பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என்
கையைப்பிடிச்சவளே…
செரட்டயப்போல என் காதலையும்
பொரட்டிப் போட்டவளே…
அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன
எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே..
தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன..
ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே…
சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு
வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி..
ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம்
ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச..
கெழக்கால போற கெழடுகட்ட கூட
வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச…
பாம்பக் கண்டாலும் பயிராத என்ன – ஏண்டி
பல்லாங்குழி ஆட வச்ச…
உப்பாத்த ஓடை போல மனசுக்குள்ள பாஞ்ச ஒன்ன
உப்பப்போல கரைச்சிடவா…
செடிசெத்தையைக் கண்டா விரட்டும் கோழிபோல
கொடியே ஒன்ன சுத்தி வரவா…
உப்பள்ளிப் போகும் ராலி போல வெரசா வந்து
உள்ளத்த இத்துனூண்டு அள்ளிப் போகவா…
துரமாப் போறேன்னு எவன் கேட்டாலும் பதில்சொல்லாம
தூரமாப் போறேண்டி ஒன்ன எண்ணி…
கோடிகட்டி கோயில்கொடைக்கு நீயும் வந்தா
கேடியா மாறி உன்ன தூக்க சொல்லுது மனசு..
புட்டான் போட்ட சேலை நீயும் கட்டிக்கிட்டு போனா
கோட்டான் போல ராவெல்லாம் கண்முழிக்கிறேன்….
அடைக்கலாங்குருவி போல நெஞ்சுக்குள்ள வந்து அடஞ்ச
கரிச்சாங்குருவி மாதிரி நானும் கத்திட்டு திரியுறேன்…
பல்லக்காட்டி நீயும் சிரிச்சிட்டு போன
வெள்ளக்குழாய் போல நானும் ஒடஞ்சேன்…
புல்லாவெளி போன மாடு வீட்டுக்கின்னும் வரல அதத்தேடிப்போன
எல்லாவழியும் ஒன்னோட வீட்டுலதான் முடியுதடி…
ஈரக்கொல ரெண்டும் ஒட்டிக்கிச்சி புள்ள
தறுதல நெஞ்சுக்கு நீதாண்டி மூக்கணாங்கயிறு…
ரெத்தமெல்லாம் ஒன் நெனப்பு ஊறிப்போய் கெடக்கு
செத்தமூதின்னு கெழவி திட்டினாலும் காதுல தேனாப்பாயுது…
கறுக்குமட்ட வேலிகட்டி தென்னந்தட்டி வச்சி மனசுக்குள்ள மூடி
கிறுக்கு புடிச்சி சுத்துறேண்டி ஒன்ன எண்ணி…
ஒடங்காட்டுக்குள்ள பூத்த காதல் இது
ஒடம்புக்குள்ள பூக்கும் நாளும் வருமா…
காக்கா முள்ளப்போல மனசு ரெண்டையும் ஒட்டவச்சி
நேக்கா சொட்ட மூணு போடவா…
வேலியில்லாத் தறுவைக்கொளமா இருந்த உனக்கு
தாலி கட்டி தாரமாக்கவா…
நாளகண்ணு சாயங்காலம் களத்துமேட்டு பக்கமா நிப்பேன்
நல்ல சேதியா வந்து சொல்லிப்புடு…
4 Responses
பயவுள்ள பின்னிட்டாம்…. ராஜேஷ் கலக்கிட்டே போ…. செமையா இருக்கு. உன் ஊருக்கு பகத்தூர்ல இருக்கதுக்கு நான் பெருமை படுறேன் ராஜேஷ்.
நன்றி ராமச்சந்திரா.
சூப்பர் நானும் திருநெல்வேலி தான் ஆனா சில வார்த்தைகள் புரில இருந்தாலும் சூப்பர் தான்.. வட்டார மொழி கள் அழியமா இருக்கணும்னா இப்படி பல கவிதைகள் வெளியிட்டால் நல்லாருக்கும்
மிக்க நன்றி. எந்த வார்த்தை புரியவில்லையென்று சொல்லுங்கள், அர்த்தம் சொல்கிறேன்.