திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம்

சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற மர்மங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு சங்கேதம் உண்டென்றால் அது திராவிடம்தான். எங்கோ விழுந்த சில முடிச்சுகள் ஒரு நூற்கண்டையே குழப்பிவிடுவது போல, வரலாற்றில் சில முடிச்சுகள், உண்மையைத் திரித்து, மறைத்து விடுவதுண்டு. இது திராவிடம் என்ற சொல்லுக்கு கட்டாயம் பொருந்தும். அதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வரைபடத்தில் இல்லாத அத்திப்பட்டி 

மகாபாரத காலத்தில் இந்தியா மொத்தம் 56 நாடுகளாக இருந்தது என்று சில நூல்கள் தெரிவிக்கின்றன. மகாபாரத காலம் எந்தக் காலம் என்று வியாசரைத்தான் கேட்கவேண்டும். வட இந்தியாப் பக்கம் கேட்டால் மனித இனம் உருவாவதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மகாபாரதம், இராமாயணம் எல்லாம் இருக்கிறதென்று கூசாமல் பொய் சொல்வார்கள். யாராவது ஒரு அரசன் எத்தனை வருடம் ஆண்டான் என்று கேட்டால் குறைந்தது 50000 ஆண்டுகளிலிருந்து 1 இலட்சம் ஆண்டுகள் என்றுதான் பதில் வரும். இராமாயண, மகாபாரத காலம் கட்டாயம் 4000 ஆண்டுகளுக்குள்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் ஆரியர்கள் இந்தியா வந்து ஏறத்தாழ 4000 ஆண்டுகள்தான் ஆகிறது. அவர்கள் வந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்தான் மகாபாரதக் கதை துவங்கியிருக்க வேண்டும். அதனால் மகாபாரத காலத்தைப் பற்றி நாம் இப்போது கவலைப்படத் தேவையில்லை. அப்போது இருந்ததாக நம்பப்படும் நாடுகளில் ஒரே ஒரு நாட்டைப் பற்றி மட்டும்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

image1

1918ம் ஆண்டில் வெளிவந்த புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் என்ற புத்தகத்தில் இந்த 56 நாடுகளின் பெயர்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நமக்கு இப்போது அந்த 56 நாடுகளின் பெயர்களும் தேவையில்லை. ஆனால் கவனிக்க வேண்டியது, திராவிட நாடு என்ற பெயரில் ஒரு நாடு இருந்ததாக சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில், பாண்டவர்கள் படையுதவி கேட்க திராவிட நாட்டுக்கு வந்ததாக சில குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் திராவிட நாட்டில் அகத்தியர் வாழ்ந்த இடத்துக்கு வந்ததாகக்  கூறப்பட்டிருக்கிறது. அகத்தியர் வாழ்ந்த இடம் திருநெல்வேலியில் குற்றாலமலை பக்கத்தில் இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில். மகாபாரதத்தில் திராவிட நாடு என்பது சில இடங்களில் பாண்டிய நாட்டை மட்டும் குறிப்பதாகவும், சில இடங்களில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டைக் குறிப்பது போலவும் வருகிறது. ஆக மகாபாரதக் குறிப்புப்படி திராவிட நாடு என்பது தமிழ்நாட்டையோ, தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளையோ குறிக்கிறது. வேறு எந்த வரலாற்றுச் சான்றுகளிலும், திராவிடம் என்பது தனி நாடு என்பது போன்ற குறிப்புகள் இல்லை. “புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்” என்ற புத்தகத்தை எழுதியவர்  உருவாக்கிய அத்திப்பட்டிதான் இந்திய வரைபடத்தில் இல்லாத திராவிட நாடு.

