Table of Contents
Toggleநடுகல் என்ற முதல் கோயில்
இயற்கை வழிபாடுதான் உலகின் முதல் வழிபாடு, அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மதத்தின் துவக்கம் என்பது அதுதான். இது எல்லோரும் அறிந்த உண்மைதான். நாம் சற்று முன்னோக்கி செல்வோம். அது மக்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலம். உணவுக்காகவோ, உறைவிடத்துக்காகவோ, பிற குழுக்களைத் தாக்க வேண்டிய கட்டாயம். அதில் வீரமாக சண்டையிட்ட மனிதர்கள் ஞாபகார்த்தமாக ஒரு கல் நட்டு வைக்கப்படும். அதன் பெயர் நடுகல்.
அங்கு வாழ்ந்த மக்கள் அந்த நடுகல்லினால் சில நன்மைகள் நடப்பதாக நம்பினார்கள். அதன் முடிவாக அந்தக் கல்லுக்கு சில வழிபாட்டு முறைகள் வந்து சேர்ந்தன. பின், போருக்கு செல்வதற்கு முன்பு அந்தக் கல்லை கும்பிட்டு சென்றால் போரில் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள். அதில் சிலருக்கு ஒரு குரூர சிந்தனை உருவானது. இத்தனை நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவனுக்கே இத்தனை ஆற்றல் இருக்கிறதென்றால், போருக்கு செல்வதற்கு சற்று முன்பு ஒருவனை பலியிட்டால் போரில் கட்டாயம் வெற்றிதான். ஒருவனை தேர்ந்தெடுத்து பலியிட்டிருக்கலாம் அல்லது யாரோ ஒருவன் தானாக முன்வந்து உயிரை விட்டிருக்கலாம். உலகின் முதல் தற்கொலை இப்படித்தான் துவங்கியிருக்க வேண்டும்.
அகழ்வாராய்ச்சியில் இரண்டு விதமான நடுகற்கள் கிடைத்திருக்கின்றன.ஒன்று வீரனின் உருவம் பதித்த கல். மற்றொன்று ஒரு வீரன் தனது கழுத்தைத்தானே வாளால் வெட்டுவது போன்றது. இந்த வழிபாட்டு முறைதான், சிறுதெய்வ வழிபாடு என்ற வகையில் இன்று வரை தொடர்கிறது. சில சாவுகளும் தற்கொலைகளும்தான் இன்றைய வழிபாட்டு முறைகளுக்கு முன்னோடிகள் என்றால் நம்புவது கடினம்தான். சாவில் தொடங்கியதாலோ என்னவோ மதம் என்பது காவு வாங்கும் விதமாகத்தான் என்றும் இருக்கிறது. அதைத்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
முதல் முக்கிய பலி
கைபர் போலன் கணவாய் வழியாகத்தான் ஆரியர்கள் நம் நாட்டுக்குள் வந்தார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் முகலாயர்கள் போல போரிட்டு வென்று உள்ளே நுழையவில்லை. அவர்கள் ஆடுமாடுகள் மேய்க்கிற கூட்டம். அவர்களுக்கு போர் செய்யும் அளவுக்கு வீரம் கிடையாது. ஆனால் வெள்ளையாக இருப்பார்கள். நம் மக்களுக்கு ஒருவனை நல்லவன் என்று நம்புவதற்கு அதுவே மிகப்பெரிய தகுதி. அதுபோக, அவர்கள் வேட்டையாடப் போகும்போது சில வழிபாடுகளை செய்வார்கள். அப்படி செய்தால் நல்ல வேட்டை கிடைக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. புரியாத மொழியில் சிரித்துக்கொண்டே நீ முட்டாள் என்று நம்மை திட்டினாலும் நமக்கு அது மந்திரம்தான். அவர்கள் பேசிய மொழியும் சிலருக்கு மந்திரம் போலதான் இருந்தது. இது மக்களுக்குப் பிடித்ததோ இல்லையோ வேட்டைக்கு செல்லும் சில மன்னர்களுக்குப் பிடித்துப் போனது. அவர்கள் சில ஆரியர்களை அழைத்து வேட்டைக்குப் போகும் முன்பு மந்திரங்கள் சொல்ல சொன்னார்கள். வேட்டை கிடைத்தாலே ஆரியர்கள் சொன்ன மந்திரங்கள் வேலை செய்கிறது என்று நம்பினார்கள்.
