எத்தனை கோடி லிட்டர் தண்ணீர் வேண்டும். வேலைவாய்ப்பு என்ற ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு மறைமுகமாக நமது இயற்கை வளங்களை அழித்தொழிக்க மட்டுமே இது போன்ற தொழிற்சாலைகள் உதவும். இது போன்ற தொழிற்சாலைகளால் நமக்கு அழிவு வருமே தவிர ஒருபோதும் வளர்ச்சி வராது.

தொழில் வளர்ச்சி என்பது கூட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் கரும்பு வளர்கிறதென்றால், கரும்பு விற்பனை செய்ய சந்தை வேண்டும். கரும்பை சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்குகள் வேண்டும். கரும்பிலிருந்து சர்க்கரை, எத்தனால் போன்ற பல்வேறு வேதிப்பொருட்களைப் பிறிதெடுக்க ஆலைகள் வேண்டும். அந்த ஆலைகளுக்கு தேவையான இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் வேண்டும். இயந்திரங்களுக்குத் தேவையான மின்சாரம், உதிரிபாகங்கள், மென்பொருள் தொழில்நுட்பம் என்று அனைத்துமே அருகிலே கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். இதுபோல ஒவ்வொரு பகுதியிலும், மூலத்தொழில் சார்ந்த பல்லாயிரம் சார்புத்தொழில்கள் உருவாகும். இதுவே கூட்டு வளர்ச்சி.

நாம் தமிழர் முன்வைப்பது இது போன்ற கூட்டு வளர்ச்சிதான். ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்துக்காக கோடிக்கணக்கான பணத்தையும் இயற்கை வளத்தையும் செலவு செய்து, அவர்களுக்குத் தேவையான பொருட்களை நாம் உற்பத்தி செய்து கொடுப்பது வளர்ச்சியாகாது.

பெண்களுக்கு சம உரிமை


பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்தியாவில் 33 ஆண்டுகளுக்கு மேலாக பேசுபொருளாக மட்டுமே இருக்கிற ஒன்று. பெண்ணுரிமைக்கும் இன்றைய அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பே கிடையாது.

“சும்மா வாய் புளிச்சிதோ மாங்காய் புளிச்சிதோன்னு பேசாதீங்க தம்பி, பெண்களுக்கு ஓசி பஸ் பயணம், தகுதியான குடும்பத்தலைவிக்கு மாசம் 1000 ரூபாய் திராவிட மாடல்தான் கொடுத்திருக்கு  .

தகுதின்னா என்னணே?

அது வேற ஒண்ணுமில்ல தம்பி. சாராயத்தை ஊத்திக் கொடுத்துப் பல குடும்பங்களை நாசமாக்கினாலும் எங்களை நம்பி ஓட்டுப் போட்ற அப்பாவிப் பொண்ணுங்களா இருக்கணும் தம்பி. அதுதான் தகுதி. அதுதான் திராவிட மாடல்.

திராவிட ஆட்சியில் பெண்ணுரிமை என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்னுதாரணமாய், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளித்த பெருமை சீமான் என்ற ஒற்றைத்தலைவனை மட்டுமே சேரும். பெண்ணுரிமை என்று பொங்கும் திராவிட கட்சிகள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க முன்வருமா? நிச்சயமாக வாய்ப்பில்லை.

தற்சார்பு பொருளாதாரம்

விதைக்கு ஒருவனிடம் கையேந்த வேண்டும், உரத்துக்கு வேறொருவனிடம் கையேந்த வேண்டும், அதனை சந்தைப்படுத்த மற்றொருவனை நாட வேண்டும். நாம் விளைவித்தப் பயிருக்கு மாற்றான் ஒருவன் விலை நிர்ணயம் செய்வான். இதில் விவசாயிக்கு என்ன பயன்? மாற்றானது பொருளாதாரம் வளர நமது விவசாயிகள் ஏன் உழைக்க வேண்டும்?