பாதிரியாரும் பட்டரும் சேர்த்துப் போட்ட முடிச்சு 

அயர்லாந்தில் பிறந்தவர் கால்டுவெல். அவர் ஒரு பாதிரியார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இங்கு வந்தார். வந்தவர், தென்னிந்திய மொழிகளையும், வடஇந்திய மொழிகள் சிலவற்றையும் கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டுவிட்டு பின் “Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (ஒப்பிலக்கணம்)” என்ற நூலை 1856ம் ஆண்டு எழுதி வெளியிட்டார். அதில் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் பொதுவாக திராவிட மொழிகள் என்று பெயரிட்டுக் கூறுகிறார். இன்றைய திராவிடவாதிகள் அனைவரும் திராவிடத்துக்கு ஆதரவாகக் கைகாட்டும் முதன்மை சான்று கால்டுவெல் எழுதிய புத்தகம்தான். கால்டுவெல் திராவிடம் என்ற வார்த்தையை எங்கிருந்து தூக்கி வந்தார். பார்க்கலாம்.

image2

கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லாடலை குமரில பட்டர் (Kumarila Bhatta) மற்றும் மனுவிடமிருந்தும் கடன் வாங்குகிறார். குமரில பட்டர், “தந்த்ர வர்த்திகா (Tantra Vartika)” என்ற மீமாம்சம் தொடர்பான நூலை எழுதியவர். மீமாம்சம், கருத்துமுதல் வாதம் (Idealism), பொருள்முதல் வாதம் (Materialism) என்ற கொள்கைகளில் கருத்துமுதல் வாதத்தை ஆதரிக்கும் நூல். அதற்குள் நாம் ஆழமாக செல்ல வேண்டியதில்லை. அவர் தனது நூலில் “ஆந்திர-திராவிட பாஷா” என்ற சொல்லை உதிர்த்துவிட்டுப் போயிருக்கிறார். ஆந்திர என்பது தெலுங்கு மொழியையும், திராவிட என்பது தமிழையும் குறிப்பதாக கால்டுவெல் தனது புத்தகத்திலே குறிப்பிடுகிறார்.

மனுஸ்மிருதியில், ஸ்லோகங்கள் 43 மற்றும் 44ல், திரவிடா என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது. அதில், சில  இனத்தைச் சார்ந்தவர்களை, சத்திரியர் நிலையில் இருந்து சூத்திரர் நிலைக்கு தள்ளப்பபடுவதாகக் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று திராவிடா. கால்டுவெல் மனுஸ்மிருதியில் திராவிடா என்ற சொல் ஒட்டுமொத்த தென்னிந்தியர்களைக் குறிப்பதுபோல் தோன்றுகிறது அதனால் திராவிடம் என்பதை தென்னிந்திய மொழிகளைக் குறிக்கும் பொது சொல்லாகப் பயன்படுத்தியதாக தனது நூலில் குறிப்பிடுகிறார். அவருக்கு ஏன் அப்படி ஏடாகூடமாகத் தோன்றியதென்று விளங்கவில்லை.

அதற்கு முன்புவரை வடஇந்தியாவில் நமக்குத் தொடர்பு இல்லாத மகாபாரதம், மனுஸ்மிருதி, ரிக் வேதம் போன்ற சில நூல்களில் திராவிடம் என்ற வழக்கு கையாளப்பட்டிருந்தாலும், அதைத் தமிழகம் மற்றும் பிற தென்மாநிலங்களையும் இணைத்து இறுக்கமாக முதல் முடிச்சைப் போட்ட பெருமை கால்டுவெல்லைதான் சாரும். இங்குதான் திராவிடம் என்பது தென்னிந்திய அடையாளமாக மாற்றப்படுகிறது.

