தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

உருட்டி வைத்த மைதா மாவு

அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால் நாம் குறைந்தது 10 முதல் 20 கோடி வருடங்களாவது பின்னோக்கிப் போக வேண்டியிருக்கும்.

7be3a-pangaea_continents

10 முதல் 20 கோடி ஆண்டுகளுக்கு முன் நாம் வாழும் இந்த பூமி, இன்று இருப்பது போன்று பிய்த்துப்போட்ட தூத்துக்குடி பரோட்டா போல தனித்தனியாக இல்லை. உருட்டி வைத்த மைதா மாவு போல ஒன்றாக இருந்தது. அதற்கு பாஞ்சியா, கோண்டுவானா என்று காலத்துக்கு தகுந்தாற்போல, வாய்க்குள் நுழையாத, நூடுல்ஸ் போல பல சிக்கலான பெயர்கள் உண்டு. நம் கண்களுக்கு அப்போது இந்தியா தனியாகத் தெரியாது. அப்படியானால் இலங்கை கட்டாயம் தெரிய வாய்ப்பில்லை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா அண்டார்டிகா, ஆப்பிரிக்காவுக்கு டாட்டா சொல்லிவிட்டு இன்றைய இருப்பிடத்தை நோக்கி நகரத் தொடங்கியது. வந்த வேகத்தில் ஆசியாக் கண்டத்தின் மேல் டமால் என்று மோதியதில்தான் இமயமலை உருவானதென்று சொல்கிறார்கள்.

அப்போது இந்தியாவின் தெற்கு எல்லை கன்னியாகுமரி இல்லை. அந்த நிலம் சற்று அகலமாக, அதாவது இன்றைய இலங்கையையும் சேர்த்து பெரிய வட்டம் போட்டதுபோல அகண்ட நிலப்பரப்பு. அதாவது இலங்கை ஒரு தீவாக இல்லை. அது இன்றைய தமிழ்நாட்டோடு சேர்ந்த பகுதியாக இருந்தது. கள்ளத்தோணி எல்லாம் இல்லாமல், கையில் ஒரு கடலைப் பொட்டலத்தை கொறித்துக்கொண்டு பொடிநடையாகவே அன்றைய இலங்கைக்குப் போய் விடலாம்.அந்த பரந்த நிலத்துக்கு லெமூரியா, குமரிக்கண்டம் என்று பல பெயர்கள் உண்டு. அந்தப் பெயர்கள் ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டுடன் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்த இலங்கையை நம்மை விட்டுப் பிரிக்கக் கடல் ஊருக்குள் வந்தது. இலங்கை தனியாகப் பிரிந்து சென்ற வரலாற்றைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கிறோம்.

ப்ளெய்ஸ்டாஸீன் எப்போக் (Pleistocene Epoch)

பெயரைக் கேட்டு மிரளவேண்டாம். அது நமது பூமியில் இருந்த கடைசிப் பனிக்காலத்தின் பெயர் (Ice Age). பூமியில் பனிக்காலம் 5 முறை நடந்ததென்று சொல்கிறார்கள். கடைசிப்பனிக்காலம் 26 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. அதாவது கி.மு.9000 ஆண்டுவாக்கில் முடிந்தது. இந்தக் கடைசிப்பனிக்கால கட்டத்தின் துவக்கத்தில்தான் இன்றைய மனிதர்களான ஹோமோசேப்பியன்ஸ் பரிணமித்தார்கள் என்று அறிவியல் சான்றுகள் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்தி பனிக்காலத்தின் முடிவில் இருக்கிறது. இந்த பனிக்காலத்தின் கடைசிக்காலகட்டத்தில், குறிப்பாக சொல்வதானால் 20000 வருடங்களுக்கு முன்பிருந்து 11000 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டம் 120 மீட்டர் உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட 400 அடிகள். கற்பனை செய்யவே மிரட்சியாக இருக்கிறது.

ஆனால் 400 அடிகள் கடல் மட்டம் உயர்ந்தது ஒருநாள் இரவில் நடந்துவிடவில்லை. 20000 ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் முதல் 500 ஆண்டுகளில் 15 மீட்டர் உயர்ந்திருக்கிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து பனிக்கால முடிவான 11000 (கி.மு.9000) ஆண்டுவாக்கில் மட்டும் 28 மீட்டர் உயர்ந்திருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் அடிக்கடி கடற்கோள்கள் (Tsunami) நிகழ்ந்திருக்கிறதென்று சிலப்பதிகாரம், இறையனார் அகப்பொருள் போன்ற நமது தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கடற்கோள்களால் நாம் மக்களை இழந்தோம், நம் வரலாற்றை இழந்தோம், நமது மொழியின் அரும்பெரும் படைப்புகள் பலவற்றை இழந்தோம். எஞ்சியது தொல்காப்பியம் போன்ற சில நூல்கள்தான். கடைசியாக இந்த கடல் மட்ட உயர்வால், நம் நிலத்தையும் இழந்தோம்.

வாய்க்கால் தகராறு

இன்றைய இலங்கை தமிழ்நாட்டோடு சேர்ந்து இருந்ததென்று பார்த்தோம். பனிக்காலத்தில் முடிவில் கடல்மட்டம் 400 அடிகள் உயர்ந்ததால், கடல் ஊருக்குள் புகுந்து பல தீவுகளை உருவாக்கி விட்டுச்சென்றது. அதில் ஒன்றுதான் இலங்கை. இலங்கைத்தீவு தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்றாலும், விட்ட குறை தொட்ட குறையாக சிறு நிலப்பரப்பு, வரப்பு போல இலங்கையையும் தமிழ்நாட்டையும் இணைத்துக்கொண்டிருந்தது. அந்த 50 கிலோமீட்டர் வரப்புக்கு வந்த வாய்க்கால் தகராறுகள் கொஞ்சநஞ்சமல்ல. அந்த வாய்க்கால் தகராறுகள் நமக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனால் புரிந்துகொள்ள வேண்டியது, இந்த நிலப்பரப்பு எப்போதும் இருந்த ஒன்று. யாரும் குரங்குகளைக் கூட்டி வந்து கட்டவில்லை.

ae215-adams-bridge

இராமன் பாலம், ஆதாம் பாலம், சேது பாலம் என்றெல்லாம் சொல்லப்படும் இந்த டுபாக்கூர் பாலம், கடல் நமது நாட்டுக்குள் புகுந்து அழித்தது போக எஞ்சியுள்ள நிலப்பரப்புதான். கடலுக்குள் அஸ்திவாரம் போட்டு கட்டப்பட்டதல்ல. இதைச்சொன்னால் நமது ஊர் மக்கள் பலர் இஞ்சி தின்ற குரங்கு போல உர்ரென்று முகத்தை வைத்துக்கொள்வார்கள். ஆனால் வடஇந்தியாவிலிருந்து வந்தவர்களை மனிதர்களாகவும், தென்னிந்தியாவில் வாழ்ந்தவனை எல்லாம் குரங்காகவும் இராமாயணத்தில் சித்தரித்திருக்கிறார்களே என்று பலருக்கு சுரணை வருவதில்லை. குரங்கு ஆட்சி செய்தது, குரங்கு படை கொண்டு போரிட்டது என்றெல்லாம் நம்பும் கூட்டம், குரங்கு பாலம் கட்டியது என்று சொன்னால் நம்புவதில் ஆச்சர்யம் இல்லைதான்.