பொருளாதாரம் என்றாலே, படித்த மாமேதைகளுக்கு மட்டுமே புரியும் விவகாரம் என்ற நிலையை மாற்றி, சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் தற்சார்பு பொருளாதாரம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியவர் அண்ணன் சீமான் மட்டுமே.

வீட்டில் ஆடு மாடு வளர்க்கிறோம். அதன் சாணத்தை வயலில் எருவாகப் போடுகிறோம். வயலில் அறுவடை செய்த பயிர்களை உள்ளூர் சந்தையில் நாமே விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம். அதில் வந்த லாபத்தில் வியாபாரத்தைப் பெருக்குகிறோம். இது ஒரு சுழற்சி முறையிலான வளர்ச்சி. யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. இதுதான் தற்சார்பு பொருளாதாரம்.

சுற்றுப்புறச்சூழல் பற்றிய அக்கறை


கேரளாவில் கட்டப்படும் விழிஞம் துறைமுகத்துக்கு அவர்கள் மாநிலத்தில் ஒரு கூழாங்கல் கூட எடுக்கப்படுவதில்லை. அதற்குத் தேவையான ஒட்டுமொத்த கற்களும் கன்னியாகுமரியிலிருந்து கொண்டு போகப்படுகிறது. கர்நாடகாவில் அணை கட்டுவதற்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் தமிழ்நாட்டில் காவேரி ஆற்றிலிருந்தும் வைகை ஆற்றிலிருந்தும் மணல் அள்ளப்படுகிறது.

எல்லா மாநிலங்களும் விரட்டியடித்தபின் கடைசியாக தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. அணுக்கருக் கழிவுகளைப் புதைக்கக்கூட எந்த மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசியாக அதுவும் தமிழ்நாட்டிலேயே புதைக்கப்படுகிறது. இதுதான் சுற்றுப்புறச்சூழல் பற்றி திராவிட அரசாங்கத்தின் நிலைப்பாடு.

எதிர்க்கட்சிகளை அரசியல் நாகரீகம் ஏதுமின்றி மாறிமாறி திட்டிக்கொள்ளும் கேடுகெட்ட அரசியலை மட்டுமே அரங்கேற்றியது திராவிட மாடல் அரசியல். சுற்றுப்புறச்சூழல் பற்றி அரசியல் மேடைகளில் பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒற்றை ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே. காட்டில் வாழும் விலங்குகளும், பறவைகளும் நமது சுற்றுப்புறத்தை எப்படிப் பாதுகாக்கின்றன என்று மக்களுக்கு எளிய மொழியில் புரிய வைத்த பெருமை சீமான் அண்ணனையே சேரும்.  

2015ம் ஆண்டுமுதல் 2020ம் ஆண்டுகளுக்குள் மட்டும் 16 லட்சம் ஏக்கர் காடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனுக்குத் தேவையான ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 4 மரங்கள் வேண்டுமாம். அப்படியானால், காடுகள் எந்த அளவுக்கு விரிவாக்கப்பட்ட வேண்டுமென்று உணருங்கள். “நூறு மரம் நட்டு, ஒரு மரம் வெட்டு” என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று. மலையும், மரங்களுமின்றி நாமில்லை என்ற உண்மையை உரக்க சொன்னவர் சீமான்.

சுற்றுப்புறச்சூழல் என்றாலே அண்ணன் சீமானின் முகம்தான் முதலில் நினைவுக்கு வருமளவுக்கு அது குறித்து மேடைகளில் பேசியிருக்கிறார். மற்றவர்களை நாகரீகமின்றி திட்டும் அரசியல்வாதி வேண்டுமா? நமது வருங்காலத்தைக் குறித்து சிந்திக்கும் அரசியல்வாதி வேண்டுமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ஈழ ஆதரவு