ஆரியர்களுக்கு எந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றாலும் யாகம் செய்வார்கள். யாகம் என்றால் ஒன்றும் இல்லை, மாட்டை வெட்டித் தீயில் போட்டு அதைத் தின்று விடுவார்கள் அவ்வளவுதான். பெரிய யாகம் என்றால் ஆயிரக்கணக்கில் மாடுகளை வெட்டுவார்கள். இதனால் உழவர்களுக்கு உழவு செய்ய மாடுகள் பற்றாக்குறை ஆனது. இதை உழவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.
உழவர்களுக்குத் துணையாக ஒருவர் வந்தார். அவர் நாம் நினைப்பதுபோல் போதி மரத்தடியில் அமர்ந்து தவம் மட்டும் செய்தவரல்ல. ஆரிய மத நம்பிக்கைகளை உடைத்தெறிந்தவர். கடவுள், ஆன்மா போன்ற மனிதனை குழப்பும் விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவர். யாகங்கள், மந்திரங்கள் போன்ற மூடநம்பிக்கைகளை வேரறுத்தவர். அவர் சித்தார்த்தர் என்ற புத்தர்.
ஆரியர்கள் வாழ்ந்த சொகுசு வாழ்க்கைக்கு புத்தர் என்ற மாமனிதர் வடிவில் ஆபத்து வந்து சேர்ந்தது. அவர்கள் புத்தரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள். புத்தரும் அவரது சீடர்களும் யார் உணவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வார்கள். அது புலால் உணவாக இருந்தாலும். அதுதான் அவர்கள் கொள்கை. அன்று புத்தருக்குக் கொடுக்கப்பட்டது நஞ்சு வைக்கப்பட்ட பன்றிக்கறி. அதை அறிந்திருந்த புத்தர், தனக்கு மட்டும் அந்த உணவைப் பரிமாறுமாறும், சீடர்களுக்குக் கொடுக்க வேண்டாமென்றுக் கேட்டுக் கொண்டார். வந்தவர்களுக்கு இலக்கு புத்தர் மட்டும்தான் அதனால் அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதனை உண்டு புத்தர் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். உலகில் மதவெறிக்கு பலியான முதல் புனிதர் புத்தர்தான். இவருக்குப் பின்புதான் இயேசு.
ஆசீவகத்தைக் காவு வாங்கிய ஓவியம்
நம் மண்ணில் சித்தர் வழிபாட்டு முறை மிகப் பழமையானது. அதுவும் குறிப்பாக தமிழகத்தில். சித்தர்கள் பொதுவாக இயற்கையாக அமைந்த குகைகளில்தான் வாழ்ந்தார்கள். மக்கள் அவர்களிடம் ஆசி பெறுவதற்கு அங்குதான் செல்வார்கள். அதனால்தான் அந்த இடங்களுக்கு ஆசீவகம் என்று பெயர். ஆசீவகம் என்ற மதத்தை உருவாக்கியவர் மற்கலி கோசாலர் என்ற தமிழர். எல்லோருக்கும் புரியும்படி சொல்வதானால் ஐயனார். தமிழ்நாட்டில் கிராமங்கள்தோரும் வழிபடப்படும் ஐயனார்தான் ஆசீவக மதத்தை நிறுவியவர். ஆசீவகம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பரிட்சயமான ஒரு கொள்கை. ஆசீவகர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள். ஆனால் ஒருவர் வரைந்த ஓவியத்தால் அது கிட்டத்தட்ட அழியும் நிலைக்கு வந்துவிட்டது.
அந்த ஓவியருக்கு யார் மனதையும் காயப்படுத்தும் எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அன்று அவர் வரைந்த ஓவியம் 18000 உயிர்களைக் காவு வாங்கப் போகிறதென்று கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் வரைந்த ஓவியத்தில் புத்தர், மற்கலி கோசாலரைக் காலில் விழுந்து வணங்குவதுபோல் வரையப்பட்டிருந்தது. ஒருவேளை புத்தரும் மற்கலி கோசாலரும் சமகாலத்தில் வாழ்ந்து, ஒருவரை ஒருவர் காலில் விழுந்து வணங்க சொன்னால் தாராளமாக வணங்கியிருப்பாரகள். ஏனென்றால் அவர்களுக்கு மதம் பிடிக்கவில்லை. அதனை வரைந்தவர் ஆசீவக நெறிமுறையைப் பின்பற்றுபவராக இருந்திருக்கலாமென்று வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்.