பூர்வகுடிகள் யார்?

இலங்கை, சங்கத்தமிழ் இலக்கியங்களில் பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் சில தாமிரபரணி, ஈழம், நாகத்தீவு , சிலோன், இலங்காபுரி ஆகியன. திருநெல்வேலியில் பாயும் தாமிரபரணி ஆறு, இலங்கை தமிழ்நாட்டோடு ஒன்றாக இருந்த காலத்தில், இலங்கை வரை பாய்ந்ததென்றும், அதனால்தான் அதற்கு தாமிரபரணி என்ற பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். அங்கு தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் இரண்டு இனத்தவர்கள். நாகர்கள், மற்றும் இயக்கர்கள். இதில் நாகர்கள் அங்கு அரசாண்டு வந்தார்கள். இயக்கர்கள் வேட்டையாடுவதில் ஆர்வமிக்கவர்கள். நாகர்கள், இயக்கர்கள் ஆகிய இரு இனத்தவரும் பேசிய மொழி தமிழ். அவர்கள் தமிழர்கள். இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான். இதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

ஏறத்தாழ 30000 வருடங்களுக்கு முன்பே அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளைப் போல் இலங்கையிலும் தாழிகள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள் மற்றும் பல தமிழ் சான்றுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. கி.மு.543 வரை இலங்கையில் எல்லாம் நன்றாகத்தான் நடந்தது. கி.மு.543ம் வருடம், லாலா நாட்டு மன்னர் துரத்தி விட்ட விஜயன் என்ற தரித்திரம் 700 பேர்களுடன் இலங்கையில் வந்து இறங்கியது. அன்று தொடங்கியது நம் மக்களுக்கான சாபம்.

701 ஒண்டவந்த பிடாரிகள்

இன்றைய ஒடிஷாவில் சில பகுதிகளும், மேற்குவங்கத்தில் சில பகுதிகளும் இணைந்த பகுதி 2500 ஆண்டுகளுக்கு முன் லாலா நாடு என்று அழைக்கப்பட்டது. அதை ஆண்ட அரசனுக்குப் பிறந்த பெண்குழந்தை மனிதர்களோடு வாழமாட்டாள் என்று ஜோசியர்கள் சொல்லிவிட்டார்கள். அவன் அந்தப் பெண்ணைக் காட்டுக்கள் துரத்திவிட்டான். அவளைப்பார்த்து ஒரு சிங்கத்துக்குத் தீராத காதல் வந்து விட்டது. பின்னர் சிங்கத்துடன் குடும்பம் நடத்தி அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் பெயர் சிங்கபாகு, சிங்காசீவிலி. பின்னர், சிங்கபாகுவும், சிங்காசீவிலியும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் இருவருக்கும் பிறந்த மூத்தத் தறுதலைப் பையன்தான் விஜயன். சற்றுக் கேவலமான கதைதான். இருந்தாலும் இதைத்தான் அவர்கள் பெருமையாக சிங்கப்பரம்பரை என்று சொல்லிக் கொள்கிறார்கள். இலங்கை தேசியக் கொடியில் இருக்கும் சிங்கம்தான் அந்த சிங்கமா என்பது அவர்களுக்கே வெளிச்சம்..

விஜயன் கொடுமைக்காரனாக இருந்தான். இது மன்னனுக்கும் பிடிக்கவில்லை, மக்களுக்கும் பிடிக்கவில்லை. மன்னர் சிங்கபாகு விஜயனையும், அவனுடன் 700 பேரையும் சேர்த்து சுக்கான் இல்லாத கப்பலில் அனுப்பிவிட்டார். சுக்கான் என்றால் பேருந்தில் இருக்கும் Steering போல கப்பலைத் திசைமாற்ற உதவும் கருவி. சுக்கான் இல்லாத கப்பல் காற்றின் திசையில் முதலில் சுப்பராகா என்னும் இடத்தில் கரையொதுங்கியது. அங்கும் இவர்கள் அட்டகாசம் தாங்கமுடியாமல் மீண்டும் நாடுகடத்தி விட்டார்கள். அவர்கள் கப்பல் கடைசியாக வந்து நின்ற இடம் தாமிரபரணி என்ற இலங்கை. அவன் வந்து சேர்ந்த ஆண்டு கி.மு.543. அவன்தான் இலங்கையில் கால்வைத்த முதல் சிங்களன்.

மகாவம்சம்

இலங்கையின் வரலாற்றுப் பெட்டகம் என்று அவர்கள் கூறுவது மகாவம்சம் என்ற நூல். 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அதை எழுதியவர் மஹாநாம தேரர் என்ற புத்த பிக்கு. அது ஒரு தொகுப்பு நூல். பலர் அவருக்கு முன்பே எழுதிவைத்த குறிப்புகள், நூல்கள் எல்லாம் ஒன்றுசேர்த்து இடையில் இவருக்குப் பிடித்தவாறு மானே, தேனே, பொன்மானே என்று பல இடைச்செருகல்களுடன் சேர்த்து எழுதப்பட்ட நூல் அது. சில உண்மைகளும், நம்பத்தகுதியில்லாத பல பொய்களும் சேர்ந்த வரலாற்று நூல் மகாவம்சம்.