காத்தவராயன் என்ற ஒருபைசாத்தமிழன் 

அவரது இயற்பெயர் காத்தவராயன். தனக்கு பயிற்றுவித்த ஆசிரியர்மேல் கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்திதாசப்பண்டிதர் என்று மாற்றிக்கொண்டார். இவரது தாத்தா கந்தப்பனுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. திருக்குறளைப் பாதுகாத்து பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் (Francis Whyte Ellis) என்பவரிடம் கொடுத்து, திருக்குறள் என்னும் உலகப்பொதுமறையை தமிழகத்துக்கு அளித்தப் பெருமை அயோத்திதாசப்பண்டிதரின் தாத்தா கந்தப்பனையே சாரும்.

image3

அயோத்திதாசப்பண்டிதருக்கும் திராவிடத்துக்கும் 3  வகையில் தொடர்பு உண்டு. ஒரு கோரிக்கை, ஒரு பத்திரிக்கை, ஒரு சபை. 1881ம் ஆண்டுதான் இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முதன்முதலில் நடத்தப்பட்டது. அது சாதிவாரியான கணக்கெடுப்பு. அயோத்திதாசப்பண்டிதர், தங்கள் இனத்தவரை “சாதியற்ற திராவிடர்கள்” என்ற பெயரில் கணக்கில் கொள்ளும்படி ஆங்கிலேயர்களை கேட்டுக்கொண்டார். இதுதான் அவர் திராவிடன் என்ற வார்த்தையை பொதுத்தளத்தில் பயன்படுத்தியதற்கான முதல் சான்று. அயோத்திதாசர் கோரிக்கையில் “சாதியற்ற தமிழர்கள்” என்றுதான் இருந்தது. திராவிடவாதிகள், அதனை மறைத்தும் திரித்தும் பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

1885ம் ஆண்டு ஜான் இரத்தினம் என்பவருடன் இணைந்து “திராவிடப் பாண்டியன்” என்ற பத்திரிக்கையைத் துவங்குகிறார். ஜான் இரத்தினம் அவர்கள்தான் இதழின் ஆசிரியர். 1887ல் ஜான் இரத்தினம் அவர்கள் நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறார். அதன்பின்பு பத்திரிக்கையை நடத்தமுடியாமல் நிறுத்திவிடுகிறார்கள். இந்தப் பத்திரிக்கை மூலம் திராவிடத்துக்கு இரண்டாவது முத்திரையைப் பதிக்கிறார் அயோத்திதாசர்.

image4

1891ம் ஆண்டு “ஆதிதிராவிட மகாஜனசபை” என்ற அமைப்பைத் துவங்குகிறார் அயோத்திதாசர். ஆக, திராவிடம் என்ற சொல்லுக்கு முழுநீள அடையாளத்தை கொடுத்த பெருமை கால்டுவெல்லுக்குப் பின் அயோத்திதாசருக்கே வந்துசேரும். இவர் பின்னாளில் “ஒருபைசாத்தமிழன்” என்ற பத்திரிகையையும் நடத்திவந்தார். ஏனோ இன்றைய திராவிடக் கட்சிகள் அயோத்திதாசரை திராவிட அரசியலில் சேர்த்துக்கொள்வதில்லை. வெள்ளைக்காரராக இருந்திருந்தால் ஒருவேளை சேர்த்திருக்கலாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

 

திராவிடம் சற்று குழப்பமான சங்கதி. பெயருக்கும் அமைப்புக்கும் தொடர்பு இல்லாத பல தகவல்களை சேர்த்துப் பார்க்கும்போதுதான் அதன் தொடர்பு விளங்கும். “மெட்ராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் (Madras Non-Brahmin Association)” என்ற பெயரும் அப்படித்தான். இதற்கும் இன்றைய திராவிட கட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்றால் நம்பித்தான் ஆகவேண்டும். 1909ம் ஆண்டில் சுப்பிரமணியம், புருஷோத்தம் என்ற இரண்டு வழக்கறிஞர்களால் தொடங்கப்பட்டதுதான் மெட்ராஸ் பிராமணரல்லாதோர் சங்கம். சங்கத்தின் பெயர்ப்பலகையில் கூட ஈ, காக்கா வந்து உட்காரவில்லை. டீ, காபி வாங்கிக் கொடுத்தாலும் வந்து பேச ஆள் வரவில்லை. பின்னர் சங்கத்தில் இருந்தவர்கள் சங்கத்தை இழுத்து மூடிவிட்டு நடேச முதலியார் என்ற மருத்துவருடன் சேர்ந்து 1912ம் ஆண்டில் “ஐக்கிய சென்னை இயக்கம் (Madras United League)” என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள். ஐக்கிய சென்னை இயக்கம் அதே ஆண்டில் “சென்னை திராவிடர் சங்கம் (Madras Dravidian Association)” என்று பெயர் மாற்றப்பட்டது.