சரி ஏதோ ஒரு ஆர்வத்தில் வரைந்துவிட்டார். அதை அலமாரியில் வைத்துப் பூட்டியிருந்தால் தலை தப்பியிருக்கும். அதை அவர் நண்பர் ஒருவரிடம் காட்ட, அவர் அரசரிடம் சென்று முறையிட, அவர் வரைந்தவர் தலையை சீப்பால் அல்ல வாளால் சீவுவதற்கு உத்தரவிட்டார். அது போதாதென்று ஆசீவகத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் இதேபோல் சீவிவிடுங்களென்று மனம் கலங்காமல் கூறிவிட்டுச்சென்றார். கொத்துக்கொத்தாக 18000 ஆசீவகர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னும் அவர்களை ஒழிக்க முடியாமல், ஆசீவகர்கள் தலையைக் கொண்டு வந்தால் பரிசு என்று அறிவித்து விட்டார். எத்தனைத் தலைக்கு பரிசு வழங்கப்பட்டது என்ற செய்தி கிடைக்கவில்லை. கொன்று குவிக்கச் சொன்னவர் வேறு யாருமில்லை, தனது 99 சகோதரர்களையும் ஒருவர் விடாமல் கொலை செய்துவிட்டு ஆட்சிக்கு வந்த அசோகர்தான். ஒரு தருணத்தில், அசோகரது சொந்த அண்ணனது தலையை, ஆசீவகர் தலையென்று ஒருவர் வெட்டிக் கொண்டுவந்த பின்பு இந்த கொலைகள் நிறுத்தப்பட்டன. புத்தமதத்தைத் தழுவிய பின்புதான் இத்தனை கொலைகளும்.
மாயன் கலாச்சாரமும் கத்தோலிக்கப் பாதிரியாரும்
ஆண்டு 1566. அவர் பெயர் டியகோ டீ லேண்டா (Diego De Landa). அவர் ஒரு கத்தோலிக்கப் பாதி்ரியார். அந்த பாதிரியார் ஸ்பானிஷ் மொழியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். ஆங்கில மொழிக்குக் கொம்பு முளைத்தது போல இருக்கும். இருந்தாலும் அதை வாசிப்பது நமக்கு முடியாத காரியம். அவர் எழுதியது அழிந்து போன ஒரு கலாச்சாரத்தைப் பற்றி. மாயன்களின் கலாச்சாரத்தைப் பற்றிதான் அவர் எழுதிக் கொண்டிருந்தார். மாயன்களின் கலாச்சாரத்தைத் தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்தது அவர்தான்.
நாம் காலச்சக்கரத்தை 17 ஆண்டுகள் பின்னோக்கி ஓட்டவேண்டும். அதே டியகோ அப்பொழுதுதான் மாயன்களின் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். அவர் வந்தது என்னவோ மதத்தைப் பரப்புவதற்குதான். இந்த மாயன்களுக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருந்தது. டியகோ சொன்ன அறிவுரைகளை எல்லாம் காதுகுளிர கேட்டுவிட்டு அவர்களில் பெரும்பாலானோர் மதம் மாறியிருந்தார்கள். ஆனால் வீட்டுக்கு போனதும் அவர்கள் குலதெய்வத்தையும் வணங்கினார்கள். அது சிலை வழிபாடு. இதைக் கண்டுபிடித்த டியகோ, அந்நியன் படத்தில் வரும் விக்ரமாகவே மாறிவிட்டார் . சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள், சோற்றுக்கு உப்புப்போடாதவர்கள் என்று அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் அந்நியன் விக்ரமுக்கும் டியகோவுக்கும் சில வேறுபாடுகள் மட்டுமே உண்டு. அந்நியன் விக்ரம், குற்றம் செய்தது அவ்வாள் என்றால், அவர்களை மன்னித்து விட்டுவிடுவார். ஆனால் டியகோ, அப்படி சட்டதிட்டங்கள் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. இயக்குனர் சைக்கோ கில்லர் சங்கர் போல கருடபுராணம் எதுவும் படிக்காமலே சைக்கோ கொலைகள் செய்வதில் வல்லவராக இருந்தார் டியகோ. குலதெய்வ வழிபாடு செய்த மாயன்களைப் பிடித்து இரண்டு கைகளையும் கட்டித் தொங்கவிட்டு, போதாதென்று கால்களில் கல்லையும் சேர்த்து கட்டிவிடுவார். அப்புறம் ரத்தம் ஒழுக ஒழுக அடி விழும். இதற்குப் பிறகும் அடங்காதவர்கள் மேல் சூடான மெழுகு ஊற்றப்படும். கிட்டத்தட்ட 4500 மாயன்களை இப்படி சித்ரவதை செய்தார் என்று சொல்கிறார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.