விஜயன் வருகைக்கு முன்பே இங்கு நாகர்கள் அரசாண்டார்கள் என்பதையும், அவர்களுக்குள் இருந்த பிரிவினைகளையும் குறிப்பிடுகிறது மகாவம்சம். அந்த நூல் சில உண்மைகளைக் கூறினாலும், பல பொய்களையும் கட்டவிழ்த்து விடுகிறது. உதாரணமாக, புத்தர் இலங்கை தீவுக்கு வந்ததாகவும், அப்போது இயக்கர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்திலே ஆகாயத்திலேயே அமர்ந்திருந்தார் என்றும், இயக்கர்களை பயமுறுத்த புத்தர் புயல், மழையெல்லாம் வரவழைத்தார் என்றெல்லாம் கூசாமல் பல பொய்யான குறிப்புகளைக் கூறுகிறது. மேலும், இயக்கர்கள் பயந்துபோய் மொத்தத்தீவின் கட்டுப்பாட்டையும் புத்தரிடம் ஒப்படைத்தார்கள் என்று கூறுகிறது. புத்தருக்கே தெரியாமல் புத்தர் எப்போது இலங்கை சென்றார் என்று தெரியவில்லை. அதுவும் ஆகாயத்தில் அமர்ந்து மந்திர தந்திரங்கள் எல்லாம் செய்தாரென்று புத்தரை ஒரு மலையாள மந்திரவாதி போல குறிப்பிடுகிறது மகாவம்சம். இந்த பொய்கள் ஒருபுறம் இருக்கட்டும். நாம் மகாவம்சம் விஜயனைப் பற்றி என்ன சொல்கிறதென்று பார்க்கலாம்.

மகாவம்சம் விஜயன் வந்தேரிதான் என்று ஒப்புக்கொள்கிறது. இலங்கை அரசு கூட இதனை ஒப்புக்கொண்டது. 1956ம் ஆண்டில் இலங்கை அரசு ஒரு தபால்தலையை வெளியிட்டது. விஜயன் இலங்கைக்கு வந்து 2500 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதைக்காட்டும் விதமாக வெளியிடப்பட்ட தபால்தலை அது. அவன் இந்த மண்ணைச்சார்ந்தவன் அல்ல, அகதி என்பதை தாங்களே ஒத்துக்கொண்டதுபோல் ஆகிவிட்டதால் திரும்பப்பெறப்பட்டது.

f5b09-vijayan-arrival

மகாவம்சக் குறிப்புப்படி, விஜயன் இலங்கை வந்ததும் குவேணி என்ற இயக்கர் குல பெண்ணை மணக்கிறான். அதன்பிறகு, பதவி ஆசையால், குவேணியைத் துரத்திவிட்டு பாண்டிய மன்னன் மகளை மணந்து கொண்டான். இந்த லாலா நாட்டு விஜயனுடன் வந்த மக்களுக்கும் அங்கு வாழ்ந்த பூர்வக்குடிகளான நாகர்கள், இயக்கர்கள் ஆகியோர் கலப்பில் உண்டான இனம்தான் இலங்கையில் தற்போது வாழும் சிங்கள இனம். நாகவம்ச அரசர்கள் வரலாறு, சிங்களர்கள் ஆட்சி செய்த வரலாறு என்று நிறைய செய்திகளைப் பதிவு செய்திருக்கிறது மகாவம்சம். நாம் அந்த வரலாற்றுக்குள் ஆழமாக செல்லவேண்டாம். மகாவம்சமும், இலங்கை அரசும் சிங்களர்கள் இலங்கைக்கு துரத்திவிடப்பட்ட வந்தேறிகள் என்று ஒப்புக்கொண்டதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகமும் இலங்கையும்

இலங்கை தமிழத்திலிருந்து பிரிந்து சென்ற பிறகும் தமிழக மன்னர்களால் ஆளப்பட்டிருக்கிறது. அவர்களில் முதன்மையானவர் எல்லாளன். எல்லாளன்தான் வரலாறு கூறும் மனுநீதிச் சோழன் என்று சொல்கிறார்கள். எல்லாளன் இலங்கையை ஆண்டது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில். பின்னர் கி.பி. 992ல் ராஜராஜ சோழன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று வெற்றிகொள்கிறான். பொலநறவுவரைக் கைப்பற்றி அதனை தலைநகராக அறிவிக்கிறான். கி.பி.1017ல் ராஜேந்திர சோழன் இலங்கை முழுவதையும் கைப்பற்றினான். ராஜேந்திர சோழன் மறைவுக்குப்பின் கி.பி.1070ல் விஜயபாகு என்ற சிங்கள அரசன் இலங்கையை மீண்டும் கைப்பற்றினான்.

நமக்குக் கிடைத்த வரலாற்று சான்றுகளை வைத்துப்பார்த்தால் இலங்கை ஒருபோதும் முழுமையாக சிங்களர் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. பூர்வ தமிழ்க்குடி மன்னர்கள் இலங்கையின் ஒரு பகுதியை எப்போதும் ஆண்டு வந்திருக்கிறார்கள். 13ம் நூற்றாண்டில் இலங்கையில் சிங்கள அரசு இரண்டு பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவினர் கண்டியைத் தலைநகராகக் கொண்டும், மற்றொரு பிரிவினர் கோட்டையைத் தலைநகராகக் கொண்டும் ஆண்டார்கள். அப்போது நல்லூர் தமிழர்களின் தலைநகராக இருந்தது. ஆக 13ம் நூற்றாண்டிலிருந்து இலங்கை மூன்று நாடுகளாக இருந்தது.

15ம் நூற்றாண்டில் இலங்கையை போர்ச்சுகீசியர் கைப்பற்றினர். 1505ம் ஆண்டுமுதல் 1658ம் ஆண்டு வரை போர்ச்சுகீசியர் ஆண்டனர். பின் 1658ம் ஆண்டுமுதல் 1796ம் ஆண்டு வரை டச்சுக்காரர்கள் ஆண்டனர். அதற்குப்பின்னர் டச்சுக்காரர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். ஆங்கிலேயர்கள் 1796ம் ஆண்டுமுதல் 1948ம் ஆண்டு வரை இலங்கையைத் தன்வசம் வைத்திருந்தார்கள்.