சென்னை திராவிடர் சங்கம் (Madras Dravidian Association) என்ற பெயரில் திராவிடம் என்ற அடையாளம் கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும், அது வெளியே தெரிவதற்குள் மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. மச்சம், மரு, கடாமீசை என்று பல மாறுவேடம் போட்டதுபோல பெயரை மாற்றி மாற்றி  வைத்தாலும் நமது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பக்கம் ஒருவரும் தலைவைத்துப் படுக்கவில்லை. கடுப்பாகிப் போனார் டாக்டர். நடேசன். அவருக்கு சில பெரிய தலைகள் பழக்கம் இருந்தது. அவர்கள் சிலரை சங்கத்துக்குள் இழுத்துவிட்டால் சங்கம் கொடிகட்டிப் பறக்கும் என்று கணக்குப் போட்டார். அந்த பெரிய தலைகள் தியாகராய செட்டி, மாதவன் நாயர் ஆகிய இருவரும்தான். அவர்கள் இருவரையும் உள்ளே கொண்டு வந்தார்.

image5

தியாகராய செட்டியும், மாதவன் நாயரும் உள்ளே வந்ததும் சங்கத்துக்கு பெயர் சரியில்லை என்று “தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation)” என்று பெயர் மாற்றி விட்டார்கள். இது நடந்தது 1916ம் ஆண்டு. அடுத்ததாக அவர்கள் செய்தது நடேச முதலியாரை ஓரங்கட்டியதுதான். அவர்கள் சங்கத்தின் சார்பாக நீதி (Justice) என்ற பத்திரிக்கை நடத்தப்பட்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பெரும்பாலும் அதன் பத்திரிக்கையின் பெயரான நீதிக்கட்சி (Justice Party)” என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டது. நாமும் இனி நீதிக்கட்சி என்றே அழைப்போம்.

அப்போது இங்கு நடந்தது ஆங்கிலேயன் ஆட்சி. ஆங்கிலேயர் கொண்டுவந்த ஒரு சட்டம் நீதிக்கட்சிக்கு ஒரு பெரிய வாய்ப்பைக் கொடுத்தது. “மாண்டகு – கெம்ஸ்போர்டு சீர்திருத்தம் (Montagu-Chelmsford Reforms)” இரட்டை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தியது. அதில் நீதிக்கட்சிக்கு தேர்தலில் பங்கேற்கும் உரிமைக் கிடைத்தது. 1920ம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இனி நீதிக்கட்சிக்குள் திராவிடம் நுழைந்த கதையைப் பார்க்கலாம்.

இடியாப்பச் சிக்கல் 

நீதிக்கட்சி சென்னை மாகாணத்தை 1920 முதல் 1937 வரை ஆண்டது. இடையில் சில குழப்பங்கள், குளறுபடிகள் எல்லாம் ஆட்சியில் நடந்தது. ஆனால் அவை திராவிடம் தொடர்பான தகவலுக்குத் தேவையில்லாதவை.