இதைவிட அவர் செய்த கொடுமை இன்னொன்று உண்டு. மாயன்கள் கலாச்சாரம் தொடர்பான நூல்கள், சிலைகள், கல்வெட்டுகள் போன்ற அனைத்து ஆவணங்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், இது போன்ற கலாச்சார சான்றுகள் இருப்பதால்தான் மாயன்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள். இதனை அழித்துவிட்டால் அவர்களை நல்வழியில் கொண்டுவர முடியும். அதாவது அவர் விரும்பும் மதத்துக்கு மாற்ற முடியும் என்று அர்த்தம். ஒருவரது மதப்பற்றினால் மிகப்பழமையான கலாச்சாரமே அழிந்து போனது.
நின்றசீர் நெடுமாறன் கொன்ற சமணர்கள்
அந்த மனிதர் நாயன்மார்களுள் ஒருவர்தான். நின்றசீர் நெடுமாறன் என்பது அவர் பெயர். ஒழித்துக்கட்டுவதற்காகவோ என்னவோ, முதலில் சமண மதத்தை சிலகாலம் தழுவியிருந்தார். அவர் மனைவிக்கு அது அறவே பிடிக்கவில்லை. இல்லற தர்மப்படி நெடுமாறன்தான் அவர் மனைவியிடம் காதுகள் கசக்குமளவுக்கு உபதேசம் கேட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது வேறு. அவர் மனைவி திருஞானசம்பந்தரை அழைத்து வந்து சமணர்களை அவருடன் வாதம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அரசனே சமணமதத்தில் இருக்கும்போது சம்பந்தர் என்ன, சகுனியே வந்தாலும் சமாளித்துவிடலாம் என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டுவிட்டார்கள். சம்பந்தர் வாதத்தில் வென்றுவிட்டார். வாதமென்றால் ஏதோ பேச்சுத்திறமை, பட்டறிவு, படிப்பறிவு என்றெல்லாம் தப்புக்கணக்கு போட்டு விடாதீர்கள். திருஞானசம்பந்தன் செய்தது அனல்வாதம், புனல்வாதம். புரியும்படி சொல்வதானால், பித்தலாட்டம். திருஞானசம்பந்தனின் பித்தலாட்டத்திற்கு, அதற்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்சநஞ்சமல்ல, 8000 உயிர்கள். அத்தனை சமணர்களையும் கழுவிலேற்றிக் கொன்றார்கள். கழுவிலேற்றுவது என்றால் என்னவென்று அறியாதவர்கள் இணையதளத்தை சிறிது புரட்டிப்பார்க்கவும்.
போப் வைத்த முதற்புள்ளி
1095 ம் ஆண்டில், பைசாண்டியப் பேரரசன் (Byzantine Emperor) முதலாம் அலெக்சியஸ் கொம்னெனாஸ் (Alexios I Komnenos), துருக்கியின் சில பகுதிகளைத் தாக்குவதற்கு போப் இரண்டாம் அர்பனிடம் படையுதவி கேட்டார். அவர் சொன்ன காரணம், முஸ்லிம்கள் ஆட்சியில் கிறிஸ்தவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அது உணமையல்ல. அன்று கிறிஸ்தவர்களுக்குள்ளேயே நிறையவே பிரிவுகள் இருந்தன. அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அலெக்ஸசியஸுக்கு அந்தப் பகுதி வேண்டும். அதுதான் உள்நோக்கம். அதற்குதான் படையுதவி கேட்டார்.