அவிழ்க்கப்பட்ட மூன்று முடிச்சுகள்

ஆங்கிலேயர்கள் ஆட்சியைப்பிடித்ததும் நிலங்களை அபகரித்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு பொண்டாட்டி பிடிக்குமோ இல்லையோ கட்டாயம் டீ பிடிக்கும். ஆகையால் தேயிலைத்தோட்டங்களை உருவாக்கினார்கள். ஆனால் அதில் வேலை செய்ய சிங்களக்கூலிகள் மறுத்தார்கள். அதனால், 1827ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் தோட்டவேலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் வருகை சிங்களர்களைப் பாதித்தது. பிரிவினை நெருப்புப் புகையத் தொடங்கியது அப்போதுதான். ரத்தவெறி தேயிலைத் தோட்டம் வாயிலாக முளைத்தது. அதுபோக தமிழர்கள் ஆங்கிலம் எளிதாகக் கற்றுக்கொண்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றார்கள். வேலைவாய்ப்புகள் பறிபோன கோபம் எல்லாம் தமிழர்கள் மீது கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பியது.

e51b7-ceylon1601

இலங்கை மூன்று தனிநாடுகளாக பிரிந்து கிடந்தது என்று பார்த்தோம் அல்லவா. இது 1833ம் ஆண்டு வரைத் தொடர்ந்தது. 1833ம் ஆண்டு ஜேம்ஸ் ராபர்ட் லங்டன் (James Robert Langdon) என்ற ஆங்கில கவர்னர் பரிந்துரையில் மூன்று நாடுகளையும் இணைத்து ஒன்றாக்கினால் ஆட்சி செய்ய எளிதாக இருக்கும் என்று இலங்கை முழுவதையும் ஒரே நாடாக ஆக்கினார்கள் ஆங்கிலேயர்கள். மேற்போக்கில் இந்தப் பிரச்சனையின் ஆழம் புரியாது. ஆனால் தமிழர்கள் நாட்டை இழந்து அகதிகள்போல் ஆக்கப்பட்டதற்கு முதன்மைக் காரணம் இலங்கை ஒரே நாடாக்கப்பட்டதுதான். இந்தியாவில் நடந்ததும் இதுதான். இந்தியா ஒரே நாடாக ஆக்கப்பட்டதும், தமிழர்கள் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். அதேபோல் இலங்கையையும் ஒரே நாடாக்கியதன் விளைவாக தமிழர்கள் அங்கும் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டனர். இங்குதான் எரிந்து கொண்டிருந்த சிங்களத் தமிழ் வெறுப்பு நெருப்பாகக் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

முதல் தாக்குதல்

இலங்கையில் புத்தமதம் முதன்மையானது. புத்தத் துறவிகளை பிக்குகள் என்று சொல்வார்கள். பிக்குகள் என்ற பெயரில் இருக்கும் பிக்காளிகள் என்று கூட சொல்லலாம். புத்த பிக்குகள் தூண்டி விட்ட வன்முறைகள் அவ்வளவு கொடுமையானவை. தமிழர்கள் மீதான முதல் வன்முறைக்குக் காரணமே புத்த பிக்குகள்தான். பெரகரா என்ற புத்த சமய நிகழ்ச்சியில் புத்த பிக்குகள் அவர்கள் வழிப்பாட்டுத் தளங்களுக்கு செல்லும்போது பாடிக்கொண்டே செல்வார்கள். அவர்கள் செல்லும் வழியில் சில மசூதிகள் இருந்தது. தமிழ் முஸ்லீம்கள், மசூதி அருகில் மட்டும் பாடாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். இது புத்த பிக்குகளுக்கு கோபத்தைத் தூண்டியது. இந்தப் பிரச்சனையை முன்வைத்து 1915ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி கண்டி பகுதியில் வசித்த தமிழ் முஸ்லீம்கள் தாக்கப்பட்டனர். தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட முதல் வன்முறை இது.

25க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர் என்றும் 116 பேர் கொல்லப்பட்டனர் என்றும் இரண்டுவிதமான புள்ளிவிபரங்கள் கிடைக்கின்றன. கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் காயப்பட்டனர். 250 வீடுகள் கொளுத்தப்பட்டன. 4075 வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. 17 மசூதிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. 86 மசூதிகள் தாக்குதலில் உருக்குலைந்து போயின. பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். வன்முறையில் அரசாங்கம் அளிக்கும் புள்ளிவிபரங்கள் நம்பும்படி இருக்காது. அவர்கள் கொடுத்ததை விட பல மடங்கு சேதாரங்கள் நடந்திருக்கும் என்பது நிதர்சனம். இலங்கைத் தமிழர் என்ற தலைப்புக்குள் தமிழ் முஸ்லீம்கள் என்று தனிப் புத்தகமே எழுதலாம். தமிழ் முஸ்லீம்கள் அவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஒருவழியாக கலவரம் ஜூன் 5ம் தேதிவாக்கில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கலவரத்துக்குக் காரணமான பல சிங்களத் தலைவர்களை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். அவர்களுக்காக இங்கிலாந்து வரை சென்று ஒருவர் ஆங்கில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிங்களத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கித்தந்தார். அவர் பொன்னம்பலம் ராமநாதன் என்ற பச்சைத் தமிழர். அவர் இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்தபோது, சிங்களத் தலைவர்கள் பலரும் நேரில் வந்து வரவேற்று, அவரை வீடுவரை மரியாதையாக விட்டுவந்தனர்.

கலவரம் ஏன் உடனடியாக கட்டுக்குள் வரவில்லை? அதன் பின்புலத்தை நாம் ஆராய வேண்டும். முதல் உலகப்போர் நடந்துகொண்டிருந்த நேரத்தில் நடந்தது அந்த வன்முறை. மேலும் ஆங்கிலேயர்கள் இலங்கையில் ராணுவத்தை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் இந்தியாவைப்போல இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஒருநாளும் நடைபெற்றது கிடையாது. அதனால் ராணுவத்துக்கான தேவை அதிகமாக இல்லை. ஆங்கிலேயர் ராணுவம் 1881ம் ஆண்டு இலங்கையிலிருந்து மூட்டைகட்டிக் கிளம்பிவிட்டது. இலங்கையில் நடைபெற்றக் கலவரங்கள் அனைத்தும் உடனே கட்டுக்குள் வராததற்கு அது ஒரு மிகமுக்கிய காரணம். கலவரங்களை அடக்க சிங்களக் காவலர்கள்தான் வரவேண்டும். கலவரம் செய்வதே சிங்களன்தான் என்பதால் காவல்துறை கைகட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும். இலங்கையில் ஆங்கிலயே ஆட்சி நடந்தபோதும் கலவரங்கள் உடனடியாக கட்டுக்குள் வராததற்கு ஆங்கில ராணுவம் அங்கு இல்லாதது ஒரு முதன்மையான காரணம். இரண்டாவது காரணம் தமிழ் மக்களிலேயே ஒரு பிரிவினர் சிங்களருக்கு உதவியாக இருந்த பச்சைத்துரோகம்.