அதுவரை காங்கிரஸ் கட்சி தேர்தலில் நிற்கவில்லை. 1937ல் காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்றதும் நீதிக்கட்சிக் கட்டிலில் படுத்ததுதான், அதற்குப்பிறகு எழுந்திருக்கவேயில்லை. அப்போதுதான் ஈரோடு வேங்கடப்பா ராமசாமி என்ற பெரியார் நீதிக்கட்சிக்குள்ளே கால்வைத்தார். அவர் தானாக வரவில்லை, கெஞ்சிக்கதறி கூட்டிவந்தார்கள். அவர் கால்வைத்தப் பிறகுதான் திராவிடம் என்ற வார்த்தை அநேகமாக தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கே போய் சேர்ந்தது. திராவிடம் என்ற பதம் சிலமுடிச்சுகளிலிருந்து இடியாப்பச் சிக்கலானது பெரியாரின் நுழைவுக்குப் பிறகுதான்.

image6

தேர்தல் தோல்விக்குப் பிறகு நீதிக்கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. பெரியார் அதிரடி ஆசாமி. அவருக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வார். அதை ஏற்றுக்கொண்டவர்கள் கட்சியில் இருக்கலாம். பிடிக்காதவர்கள் போய்வருகிறேன் என்றுகூட சொல்லத்தேவையில்லை. கிளம்பிவிடலாம். அவருக்கு தேர்தல், போட்டி, பதவி எல்லாம் அறவே பிடிக்கவில்லை. இனி நீதிக்கட்சி தேர்தல் களத்தில் இறங்காது என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். இது கட்சியில் சிலருக்குப் பிடிக்கவில்லை. கட்சியில் இருந்துப் பிரிந்துசென்று மீண்டும் நீதிக்கட்சி என்ற பெயரில் தேர்தலில் நின்று பார்த்தார்கள். அவர்கள் வாக்குப்பெட்டியைக் கூட யாரும் எட்டிப்பார்க்கவில்லை. அந்த அத்தியாயம் அத்தோடு முடிந்தது.

பெரியார் செய்த அடுத்த ஒரு செயல்தான் வரலாற்றில் முக்கியத் திருப்பத்துக்கு வழிவகுத்தது. அவர் நீதிக்கட்சி என்ற பெயரை “திராவிடர் கழகம்” என்று மாற்றினார். இந்தப் பெயர் மாற்றத்துக்கு முன்புவரை திராவிடம் என்ற சொல்லுக்கும் நீதிக்கட்சிக்கும் அதற்கு மூலமான பல வருத்தப்படாத வாலிபர் சங்கங்களுக்கும் சொல்லிக்கொள்ளும்படி எந்தத் தொடர்பும் இல்லை. வேர்விட்ட சிறு செடிபோல் இருந்த திராவிடத்தை ஆலமரமாக்கியது பெரியார்தான். திராவிடம் என்ற சொல்லுக்கு ஒட்டுமொத்த அடையாளம் என்றே பெரியாரை சொல்லலாம்.

அமாவாசையும் அப்துல் காதரும்

பெரியாருக்குப் பின் வளர்ந்த பிற திராவிடக் கட்சிகளைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று எந்த தென்னிந்திய மாநிலங்களும் திராவிடத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாம் திராவிடர்கள், ஒரே ரத்தம், ஒரே இனம் என்று 50 வருடமாக மூச்சிவிடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

திராவிடம் என்ற சொல்லுக்கான வரலாறுதான் மேலே நாம் பார்த்த அத்தனையும். ஆனால் இதுவரை அந்தத் திராவிடம் என்றால் என்ன என்ற குழப்பம் தீரவில்லை அல்லவா. அதைத் தீர்த்துவைக்க சாதாரண அறிவுகொண்ட ஒருவரால் முடியாது. ஒரு மேதையைத்தான் அழைக்கவேண்டும். அப்படி ஒரு மேதை 1891ல் பிறந்தார். வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்டப் படிப்பிலே செலவிட்டவர் அவர். ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அடையாளம் என்று சொல்லுமளவுக்கு உயர்ந்த மனிதர். அவர்தான் சட்டமேதை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.

image007

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு. அதேபோல் அம்பேத்கருக்கும் திராவிடத்துக்கும் என்ன தொடர்பு என்று பலருக்கு ஆச்சர்யம் எழலாம். ஆனால் அவர்தான் அந்த இடியாப்பச்சிக்கலை தீர்த்துவைத்தவர். அதுவரை சங்கேதமாக இருந்த திராவிடத்தை சந்தேகமில்லாமல் விளக்கியது அவர்தான். அவர் “தீண்டத்தகாதவர்கள், யார் அவர்கள், அவர்கள் ஏன் அவ்வாறு ஆக்கப்பட்டார்கள் (The Untouchables, who were they and why they became untouchables)” என்ற நூலை 1948ம் ஆண்டு வெளியிட்டார். அதில் திராவிடர்கள் யார் அவர்கள் பூர்வீகம் என்ன என்பதைக் குறித்து ஒரு ஆழமானப் பார்வையைப் பதிவு செய்கிறார்.

