உலகின் முதல் உயிருக்கு என்றைக்கு செவிகள் பிறந்ததோ அன்றே மொழியின் முதற்கூறு மூளையில் உருவாகியிருக்க வேண்டும். காதில் கேட்ட ஒலியை வாயால் கூற முயற்சித்தது மிருகங்களின் சத்தமாகவோ பறவைகளின் சத்தமாகவோதான் இருக்க வேண்டும்.
எதிரில் இருக்கும்போது சுட்டிக்காட்ட விரல்கள் போதுமானது. அதனைக் கண்டிராத ஒருவனுக்கு விளக்க வேண்டியத் தேவை வரும்போது சித்திரம் தேவைப்படுகிறது. அன்றுதான் எழுத்தின் முதல் அச்சு பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மொழி ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. அந்த ஆதிமனிதன் வரைந்த முதல் சித்திரம்தான் உலகின் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி. உடல் வலுவாக இருப்பதனால் மிருகங்களை வேட்டையாடும் பொறுப்பு ஆடவனிடம் வந்திருக்க வேண்டும். அதன் நுட்பங்களை விளக்கும் பொறுப்பும் அவனையே சாரும். உலகின் முதல் சித்திரம் வரைந்தது ஆணின் கைகளாக இருக்கலாம். ஆக தாய்மொழியை ஈன்றெடுத்தது ஒரு தந்தையாக இருக்கலாம்.
இது மொழியின் தோற்றத்தை ஆராயும் பக்கமன்று. எனது பல்பத்தின் முதல் எழுத்து அகரம்தான். என் உயிர்மொழியாம் தமிழ்தான். உலகை மையமாக வைத்து வளர்ந்த தமிழை மையமாக வைத்து முதல் எழுத்தை எழுத வேண்டும் என்பது எனது ஆசை.
எனது பதிவுகளில் மொழி பற்றிய கருத்துக்கள் இருக்கலாம், அரசியல் இருக்கலாம், சமீபத்திய நிகழ்வுகள் இருக்கலாம், ஆனால் அத்தனையும் எனது மூளையின் இடியாப்பச் சிக்கலில் எங்கோ ஒரு மூலையில் சுய உணர்வுடன் எழுதிய கருத்துக்கள் மட்டுமே.