ஒரு எழுத்தால் வந்த வினை

1956ம் ஆண்டு சாலமன் பண்டாரநாயகா சிங்கள இனவாதத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடிக்கிறான். ஆட்சிக்கு வந்ததும் சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்ற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது ஆங்காங்கே பல கலவரங்களுக்கு வித்திட்டது. 1958ம் ஆண்டு சில சிங்களக் குழுக்கள், அனைத்து வண்டிகளிலும் சிங்கள எழுத்து எழுதப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அது ஸ்ரீ என்ற பொருள்படும் சிங்கள எழுத்து. தமிழர்கள் தங்கள் வண்டிகளில் எழுத மறுப்புத் தெரிவித்தார்கள். அப்படி மறுத்த ஒரு கல்லூரி மாணவியின் மேலாடையைக் கிழித்து, மார்பில் சூடான கம்பியால் சிங்கள எழுத்தை எழுதினார்கள். இதற்கு தமிழர்கள் கடும் எதிப்பு தெரிவித்தார்கள். இது கலவரமாக மாறி, அதில் 400 முதல் 1500 பேருக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

தமிழர்கள் ஆங்காங்கு அவ்வப்போது கொல்லப்பட்டாலும், 1974ம் ஆண்டு வரை தனிநாடு என்ற கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்ததில்லை. அரசியல் தலைவர்கள், தமிழர்களுக்கு அனுகூலமான காலம் வருமென்று நம்பிக் கொண்டிருந்தார்கள். இரண்டு சம்பவங்கள் தமிழர்களை தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைக்கத் தூண்டியது.

வட்டுக்கோட்டை மாநாட்டுக்கு அடிகோலிய உலகத்தமிழ் மாநாடு

1972ம் ஆண்டு தரப்படுத்துதல் என்ற பெயரில் தமிழர்களின் கல்வியில் கைவைத்தார்கள். நுழைவுத்தேர்வில் 600க்கு குறைந்தது 270 மதிப்பெண்கள் பெற்றால்தான் தமிழ் மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் சிங்களன் 227 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது. இது மாணவர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. தனிநாடுதான் ஒரே தீர்வு என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் அப்போதே துளிர்விடத் துவங்கிவிட்டது. அப்போது பல மாணவர் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவைதான் பின்னாளில் ஆயுதம் ஏந்திய குழுக்களாக மாற்றமடைந்தன. அவற்றில் ஒன்றுதான் விடுதலைப் புலிகள் அமைப்பு. தரப்படுத்துதல் என்ற பெயரில் கல்வியைக் குலைத்தது தமிழர்கள் மனதில் தனிநாடு என்ற எண்ணத்தை விதைத்தது உண்மை. ஆனால் அது கோரிக்கையாக, போராட்டமாக மாறவில்லை.

நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 10ம் தேதி வரை நடைபெற்றது. ஆல்ஃப்ரெட் துரையப்பா என்ற தமிழர்தான் அங்கு மேயர். மாநாட்டை மாநகராட்சி அரங்கத்தில் நடத்த வேண்டும் என்று அனுமதி கேட்டார்கள். தமிழர் என்றாலும் தமிழர்களுக்கும் அவருக்கும் மாமியார் மருமகள் பொருத்தம். அவர் மாநாட்டை மாநகராட்சி அரங்கத்தில் நடத்த அனுமதி தரவில்லை. அதனால் அது வேறொரு அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டின் கடைசி நாளில் சிங்களவர்கள் அரங்குக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். துப்பாக்கிச்சூட்டில் சிலர் இறந்து போனார்கள். மின்கம்பிகள் அறுந்து விழுந்து சிலர் இறந்து போனார்கள். மொத்தம் 9 முதல் 11 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

0ec41-chelva_1

அதுவரை பொறுமையாக தங்களது உரிமைகளைக் கேட்டுவந்த தமிழர்கள், தங்கள் பொறுமையின் எல்லைக்கே வந்துவிட்டார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு நிறைய அரசியல் கட்சிகள் இருந்தன. உலகத்தமிழ் மாநாட்டில் நடந்த படுகொலைகளுக்குப் பின் 1974ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி வட்டுக்கோட்டை என்ற இடத்தில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைக்கப்பட்டு “தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி (Tamil United Liberation Front)” என்ற புது அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது. அந்த மாநாட்டில்தான் இனி சிங்களனோடு சேர்ந்து வாழ்வதென்பது கனவு. தனிநாடு ஒன்றே தீர்வு என்ற முடிவெடுக்கப்பட்டது.

கொள்கை வாழ்ந்தது பதவி வீழ்ந்தது

1974ம் ஆண்டு தனி ஈழம் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து “தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி” என்ற புதிய கட்சி உருவானதென்று பார்த்தோம். 1977ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி கட்சி போட்டியிட்ட 19 தொகுதிகளில் 18 தொகுதியில் அறுதிப்பெரும்பான்மையில் வெற்றிகண்டது. இலங்கையிலேயே இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தமிழர் கட்சி வெற்றி பெற்றதையே சிங்களனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மீண்டும் கலவரம் வெடித்தது. 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டனர்.

இதையொட்டி நடந்த இன்னொரு சம்பவம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. நமது தமிழக அரசியல்வாதிகளுக்கு சொல்லித்தரவேண்டிய பாடம் அது. இலங்கை அரசு, தனிநாடு கோரிக்கையை முன்வைக்கும் கட்சிகள் சட்டப்படி செல்லாது என்று அறிவித்தது. “தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி” கட்சிக்கு நெருக்கடி வந்தது. அந்த 18 அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக சொன்னார்கள், எங்களுக்கு கொள்கைதான் முக்கியம், பதவி முக்கியமல்ல. 18 அமைச்சர்களும் பதவியைத் தூக்கியெறிந்தார்கள். அங்கு கொள்கை வாழ்ந்தது, பதவி வீழ்ந்தது.