திராவிடம் அம்பேத்கர் பார்வையில் 

அம்பேத்கர் பார்வையில் திராவிடம் என்பது ஆரியர்கள் பயன்படுத்திய சொல். குமரிலப்பட்டரும் ஆரியர்தான். கால்டுவெல்லுக்கு முன்பு திராவிடம் என்ற சொல் பரவலாக அறியப்படவில்லை என்பதுதான் உண்மை. அம்பேத்கர் ஆராய்ச்சிப்படி ஆரியர்கள் வருகைக்கு முன்பு இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான். இந்தியா முழுமைக்கும் பெரும்பான்மையாகப் பேசப்பட்ட மொழி தமிழ்தான். சரி அப்படியானால் திராவிடர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ற கேள்விகள் நமக்குள் இயற்க்கையாகவே எழும். அம்பேத்கர் அதற்கும் விடைசொல்கிறார்.

தமிழர்கள் நாகர்கள் இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் மொழி தமிழ். இதுதான் அவர் முன்வைத்த சான்று. தமிழர்கள் நாகர்கள் என்பதற்கு, இன்று வரை தொடரும் நாகவழிபாடு ஒரு சான்று. ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததும், அவர்கள் சில மன்னர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு சொந்தமக்களுக்கு எதிராகவே திருப்பிவிட்டார்கள். அவர்கள் மொழியையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் பெரும்பான்மையான மக்கள் தெற்கு நோக்கி நகர்ந்தார்கள். ஆனால் கிழக்கிந்தியாவில், நாகலாந்தில் இன்னும் நாகர்கள் வாழ்கிறார்கள், அவர்கள் ஏன் தமிழர்கள் என்று அழைக்கப்படவில்லை? என்ற கேள்வி எழும்.

image8

ஆரியர்கள் இந்தியாவுக்குள்ளே ஊடுருவியதும் சில குழுவினர் தெற்குப் பக்கம் போய்விட்டார்கள் என்று பார்த்தோம் அல்லவா. இன்னும் சில குழுக்கள், இடிச்சப்புளிபோல அங்கேயே தங்கிவிட்டார்கள். ஆரியர்கள் மொழியும், இவர்கள் பேசிய தமிழும் கலந்து சில புது மொழிகள் உருவாகிவிட்டது. கவனிக்கவேண்டியது, அவர்கள் தங்கள் தாய்மொழியை இழந்துவிட்டார்கள். தெற்குப்பக்கம் நகர்ந்து தங்கள் தாய்மொழியை தக்கவைத்துக் கொண்டவர்கள் தமிழர்கள் என்றும் வடக்கேயே இருந்த தாய்மொழி அடையாளத்தை இழந்தவர்கள் நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இன்னும் திராவிடர்கள் உள்ளே வரவில்லையே என்று கேள்வி வரும். இதோ பார்க்கலாம்.