திபெத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகளுக்கு ஆடம்பர வாழ்க்கை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. வங்காளதேசத்திலிருந்து இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த மக்கள் வாழ்நாள் முழுவதும் அகதிகளாக மட்டுமே  இருக்க  வேண்டுமா? ஈழத்து மக்கள் நாடிழந்து வீடிழந்து நிற்கும்போது, ரத்தம் கொதித்திருக்க வேண்டாமா? அவர்களை அழித்தொழித்த சிங்கள பேரினவாதத்தை ஒடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்க வேண்டாமா? அங்கு நடந்தது இனப்படுகொலைதான் என்று உலக நாடுகள் மத்தியில் நிரூபித்திருக்க வேண்டாமா?

தமிழ்நாட்டைத் தமிழர் ஆட்சி செய்திருந்தால், ஈழத்தமிழர்களின் வேதனை புரிந்திருக்கும். திராவிட ஆட்சி நீடிக்கும் வரை, ஈழத்தமிழர்கள் வாழ்வில் மாற்றம் வராது. நம் தொப்புள்கொடி உறவுகளின் துயர் நீக்க, நம் மண்ணில் திராவிட வேர்களை அறுத்தெறிய வேண்டும். ஈழத்தில் நம் ரத்த உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, மழை விட்டாலும் தூவானம் விடவில்லையென்று, கொலைகளை மழையுடன் ஒப்பிட்ட திராவிட துரோக அரசியலுக்கு மத்தியில், நம் இனம் செத்து மடிந்ததைக் கண்டு கொதித்தெழுந்த மானத்தமிழர்களில் அண்ணன் சீமானும் ஒருவர். ஈழத்தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சி வர நாம் தமிழர் கட்சியின் ஆட்சி மலர்வது காலத்தின் கட்டாயம்.

கல்வியில் முன்மொழியும் மாற்றங்கள்

இன்று எல்லோரும் படிக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன. இதற்கு மேல் கல்வியில் வேறென்ன வேண்டுமென்று சிந்திக்கிறீர்களா? அரசுப்பள்ளிகள் இருக்கிறது, ஆனால் அவை எவ்வாறு இருக்கிறது என்பதுதான் பிரச்னை. போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மூடப்படும் நிலையில் எத்தனையோ பள்ளிகள். இடிந்து விழும் நிலையில் பல பள்ளிகள். கழிப்பறைக்குள் கால் வைக்க முடியாத அளவுக்கு நாற்றமெடுக்கும் பள்ளிகள். இப்படி பல்வேறு குறைகளுடன்தான் அரசுப்பள்ளிகள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தமிழே  படிக்காமல் ஒரு மாணவனால் பட்டம் வாங்கிவிட முடியுமென்றால், தமிழ்நாட்டில் தமிழின் நிலையைப் புரிந்து கொள்ளுங்கள். திராவிட மாடலில் தமிழுக்கு இடமில்லை என்பதே நிதர்சனம்.

நாம் தமிழர் கட்சியின் கல்விக்கொள்கைப்படி, தமிழில் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை கிடைக்கும். முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும். இதனால் அரசுப்பள்ளிகளின் தரம் உயரும். எல்லோரும் தனியார்ப் பள்ளிகளை நோக்கி ஓடுவது குறையும். தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பப்படி பள்ளிக்கட்டணத்தை நிர்ணயிக்க முடியாது. தனியார் பள்ளிகளின் நிர்வாகமும் அரசும் சேர்ந்து நிலையான ஒரு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழ் வளர ஒரு பச்சைத்தமிழனின் ஆட்சிதான் வேண்டும். யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது சக தமிழர்கள் மத்தியில் முதலில் சாத்தியமாகட்டும். அதன்பிறகு, வேண்டுமானால் உலகையே அணைத்துக்கொள்ளலாம்.