இறந்த பின்பும் ஈழத்தைக் காணவேண்டும் என் கண்கள்

1983ம் ஆண்டு நடந்தது அதுவரை நடந்த கொடூர கலவரங்களின் உச்சம். 1983 ஜூலை 23ம் தேதி ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடந்த சண்டையில் 13 சிங்கள ராணுவ வீரர்கள் இறந்தார்கள். மக்களிடையே வெறியைத் தூண்டுவதற்காக அந்த ராணுவ வீரர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் போடப்பட்டு ஊர்வலமாகக் கொண்டுபோகப்பட்டன. இது கலவரமாக மாறியது. வெறிபிடித்த சிங்களர்கள் கிட்டத்தட்ட 3000 தமிழர்களைக் கொன்று சாய்த்தார்கள். குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற தமிழீழப் போராளிகள் அப்போது வெலிக்கடை என்ற பகுதியில் இருந்த சிறைச்சாலையில் இருந்தார்கள். அதில் குட்டிமணிக்கு ஏற்கனவே தூக்குதண்டனை உறுதியாகியிருந்தது. அவர் அதற்கெல்லாம் கவலைப்படுகிற ஆளில்லை. அவர் ஒரு கோரிக்கை வைத்திருந்தார், நான் இறந்தபிறகு எனது கண்களை ஒரு பார்வையில்லாத தமிழனுக்குக் கொடுத்துவிடுங்கள், எனது கண்கள் ஈழத்தைக் காணவேண்டுமென்று. கலவரத்தின்போது சிறையில் நுழைந்த சிங்கள வெறியர்கள், சிறையில் இருந்த 53 பேரையும் கொன்றார்கள். மேலும் குட்டிமணியின் கண்களைத் தோண்டி எடுத்து அதைக் காலில் போட்டு மிதித்தார்கள். இந்தக் கலவரம் கருப்பு ஜூலை என்று அழைக்கப்படுகிறது.

ecf2b-black2bjuly2b-2b25e025ae259525e025ae25b025e025af258125e025ae25aa25e025af258d25e025ae25aa25e025af25812b25e025ae25af25e025af258225e025ae25b225e025af2588

இலங்கையில் இடைவெளி இல்லாமல் பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. மக்கள் ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் சில முக்கியமான கலவரங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம். 2000ம் ஆண்டு பிந்துனுவேவா என்ற இடத்தில தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் 27 பேர் கொல்லப்பட்டனர். இது திட்டமிடப்பட்ட படுகொலை. கொலை நடந்த முந்தைய நாள் அங்கிருந்த ராணுவ வீரர்களை கிளம்பி செல்லும்படி சிங்கள அரசாங்கம் ரகசியமாகத் தகவல் அனுப்பியது. காவலர்கள் யாருமில்லாத நிலையில், சிங்கள வெறியர்கள் கத்தி, அரிவாளுடன் வந்து அங்கிருந்த எல்லோரையும் வெட்டி சாய்த்தார்கள்.

2001ம் ஆண்டு மாவனல்லை என்ற இடத்தில், சிங்களர் ஒரு தமிழ் முஸ்லீம் கடையில் சிகரெட் கேட்டு, அவர்கள் கேட்ட சிகரெட் இல்லை என்று சொன்னதால் அவரைக் கேவலமாகத் திட்டியிருக்கிறார்கள். இதைக்குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் முறையிட அது ஒரு கலவரமாக மாறி அதில் தமிழ் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர். 2006ம் ஆண்டில் திருகோணமலையில் ஒரு குண்டுவெடிப்பில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இலங்கைக் கலவரங்களையும், படுகொலைகளையும் பட்டியலிட நம்மால் முடியாது. அது ரத்த ஆறுகள் ஓடிய சரித்திரம். மனிதத்தன்மையுள்ள எவரும் சகிக்க முடியாத கொடூரங்கள் அவை. நாட்டின் பூர்வக்குடிகளை வந்தேறிகள் கொன்றுகுவித்தக் கொடுமை. மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு சகிக்க முடியாதவர்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் அங்கு போராட்டக் குழுக்கள் உருவாவது இயற்கை. இலங்கையில் நிறையப் போராட்டக் குழுக்கள் உண்டு. அவற்றைக் குறித்து சிறு மேற்பார்வை மட்டும்.

ஈழப் போராளிகள்

இலங்கையில் தனி ஈழக் கோரிக்கையை முன்வைத்த போராளிக் குழுக்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் முதன்மையான குழுக்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

1) தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam)
2) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (Eelam People’s Revolutionary Liberation Front)
3) தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization)
4) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People’s Liberation Organisation of Tamil Eelam)
5) ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organisation of Students)
6) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (Eelam National Democratic Liberation Front)

இவற்றுள் மாபெரும் இயக்கமென்றால் அது “தமிழீழ விடுதலைப் புலிகள்” இயக்கம்தான். தனி அரசாங்கமே வெற்றிகரமாக நடத்திய இயக்கம் அது. கப்பல் படை, விமானப்படை எல்லாம் வைத்திருந்த தனி அரசாங்கம் என்றே சொல்லலாம். விடுதலைப் புலிகள் என்றால் சிங்கள அரசாங்கத்துக்கு கால்கள் நடுங்கத் தொடங்கிவிடும். இது மிகைப்படுத்தப்பட்ட வாசகமல்ல. உதாரணமாக 1982ம் ஆண்டு, கொழும்புவில் விடுதலைப் புலிகள் 16 பேர் ஊடுருவி விட்டார்கள் என்று ஒரு வதந்தி பரவியது. உடனே பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவங்களுக்கு 3 நாள் விடுமுறை அறிவித்தார். புலிகள் மீது சிங்கள அரசாங்கத்தின் பயத்தை விளக்க இந்த ஒரு சம்பவம் போதுமானது. தமிழீழப் போராட்டக் குழுக்களுக்கிடையே நிறைய மோதல்கள் நடந்திருக்கின்றன. இலங்கை அரசுக்கு உதவியது போன்ற சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களுக்கிடையே சண்டை நடந்தது. நாம் இலங்கையின் பூர்வகுடிகள் யார் என்பதையும், அங்கு நடந்த இனப்படுகொலைகளைப் பற்றியும் மட்டும் ஆராய்வதால் போராட்டக் குழுக்களிடையே நடந்த சண்டைகள் பற்றி நாம் அதிக கவனம் செலுத்த வேண்டாம்.

அதேபோல், தமிழ் அரசியல்வாதிகள், இலங்கை அரசியல்வாதிகள் குறித்தும் நாம் ஆழமாகப் பார்க்கப் போவதில்லை. நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால், சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூட தமிழர் நலனுக்கு எதிராக, இலங்கை அரசுக்கு உதவியாக செயல்பட்டிருக்கிறார்கள். கலவரங்களுக்குத் துணைபோயிருக்கிறார்கள். அவர்களில் பலர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் ஆல்ஃப்ரெட் துரையப்பா, கனகரத்தினம் போன்றவர்கள். சுட்டுக்கொல்லப்பட்ட கனகரத்தினத்தின் மகன் ரஞ்சன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார் என்பது சிறப்புச் செய்தி.