ஆரியர்கள் வேறுநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று பார்த்தோம். அவர்கள் நம்மை தமிழர்கள் என்றுதான் அழைத்தார்கள். ஆனால் அவர்கள் உச்சரிப்பில். தமிழர் என்ற வார்த்தையை அவர்களால் உச்சரிக்க இயலவில்லை. தமிழர்  என்பதை டமிலா (Damila)” என்று  உச்சரித்தார்கள். அது காலப்போக்கில் “ட்ரமிடா (Dramida)” என்று பேச்சுவழக்கில் மாறியது. அதுவே இன்னும் சற்று மருவி “ட்ராவிடா (Dravida)” என்று மாறிவிட்டது. திராவிடம் என்ற வார்த்தைக்கே மொத்த வரலாறு இவ்வளவுதான். திராவிடன் என்ற சொல் தமிழனை மட்டும்தான் குறிக்கிறது.  திராவிடன் வெளியிலிருந்து வந்தவன் இல்லை. தமிழன்தான் திராவிடன். திராவிடன்தான் தமிழன்.

களையெடுக்க வேண்டிய வரலாற்றுப்பிழை

தமிழன் என்ற சொல்தான், சரியாக உச்சரிக்கத் தெரியாமல் திராவிடன் என்று மாறியிருக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது. நமது முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் இனத்துக்கு அளித்த அடையாளம்தான் நம் தாய்த்திருமொழியாம் தமிழ். யாரோ, நமது பெயரை உச்சரிக்கத் தெரியாதவர்கள் பயன்படுத்திய மருவிய பெயரை நாம் ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்.திராவிடம் என்ற வார்த்தையே வேரிலிருந்து களைந்தெடுத்துத் தூக்கியெறிய வேண்டிய ஒன்று. தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் தேவையில்லாதது திராவிடம். தமிழர்களை ஏமாற்றவும், ஏய்த்துப் பிழைக்கவும் விரும்பும் கூட்டங்கள் பயன்படுத்தும் அர்த்தமற்ற வெற்றுச்சொல் திராவிடம். சுருக்கமாக சொன்னால், திராவிடம் என்பது மாயை. அது, நீர்த்துப்போன பெரியாரின் கருத்துக்களில் முளைத்த சாயை.

மொழிவாரி மாநிலங்கள் என்று பிரிந்தபின் மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டி மற்றும் ஏனைய பிறமொழிகள் என்று அந்தந்த மொழிபேசும் மக்களை அவரவர் தாய்மொழி அடையாளத்தோடு மதிப்பது நம் கடமை. அவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென்றாலும், அவர்களின் தனித்தன்மை மாறாமல் அவர்கள் தாய்மொழிக்குண்டான மரியாதை எவ்விதத்திலும் குறையாமல் ஒன்றிணைந்து வாழ்வதற்கான வழியைக்காணவேண்டும். அதை விடுத்து, புரியாத வார்த்தைகளை சொல்லி, மக்களைக் குழப்பி, அவர்கள் அடையாளத்தை அழித்து, அதன்பின் ஒன்றிணைக்க நினைத்தால் அது பேரழிவில்தான் முடியும். தமிழ் கலாச்சாரத்தைக் காப்பதும் தமிழன் என்ற அடையாளத்தைத் தவிர திராவிடம் போன்ற போலி அடையாளங்களைத் தூக்கி எறிவதும் நம் கடமை. தமிழின் நிழல்தான் திராவிடம். நிழல் என்றும் உண்மையாகாது.

வாழ்க தமிழ்.

குறிப்புகள்

1) https://hindubooks.org/scriptures/manusmriti/ch10/ch10_41_45.htm

2) https://archive.org/stream/comparativegramm00caldrich#page/n51/mode/2up

3) History Of Ancient India (a New Version)From 4250 Bb To 637 Ad By J.P. Mittal

4) https://en.wikipedia.org/wiki/Justice_Party_(India) 

5) www.ambedkarintellectuals.in/attachment/28.the-untouchables-who-were-they-and-why-they-became%5B1%5D.doc

6) http://www.ayothidhasar.com/pandithar/2017/08/10/%e0%ae%85%e0%ae%af%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f-%e0%ae%85/