விவசாயத்திற்கான ஆதரவு 

உள்நாட்டில் உற்பத்தியான தரமான தேயிலை, வெளிநாட்டுக்காரன் குடிப்பதற்கு மட்டும். நாம் குடிப்பதற்கு, Premium Dust Tea. குடிப்பது குப்பை, அதிலென்ன Premium? இயற்கை உரம் போட்டு உற்பத்தி செய்த உயர்தர அரிசி வெள்ளைக்காரர்கள் சாப்பிட மட்டும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் போட்டு உற்பத்தி செய்யப்பட்ட அரிசி, நாம் உண்பதற்கு. ஏற்றுமதித்தரம் என்பதே எவ்வளவு பெரிய அநியாயம். நம் நாட்டில் விளைந்த தரமான பொருட்கள் நமக்கே கிடைக்காத போது, யாரோ வெளிநாட்டுக்காரனுக்கு  தரமான பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியமென்ன?

உள்நாட்டில் ஏதேனும் உணவுப்பொருளுக்குத் தட்டுப்பாடு என்றால், தரமற்ற பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டு தற்காலிகமாக தட்டுப்பாடு சரி செய்யப்படும். எப்போதும் ஏதோ ஒரு உணவுப்பொருள் தட்டுப்பாடு இருக்கும். அதன் விலை பத்து மடங்கு உயர்ந்திருக்கும். இதுதான் இன்றைய நிலை. இத்தனை அரசியலுக்கும் பின்னால், விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித மாற்றமுமில்லை. தற்கொலை ஒன்றே அவர்களின் கடைசி முடிவாக இருக்கிறது. இதுதான் விவசாயத்தின் நிலை.

ஆனால், நாம் தமிழர் கட்சி விவசாயத்தை அரசுத்தொழிலாகவே அங்கீகரிக்கிறது. விவசாயப் பொருட்களுக்கான அடிப்படை விலையை விவசாயிகள் நிர்ணயித்துக்கொள்ள முடியும். விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். விவசாயத்துக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் வளர்த்தெடுக்கப்படும். விவசாயம் பெருமைமிகு தொழிலாக மாறும். விவசாயத்தில் லாபம் பெருகும்.

தண்ணீர் பற்றிய நிலைப்பாடு

வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் நடந்து சென்று, அங்கு வெட்டப்பட்ட பெரிய குழியில் ஒரு குடம் ஊறிய தண்ணீருக்கு ஊரே காத்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல ஊர்களில் இன்றைய நிலவரம் இதுதான். ஆனால் கோலா நிறுவனங்கள் தாமிரபரணியில் தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கிறது. குடிமக்களுக்குக் குடிக்கத் தண்ணீரில்லை, ஆனால் கோலா நிறுவனங்களுக்குத் தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

கோலா நிறுவனங்களுக்கு பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் 1 ரூபாய்க்குக் கிடைக்கும், ஆனால் அதே நீர் நமக்கு வரும்போது ஒரு லிட்டர் 20 ரூபாய். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி குடிதண்ணீர் விற்பனைக்கல்ல. தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

தமிழகத்தில் ஓராண்டிற்குக் கிடைக்கும் மழைநீர் 4,000 டி.எம்.சி. அதில் நாம் பயன்படுத்தும் நீரின் அளவு 1,500 டி.எம்.சி. வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,500 டி.எம்.சி. இதில் ஆற்று நீரில் இருந்து கிடைக்கும் நீர் 850 டி.எம்.சி. கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு 450 டி.எம்.சி. இவ்வாறு நமக்கு இயற்கையாகக் கிடைக்கிற நீர்வளம் சரியாக பராமரிக்கப்படாமல் நீர்ப்பற்றாக்குறையென்று அண்டை மாநிலங்களில் நீருக்காகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். நமது நீர்வளங்கள் சரியாக பராமரிக்கப்பட்டால் நமது நீர்த்தேவைகளை நாமே நிறைவு செய்துகொள்ள முடியும்.