போராட்டக் குழுக்களை தனியாக வெற்றி கொள்ளுமளவுக்கு இலங்கை வீரம் பொருந்திய நாடு கிடையாது. சுண்டைக்காய் நாடு அது. இன்னொரு நாட்டின் உதவி இல்லாமல் இலங்கையால் கடலில் ஒரு கப்பல் கூட விடமுடியாது. இலங்கைக்கு உதவி செய்ய வரிந்துகட்டி வந்தது இந்தியா. இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்று பார்க்கலாம். இந்தியா அரசியல் ஆதாயம் என்ற பெயரில் உள்ளே மூக்கை நுழைத்து சில உதவிகள் செய்தாலும் பல இன்னல்களுக்கும் ஆளாக்கியிருக்கிறது இலங்கைத் தமிழ் மக்களை. சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இலங்கையும் இந்தியாவும்

இலங்கையில் நடந்த அத்துமீறல்களுக்கு முதலில் இந்தியாவிலிருந்து ஓங்கி ஒலித்த குரல் இந்திராகாந்தியுடையது. அங்குள்ள போராளி அமைப்புகளுக்கு இந்தியா போர்ப்பயிற்சிகள் அளித்தது. இலங்கைப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு சென்றது இந்திராகாந்திதான். மேலும் இந்தியாவின் அண்டைநாடுகள் இலங்கைப் பிரச்சனையில் தலையிடாமலும் பார்த்துக்கொண்டார். இதன்பின்னால் அரசியல் ஆதாயமும் இருந்ததென்பது உண்மை. ஆனால் அவருடைய தலையீடு தேவையான ஒன்றாக இருந்தது. 1984ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டது இதில் சற்றுப் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்திராகாந்திக்குப் பின்னால் ராஜீவ்காந்தி இலங்கைக்கும் இந்தியாவுக்குமானத் தொடர்பை வலுப்படுத்துகிறேன் என்ற பெயரில் தமிழர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். கண்டுகொள்ளாமல் விட்டால் கூடப் பரவாயில்லை. ராஜீவ் இலங்கை அரசுக்கு மறைமுகமாக உதவி செய்யத் தொடங்கினார். 1985ம் ஆண்டு ஜூலை 8ம் நாள் பூட்டான் தலைநகர் திம்புவில் தமிழர் விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதன்பின்னர் ராஜீவ் தனது அதிபுத்திசாலித்தனத்தைக் காட்டுகிறேன் என்ற பெயரில் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதுவும் தமிழர் தரப்புக் கோரிக்கைகளைக் காதுகொடுத்துக் கேட்காமல்.

பாடை கட்டிய அமைதிப்படை

1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை டெல்லிக்கு வரச்சொல்லிவிட்டு ராஜீவ்காந்தி இலங்கைக்குப் போய் ஒரு சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். விடுதலைப் புலிகளைக் கலந்தாலோசிக்கவில்லை, தமிழர் அமைப்புகளையும் ஆலோசிக்கவில்லை. ஆனால் தமிழர்களுக்கும் இலங்கைக்கும் இடையேயான சமாதான உடன்படிக்கையில் அவர் கையெழுத்திடுகிறார். இது நடந்தது 1987 ஜூலை 29ம் நாள். இதனை ஒப்புக்கொள்ளுமாறு ராஜீவ் பிரபாகரனை வற்புறுத்துகிறார். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்தது எதிர்க்காமல் இருங்கள் என்று பிரபாகரனைக் கேட்டுக்கொண்டார். வேறுவழியில்லாமல் பிரபாகரன் ஒப்புக்கொண்டார்.

960b0-rajivvp

பின்னர் ஹர்கிரட் சிங் (Harkirat Singh) என்பவரது தலைமையில்இந்திய அமைதிப்படை (Indian Peace Keeping Force) இலங்கைக்கு வந்திறங்கியது. அமைதிப்படை வந்திறங்கியதும் மக்கள் ஆரவார வரவேற்பளித்தனர். அமைதிப்படைக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றில் ஒன்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி வருவது. துவக்கத்தில் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் துவங்கினார்கள். சில நாட்களில் ஒரு அதிர்ச்சி புலிகளுக்குக் காத்திருந்தது. இந்திய அமைதிப்படைகளுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு பணி, சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவது. இந்த துரோகத்தை புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன்பிறகு புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவில்லை.

489e9-_98132876_gettyimages-52017509

இந்திய அமைதிப்படைக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு முதன்மையான பணி பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கென்று அழைத்து அவரைக் கொன்று விடுவது. ஆனால் ஹர்கிரட் சிங் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இதை ஹர்கிரட்சிங், தான் எழுதிய “Intervention in Sri Lanka: The I.P.K.F. Experience Retold”என்ற புத்தகத்தில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இந்திய அமைதிப்படை புலிகளை அழிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கியதும், புலிகளுக்கும் அமைதிப்படைக்கும் இடையே போர் மூண்டது. இந்திய அமைதிப்படை மருத்துவமனைகள் மீதெல்லாம் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்றது. ஒருவழியாக இந்திய அமைதிப்படை 1990 மார்ச் 31ம் தேதி திருப்பி அனுப்பப்பட்டது. இந்த காலகட்டத்தில் அமைதிப்படையினரால் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அமைதிப்படையாய் வந்து அழித்துக் கொன்ற பெருமை நமது இந்தியாவையே சேரும். குறிப்பாக ராஜீவ்காந்தியை. ராஜீவ் காந்தி பின்னாளில் படுகொலை செய்யப்படுகிறார். அதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. புலிகளுக்கும், தமிழ்மக்களுக்கும் அளிக்கப்பட்ட கொஞ்சநஞ்ச உதவிகள் கூட அதன்பிறகு இந்தியாவிலிருந்து கிடைக்கவில்லை. மேலும் 2001ம் ஆண்டு, அமெரிக்காவில் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப்பின், உலகின் பல போராட்ட குழுக்கள், தீவிரவாத குழுக்கள் என்று முத்திரை குத்தப்பட்டன. அவற்றில் ஒன்று விடுதலைப்புலிகள். அதற்குப்பின்னர், வெளிநாடுகளிலிருந்து வரும் பண உதவி மற்றும் ஆயுத உதவி விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கிடைக்காமல் போனது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான இறுதி யுத்தம் தொடங்கியது 2006ம் ஆண்டு. மூன்று ஆண்டுகள் நடந்த போர் அது.

