அவளொன்றும் ஊர்போற்றும் உலக அழகியில்லை
அந்தப் பட்டங்கள் எதுவும் அவளுக்குத் தேவையுமில்லை
உதட்டுச்சாயங்கள் அவள் உதடுகளை பாழ்ப்படுத்தியதில்லை
ஆயிரம் மெய் பேசும் அவள் கண்கள் மையேதும் கண்டதில்லை
கண்களுக்கு வரப்பாய் நின்ற புருவங்களை ஒருபோதும் செதுக்கியதில்லை
ஆலம்விழுதாய் வளர்ந்துகிடந்த கூந்தல் அழகுநிலையத்தைத் தேடியதில்லை
வீட்டுச்சுவற்றைத் தவிர முகத்தில் ஒருபோதும் வெள்ளையடித்ததில்லை
தண்ணீர்க் குடத்தைச் சுமக்க மறுக்கும் மெல்லிடையும் அவளுக்கில்லை
கால்கைகளில் வளர்ந்திருக்கும் முடிகள் அவள் அழகை குறைத்ததில்லை
பிறைபூத்த நகங்களுக்கு வண்ணமேதும் பூசியதில்லை
அவள் பெண்மை என்ற இலக்கணங்களுக்குள் அடங்க மறுக்கும் காட்டாறு
மென்மை என்ற வரையறைக்குள் ஒடுங்க மறுக்கும் அவள் பண்பாடு
அழகுசாதனப் பொருட்கள் ஏதும் அவள் கையில் இல்லை
அவையேதும் இல்லாமலே அவள் அழகின் எல்லை
———————————
நான்தான் XX குரோமசோம் பேசுகிறேன். அவள் பெண்ணென்று உலகறிய XX குரோமசோம் என்ற நானே சாட்சி. அதைத் தவிர வேறு எந்தவித புறக்காரணிகளும் அவளை இழிவுபடுத்த மட்டுமே உதவும். இயல்பிலே அவள் அழகுதானே, அவளுக்கு ஏன் அழகுசாதனங்கள். உதட்டில் சாயம் பூசிக்கொண்டால்தான் அழகென்று யார் சொன்னது? சிவப்பழகு என்ற வார்த்தையிலே கருப்பென்றால் அசிங்கமென்று இலைமறையாய் யார் சொன்னது? உலக அழகிகள் என்று சிலரைத் தரம்பிரிப்பது, மற்ற பெண்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைப்பதைத் தவிர வேறு எதற்கு உதவும்?
பெண்மை, மென்மை, மெல்லிடை, சிவப்பழகு என்று பெண்ணுக்கு ஆயிரம் இலக்கணங்கள் வகுக்கக் காரணமென்ன? XX குரோமசோம் என்ற அறவியல் தவிர அவள் மீது பூசப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் பின்னால் மறைந்திருப்பது கோடானுகோடி வர்த்தகமின்றி வேறில்லை. அழகுசாதனப் பொருட்களையோ, அழகுநிலையத்தையோ நாடும் முன் இனி ஒருநொடி சிந்தியுங்கள், அவையேதுமின்றி நீங்கள் அழகுதானென்று.
2 Responses
பெண்களுக்கு அலங்காரம் தவறில்லை.. அவர்கள் கண்ணை மறைக்கும் வர்த்தக வலை தேவையற்றதுதான். நல்ல தகவல். ஆழமான பார்வை.
வாழ்த்துகள் ராஜேஷ்..
கருத்தளித்தமைக்கு நன்றி குமார்.