போப் மத போதகர், அவர் எப்படி படை வைத்திருப்பார் என்று நினைக்க வேண்டாம். போப் என்றால் அரசருக்கு சமமானவர். உலகம் உருண்டை என்று சொன்னாலே மதநம்பிக்கையை இழிவுபடுத்திவிட்டான் என்று உயிரோடு கொழுத்தச் சொல்லிவிடுவார். கசப்பான உண்மைதான். உலகம் உருண்டை என்று சொன்னதற்கே பலர் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
போப் என்பது அவ்வளவு அதிகாரமிக்க பதவி. போப் மக்களிடையே போருக்கான தேவையை விளக்கினார். பின்பு படையுதவி செய்ய ஒப்புக்கொண்டார். அன்று சிலுவைப் போருக்கு வைக்கப்பட்ட ஆரம்பப்புள்ளி, இருநூறு ஆண்டுகளுக்கு போர்கள் நடந்தன. ஒட்டுமொத்தமாக 30 இலட்சம் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டன.
யானையும் மதமும்
மதப்படுகொலைகளைப் பட்டியலிட வேண்டுமென்றால் தனிப்புத்தகம் எழுதவேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் இது அரங்கேறியிருக்கிறது. மதத்தின் பெயரால் இத்தனைப் படுகொலைகளா என்பது ஆச்சர்யம்தான். ஆனால் அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் இந்த மதங்கள் யாரைக் கடவுளாக வழிபடுகிறதோ, அவர்கள் யாரும் ஒரு மதத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடவேயில்லை.
பிரச்னை உருவாகும் இடம் இங்குதான். மற்கலி கோசாலர், புத்தர், மகாவீரர், இயேசு என்று மனித மனங்களின் ஆழங்களைக் கண்டறிந்த அனைவரும் குருவாக இருந்து இன்னொரு குருவை உருவாக்கியபோது, இங்கு மதங்கள் பிறக்கவில்லை. ஆனால், என்று குருக்கள் சீடர்களை உருவாக்கினார்களோ, அன்று மதம் பிறந்தது. இதுதான் பிரச்னையின் ஆணிவேர். அந்த ஆணிவேரில் மதம் என்ற சமயம், சமயம் பார்த்து முளைத்துவிடுகிறது.
மதம் அன்பையும் அறத்தையும் போதிக்குமென்றால், ஒரு மதத்தைப் பின்பற்றுபவருக்கு இன்னொரு மதத்தை இழிவுபடுத்தும் எண்ணம் வளர்ந்திருக்காது. தான் பின்பற்றும் மதம் மட்டும்தான் உயர்ந்தது என்ற எண்ணம் ஊட்டப்பட்டால் கொலைகளுக்குப் பஞ்சமிருக்காது. யானைகளுக்கு அவ்வப்போது மதம் பிடிக்கும். ஆனால் மனிதர்களுக்கு எப்போதுமே மதம் பிடிக்கும். அது பிடித்துவிட்டால் படுகொலைகள் தவிர்க்க முடியாதது.
குறிப்புகள்:-
1) https://www.britannica.com/biography/Diego-de-Landa
2) http://www.history.com/topics/crusades
3) https://tamil.oneindia.com/art-culture/essays/2006/seenivasan.html
3 Responses
வாழ்த்துக்கள் பல…
இந்த ஆழமான பார்வை கொண்ட பதிவு அடியேனையும் ஆரோக்கியமான விவாதம் நடத்த தூண்டியதன் விளைவாக…
முதலில் நடுகல்..
சில கருத்துக்களில் நான் மாறு படுகின்றேன்.