ரத்த வெள்ளம்

2006ம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே யுத்தத்துக்கான ஆயத்தப் பணிகளை இலங்கை அரசு துவங்கிவிட்டது. யுத்தத்துக்குத் தேவையான M17 ஹெலிகாப்டர்கள், கப்பல்கள், ரேடார்கள், ஆகிவற்றை இந்திய அரசு இலங்கைக்கு 2006ம் ஆண்டிலேயே வழங்கியிருக்கிறது. இலங்கையின் விமானதளத்தை புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார்கள். மேலும் போரில் தொழில்நுட்ப உதவிக்காக 356 வல்லுநர்களை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி உதவியிருக்கிறது. மன்மோகன் சிங் சார்க் மாநாட்டுக்கு சென்றபோது கிட்டத்தட்ட 3000 படைவீரர்கள் அங்கு இருந்தார்கள். அவர்கள் பாதுகாப்புக்கு சென்றார்களா, இல்லை இலங்கை அரசாங்கத்துக்குப் போரில் உதவியாக சென்றார்களா என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. மேலும் புலிகள் 10 கப்பல்களில் வைத்திருந்த ஆயுதங்களை அழிக்க இந்தியா உதவியது. ஆஸ்திரேலியா அருகில் வரை சென்று கப்பல்களை அழித்திருக்கிறார்கள். உதவியது இந்தியா. ஆகமொத்தம் அங்கு போரை நடத்தியதே கிட்டத்தட்ட இந்திய அரசாங்கம்தான். இங்கு தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களைக் காப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அங்கு அவர்களைக் கொன்று குவிக்க உதவியது இந்தியா. இந்தியா செய்த பச்சைத்துரோகம் இது. இலங்கை அரசுக்கு இந்தியா வைத்த வேண்டுகோள் என்னவென்றால், 2009ம் ஆண்டு கோடைகாலத்துக்குள் யுத்தத்தை முடித்து விடுங்கள் அதன்பிறகு நாங்கள் தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும் என்பதுதான்.

2006ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி துவங்கப்பட்ட யுத்தம் 2009 மே 18ம் தேதி வரை போர் நடந்தது. யுத்தத்தின் முடிவில் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். யுத்தம் நடந்த இடத்தில் மொத்தம் இருந்தது 3 இலட்சம் பேர். ஆனால் இந்தியா மற்றும் பிற உதவிக்குழுக்கள் மூலம் உணவு அனுப்பப்பட்டது வெறும் 70 ஆயிரம் பேருக்கு மட்டும்தான். பட்டினியால் செத்தவர்கள் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு மேல். போரில் பாதிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது, அதில் 5000 பேருக்கு மேல் கைகளோ, கால்களோ அகற்றும் சிகிச்சை நடந்திருக்கிறது. கண்ணீர் வரவைக்கும் செய்தி என்னவென்றால் இவையெல்லாம் மயக்கமருந்து ஏதும் கொடுக்காமல் செய்யப்பட்டிருக்கிறது. மயக்கமருந்து கிடைக்காததால் கதறக்கதற வெட்டி அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். இன்னும் கொடூரம் என்னவென்றால் அறுவை சிகிச்சை செய்யும் உபகரணங்கள் இல்லாமல் கசாப்புக்கடையில் பயன்படுத்தும் கத்திகளைப் பயன்படுத்தி கை கால்களை வெட்டியிருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்தது சந்தேகத்துக்கு இடமில்லாமல் இனப்படுகொலை. அதற்குக் காரணமான சிங்கள அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். யுத்தத்தில் எதிரிக்கு வெற்றி எளிதாகிறதென்றால், அவன் தலைசிறந்த வீரன் என்று அர்த்தமல்ல, அவனுக்கு சில துரோகிகள் உதவி செய்கிறார்கள் என்று அர்த்தம். தமிழர்களுக்கு உதவிபுரிகிறேன் என்று உறுதிமொழிகளை வாரி வழங்கிவிட்டு சிங்கள அரசாங்கத்துக்கு யுத்தத்துக்கான அனைத்து உதவிகளையும் செய்தது இந்தியா. இந்தியாவின் உதவியில்லாமல் இலங்கையால் ஒருபோதும் வெற்றிபெற்றிருக்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை. ராஜிவ் காந்தி என்ற ஒற்றை உயிருக்காக, ஒரு நாட்டையே அழிக்குமளவுக்கு இந்திய அரசாங்கம் கீழ்த்தரமான வேலைகளை செய்திருக்கிறது. இத்தனைக்கும், விடுதலைப்புலிகள்தான் ராஜிவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற உறுதியான ஆதாரம் எதுவும் இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. சிலர் மனம்விட்டு சிரிக்க ஒரு நாடே கண்ணீர் சிந்த வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கண்ணீர் சிந்தியதாலோ என்னவோ அந்த நாடே கண்ணீர்த்துளி வடிவில் இருக்கிறது.

பின் குறிப்புகள்

1) https://en.wikipedia.org/wiki/Pangaea

2) https://en.wikipedia.org/wiki/Gondwana

3) https://www.livescience.com/40311-pleistocene-epoch.html

4) http://thamil.co.uk/?p=8449

5) http://www.velanai.com/velanai_history/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be/

6) https://www.giss.nasa.gov/research/briefs/gornitz_09/

7) http://paristamil.com/mobile/details.php?newsid=24921

8) http://www.bbc.com/tamil/sri-lanka-41462872

9)https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)

10) https://www.youtube.com/watch?v=pO1UqhIajko

11) https://en.wikipedia.org/wiki/1915_Ceylonese_riots

12) http://www.bbc.com/tamil/sri_lanka/2013/07/130723_blackjuly_thirtyyears

13) http://mawanellanews.com/%E0%AE%AE%E0%AF%87-2001-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/

14) https://en.wikipedia.org/wiki/List_of_Sri_Lankan_Tamil_militant_groups

15) http://www.seithy.com/breifArticle.php?newsID=87838&category=Article&language=tamil

16)http://www.satp.org/satporgtp/countries/shrilanka/database/leaders_assassinated_byLTTE2.htm

4 Responses

  1. Good information about Srilankan Tamils, this gives a very clear view about Srilankan Tamil’s history

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்
Index