வாக்குக்கு பணம் கிடையாது


ஆட்களின் சட்டைப்பையில் பணம் ஏறினால்தான் ஆட்காட்டி விரலில் மை ஏறும் என்பது நேற்று வரையுள்ள அரசியல். இன்றைய தலைமுறையினரிடம் வாக்குக்குப் பணம் என்பது செல்லுபடியாகாது. விழிப்புணர்வுள்ள தலைமுறை இன்றைய தலைமுறை. வெளிநாட்டின் வளர்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற இன்றைய தலைமுறைப் பிள்ளைகளை காசு பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட முடியாது. அவர்களுக்குத் தேவை நாட்டின் வளர்ச்சி. அவர்கள் அரசாங்கத்துக்கு வரிகட்ட ஆயத்தமாக இருக்கிறார்கள். வரிகட்டியதற்கு ஏற்ற வளர்ச்சியை அவர்கள் கண்களால் காண வேண்டும். இல்லையேல், அந்த ஆட்சியாளர் அடுத்த முறை ஆட்சிக்கட்டிலில் அமர முடியாது. இதுதான் நாளைய அரசியல். வாக்குக்குப் பணமென்றால் நாளை பிணம் கூட ஒதுங்கிக்கொள்ளும்.

நாம் தமிழர் கட்சி பணமேதும் கொடுக்காமல் 7 சதவீத வாக்கினைப் பெற முடிகிறதென்றால், முன்னேற்றம் ஒன்றை மட்டுமே விரும்பும் இளைய தலைமுறையினர்தான் காரணம். ஒரு பொட்டலம் பிரியாணிக்காக அரசியல் கூட்டங்களுக்கு லாரி ஏறிச்செல்லும் நேற்றைய தலைமுறை வேண்டுமானால் வாக்குக்கு காசு என்றால் வாயைப் பிளக்கலாம், ஆனால் ஐந்து பைசா காசு கூட கொடுக்காமல் தனக்குப் பிடித்த நடிகருக்காக ரத்தம் கொடுக்கும் இன்றைய தலைமுறையிடம் வாக்குக்கு காசு என்பது வாய்க்கரிசி போடக்கூட உதவாது. நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கிடையாது என்று சொன்னது பல விடலைகளுக்குப் பிடித்துப்போனது, ஆனால் சில சுடலைகளுக்குக் கொஞ்சம் வியர்த்துப்போனது.

ஒரு நொடி சிந்தியுங்கள்


வாக்கு செலுத்துமுன் ஒரு நொடி சிந்தியுங்கள். உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத்தேவைகளில் தன்னிறைவடைந்த மனிதர்களால்தான் அடுத்தத் தலைமுறையைக் குறித்து சிந்திக்க முடியும். நாம் மட்டும் வாழ்ந்து தீர்க்க இந்த பூமி நமக்கானதல்ல, அது இந்த பூமியில் இருக்கிற, வரப்போகிற அனைத்து உயிர்களுக்குமானது. வருங்காலத் தலைமுறையை மனதில் வைத்து ஏரி குளங்களை உருவாக்கிச் சென்ற தமிழர் மரபில் வந்தவர்கள் நாம். நமது வருங்கால சந்ததிகள் வாழ சிந்தித்து வாக்களிப்போம், நாம் தமிழர்.

பின்னிணைப்புகள் 

  1. https://www.naamtamilar.org/policies/
  2. தமிழ்த் தேசிய இனம் எதிர் கொள்ளும் சிக்கல்களும் – தீர்வும் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு | நாம் தமிழர் கட்சி
  3. நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு  | நாம் தமிழர் கட்சி
  4. ஈழம் – எங்கள் இனத்தின் தேசம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு  | நாம் தமிழர் கட்சி (naamtamilar.org)
  5. கல்விக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு  | நாம் தமிழர் கட்சி (naamtamilar.org)
  6. நீர்வளப் பெருக்கம் – நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு | மக்களரசு | நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்