மேற்கூறியவாறு நடுகல் என்பது போர்களில் சாதரணமாக அல்லாமல் வீர தீரமாக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக எழப்பப்பட்டதே. ஒவ்வொரு முறை போர் செல்லும்போதும் அரசர்கள் முதற்கொண்டு நடுகல்லை வணங்கி செல்வது மரபாகி போனது.. அரசனே வந்து வணங்கி செல்வதனாலும் அச்சமயங்களிலும் ஏற்படும் அதீத உணர்வினால் சில வீரர்கள் தானே முன்வந்து தன்னுயிரை கொடுத்ததும் உண்டு.. (இந்த காலத்தில் அரசியல் தலைவனுக்காக தீ குளிப்பதாக நடிக்கும் போலிகள் போல் அல்ல) அதன்பிறகு அரசன் நடுகல்லுக்கு மரியாதை செலுத்த வரும்போது வீரர்கள் எவரும் அவ்வாறு உயிர்த்தியாகம் செய்யாமல் தடுப்பதே அரசனுக்கு பெரும் வேலையாகி போனது.. அதுபோக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஏராளமான நிலபுலங்களும், வரி விலக்கும் மேலும் அந்த ஊரில் அந்த குடும்பத்திற்கே அனைத்திலும் முதல் மரியாதையும் அரசன் மூலம் கிடைத்தது.. அந்த வீரனின் வழி வந்தவர்கள் அந்த வீரரை குல தெய்வமாக வணங்கும் மரபும் உருவானது. ஆனால் தெய்வ வழிபாடும் குல தெய்வ வழிபாடும் ஒன்றல்ல.. கடவுள் மறுப்பாளர்கள் கூட குல தெய்வ வழிபாட்டை மேற்க்கொள்கிறார்கள். காரணம் அவர்கள் வணங்குவது அவர்களின் முன்னோரில் ஒருவர் என்பது நிதர்சனமான ஒன்று. இங்கு மற்ற உயிர்களை ஏன் பழி கொடுக்கிறார்கள் என்பதற்கு தனி விவாதமே நடத்தலாம்..
மதங்களின் பெயரால் எண்ணற்ற உயிர்கள் பலியானதாக சொல்லும் கருத்தில் அடியேனும் ஒத்துப்போகின்றேன். ஆனால் அதற்கு மதம் எப்படி பொறுப்பாக முடியும். வில் இருக்க அம்பை நோவானேன். மதத்தின் பெயரால் தவறு செய்தவர்களே குற்றவாளிகள். ஆதி காலத்தில் மனிதனிடையே ஒழுக்கத்தை கொண்டு வர விதிகளை உருவாக்கினார்கள். விதிகளின் கட்டமைப்பில் நம்பிக்கையும் புகுத்தப்பட்டது.. அதன் பரிணாம வளர்ச்சியே மதமானது.. அதன் நோக்கம் அப்பழுக்கற்றது என்றாலும் மூட நம்பிக்கைகளும் மனிதர்களின் சொந்த விருப்பு வெறுப்பும் கலந்து மதங்களை கூறு போட்டது மனித பிழையே.. இதற்கு மதங்களின் பெயரை விட மண்ணின் ஆசையால், பெயரால் போர்களில் சக மனிதனை கொன்று குவித்த மனிதனே சாட்சி.
சமணர்கள் வாழ்வில் மருத்துவமும் முக்கிய பாடம். ஆனால் மருத்துவத்தின் மூலமாக அவர்கள் நம் நாட்டில் சேவை செய்தாலும் இலவச இணைப்பாக சமண மதத்தையும் பரப்ப விளைந்த்தில் தவறு ஆரம்பித்தது. அதிக பட்சமாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டு சிலர் உள்நாட்டு குழப்பத்தை உண்டு பண்ணியதில் அப்பாவி சமணர்களும் பலியானதும் நடந்தது.
ஆக எல்லா பலிகளும் மனித அகங்காரத்தின் விளைவுதான். மதத்தின் நோக்கம் மனித குலத்தை மேம்படுத்தவே.. இன்று வரை நடப்பது என்னவோ அதை புரிந்து கொள்ள மறந்து பலிகளின் மேல் நடக்கும் மனிதனின் அகங்கார நடையே…
மதம் புரிந்து மனிதம் போற்றுவோம்..
வாழ்த்துக்கள் பல…
இந்த ஆழமான பார்வை கொண்ட பதிவு அடியேனையும் ஆரோக்கியமான விவாதம் நடத்த தூண்டியதன் விளைவாக…
முதலில் நடுகல்..
சில கருத்துக்களில் நான் மாறு படுகின்றேன்.