6 Responses

  1. எமது கருத்துக்களை பகிர்வதற்க்கு முன்.. இருப்பதிலேயே ஆகச்சிறந்த குழப்பமான விசயம் என்றால் அது திராவிடம். அந்த தேவையற்ற வரலாற்று பிழைக்கு தீர்வாக இந்த ஆய்வு அமைந்தமைக்கு வாழ்த்துக்கள் மட்டும் ஈடாகாது என்பதை அறுதியிட்டு சொல்கிறோம்..
    இந்த பதிவின் உள்நோக்கம், திராவிடம் என்ற தோலுரித்து அதனுள் புதைந்திருப்பது தமிழன் என்ற தன்னிகரற்ற இனமே.. என்பதை உணர்த்தவே என்றும்
    அதற்கு அகத்தில் உணர்வு கனலாய் உலன்றிருப்பதையும் அறிகிறோம். அந்த கர்வத்திற்க்கு, அந்த மேன்மையான உணர்விற்க்கு தாள் பணிகிறோம்.
    எமது தேடுதல்கள் தமிழனின்
    பண்டைய வரலாற்று சிறப்புகளையும் தனித்துவத்தையும் அறியும் பொருட்டே அமைந்ததால் திராவிடம் என்ற நோக்கில் கூடுதல் தகவல்களை இங்கு பதிவிட முடியாத இயலாமைக்கு வருந்துகிறேன். இருப்பினும் இந்த பதிவின் மூலம் திராவிடம் என்ற ஆதி அந்தம் தெரியாத சாலையற்ற ஊருக்கு தேர்ந்த பாதை அமைத்து வெளிச்சமும் காட்டியமைக்கு நன்றி.. இந்த பதிவின் தூண்டுதலாலும்..
    அதீத ஆர்வ கோளாறாலோ
    கர்வத்தாலோ தமிழனின் சிறப்புகளை இங்கு பதிவிட விழைகிறேன்.
    தமிழனின் தனிச்சிறப்பாக திருக்குறளும், காவியங்களும், தஞ்சை பெரிய கோயிலும் கண்முன்னே இருந்தாலும் மூடுபனியாக இருக்கும் உண்மைகள் பல..
    உலகிலேயே பெரிய கோயிலாக இருப்பது அங்கோர் வாட் (கம்போடியா). இதை கட்டியவன் தமிழன் என்பதை அறிந்தவர் சிலரே.. அதனிலும் ஆச்சர்யம் தரும் செய்தி அந்த கோயில் முதலில் வடிவமைக்கப்பட்டது, கட்டப்பட்டது எல்லாம் தமிழகத்தின்
    மயிலா புரம் என்றழைக்கப்பட்ட மயிலாடுதுறையில்தான் என்பது. பின்பு பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு கப்பலி்ன் மூலம் கொண்டு சென்று கம்போடியாவில் நிர்மானித்தான்.
    இது நம்மால் நம்ப முடியாத உண்மை நிகழ்வு.. இதற்கு மூல காரணம் கம்போடிய நாட்டு மக்கள் நமது கலாச்சாரம், வாழ்க்கை முறை, உயரிய பண்பாடு இவற்றின் மீது காட்டிய நேசத்தின் பிரதிபலன்.
    இந்த செயற்க்கறிய கோயில் கட்டுமானம் இன்றைய
    நவீன உலகில் கூட சாத்தியமில்லாத ஒன்று. இதை செய்து முடிக்க நாகரீகத்திலும், சிறந்த கட்டிட விஞ்ஞானத்திலும், மேம்பட்ட வானிலை விஞ்ஞானத்திலும் மேம்பட்ட ஒரு இனத்தால் மட்டுமே முடியும்.
    இதை செய்து காட்டிய தமிழனே நாகரீகத்தின் உச்சம். இன்றிருக்கும் நாம் அவனின் வெறும் எச்சங்களே..
    அத்தனை சிறப்பு கொண்ட தமிழனின் வழிப்பாதையில் திராவிடம் என்ற பெயரில் அன்னியர்கள்
    யாரும் குறுக்கிட முடியாது. இதை ஆணித்தரமாக எடுத்துரைத்த தங்களின் இந்த ஆய்வு என்றும் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம்.
    நன்றி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்