மேற்கூறியவாறு நடுகல் என்பது போர்களில் சாதரணமாக அல்லாமல் வீர தீரமாக போரிட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக எழப்பப்பட்டதே. ஒவ்வொரு முறை போர் செல்லும்போதும் அரசர்கள் முதற்கொண்டு நடுகல்லை வணங்கி செல்வது மரபாகி போனது.. அரசனே வந்து வணங்கி செல்வதனாலும் அச்சமயங்களிலும் ஏற்படும் அதீத உணர்வினால் சில வீரர்கள் தானே முன்வந்து தன்னுயிரை கொடுத்ததும் உண்டு.. (இந்த காலத்தில் அரசியல் தலைவனுக்காக தீ குளிப்பதாக நடிக்கும் போலிகள் போல் அல்ல) அதன்பிறகு அரசன் நடுகல்லுக்கு மரியாதை செலுத்த வரும்போது வீரர்கள் எவரும் அவ்வாறு உயிர்த்தியாகம் செய்யாமல் தடுப்பதே அரசனுக்கு பெரும் வேலையாகி போனது.. அதுபோக இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஏராளமான நிலபுலங்களும், வரி விலக்கும் மேலும் அந்த ஊரில் அந்த குடும்பத்திற்கே அனைத்திலும் முதல் மரியாதையும் அரசன் மூலம் கிடைத்தது.. அந்த வீரனின் வழி வந்தவர்கள் அந்த வீரரை குல தெய்வமாக வணங்கும் மரபும் உருவானது. ஆனால் தெய்வ வழிபாடும் குல தெய்வ வழிபாடும் ஒன்றல்ல.. கடவுள் மறுப்பாளர்கள் கூட குல தெய்வ வழிபாட்டை மேற்க்கொள்கிறார்கள். காரணம் அவர்கள் வணங்குவது அவர்களின் முன்னோரில் ஒருவர் என்பது நிதர்சனமான ஒன்று. இங்கு மற்ற உயிர்களை ஏன் பழி கொடுக்கிறார்கள் என்பதற்கு தனி விவாதமே நடத்தலாம்..
மதங்களின் பெயரால் எண்ணற்ற உயிர்கள் பலியானதாக சொல்லும் கருத்தில் அடியேனும் ஒத்துப்போகின்றேன். ஆனால் அதற்கு மதம் எப்படி பொறுப்பாக முடியும். வில் இருக்க அம்பை நோவானேன். மதத்தின் பெயரால் தவறு செய்தவர்களே குற்றவாளிகள். ஆதி காலத்தில் மனிதனிடையே ஒழுக்கத்தை கொண்டு வர விதிகளை உருவாக்கினார்கள். விதிகளின் கட்டமைப்பில் கடவுள் நம்பிக்கையும் புகுத்தப்பட்டது.. அதன் பரிணாம வளர்ச்சியே மதமானது.. அதன் நோக்கம் அப்பழுக்கற்றது என்றாலும் மூட நம்பிக்கைகளும் மனிதர்களின் சொந்த விருப்பு வெறுப்பும் கலந்து மதங்களை கூறு போட்டது மனித பிழையே.. இதற்கு மதங்களின் பெயரை விட மண்ணின் ஆசையால், பெயரால் போர்களில் சக மனிதனை கொன்று குவித்த மனிதனே சாட்சி.
சமணர்கள் வாழ்வில் மருத்துவமும் முக்கிய பாடம். ஆனால் மருத்துவத்தின் மூலமாக அவர்கள் நம் நாட்டில் சேவை செய்தாலும் இலவச இணைப்பாக சமண மதத்தையும் பரப்ப விளைந்த்தில் தவறு ஆரம்பித்தது. அதிக பட்சமாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டு சிலர் உள்நாட்டு குழப்பத்தை உண்டு பண்ணியதில் அப்பாவி சமணர்களும் பலியானதும் நடந்தது.
ஆக எல்லா பலிகளும் மனித அகங்காரத்தின் விளைவுதான். மதத்தின் நோக்கம் மனித குலத்தை மேம்படுத்தவே.. இன்று வரை நடப்பது என்னவோ அதை புரிந்து கொள்ள மறந்து பலிகளின் மேல் நடக்கும் மனிதனின் அகங்கார நடையே…
மதம் புரிந்து மனிதம் போற்றுவோம்..