உணர்வுகளின் நுண்ணறிவு (Emotional Intelligence)

மிருகம் பாதி மனிதன் பாதி

அது அடர்ந்த காடு. புலிகளுக்கும், சிறுத்தைகளும் நடுவில் வாழ வேண்டிய கட்டாயம். பலம் மிக்க விலங்குகளுக்கிடையே, அந்த ஒரு விலங்குக்கூட்டம் மட்டும் பலவீனமாக சுற்றித் திரிந்தது. காட்டுக்குள் வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஆபத்துகள் அனைத்தும் அந்த விலங்குக் கூட்டத்துக்குக் காத்திருந்தன. ஏன்? அந்த விலங்குக்கு, ஆபத்தென்றால் மான் போல மின்னல் வேகத்தில் ஓடத்தெரியாது, குரங்குகள் போல மரத்துக்கு மரம் துரிதமாகத் தாவத்தெரியாது. குரங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த மனித இனம்தான் அது. காடு அவர்களை மிரட்டியது. எதிர்த்து சண்டையிட்டு வெல்ல முடியாத அளவுக்கு ஆற்றல் வாய்ந்த விலங்குகள் வாழும் இடமது. இரண்டு ஓநாய் ஒன்று சேர்ந்தாலே உயிருக்கு உத்திரவாதமில்லை என்பதுதான் கள யதார்த்தம். பராசக்தி படத்தில் வரும் சிவாஜியின் தங்கை போல ஓடினான், ஓடினான், வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்.

பாதி குரங்கையும், பாதி மனிதனையும் தனது உடம்பில் சுமந்து கொண்டிருந்த நமது முன்னோர்களுக்கு அவ்வளவு அச்சுறுத்தல்கள் காத்திருந்தன அந்த அடர்ந்த வனத்துக்குள். இந்த பலவீனம் அவர்களைக் கூடி வாழும் சூழலுக்குத் தள்ளியது. கூட்டமாக பயணித்தால்தான் உயிர் வாழ முடியும் என்று உணர்ந்து கொண்டார்கள். தன் கண்முன்னே விரிந்து கிடைக்கும் ஆபத்துக்களை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் குழம்பித் தவித்தார்கள். அவர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பியதன் விளைவு மற்றும் வேறெந்த விலங்குக்கும் நேராத ஆபத்துகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இவையிரண்டும் அவர்களை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்துக் காட்டியது. அவர்கள் பலவீனம் அவர்களுக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது, அது பூமி தோன்றிய 500 கோடி ஆண்டுகளாக வேறெந்த விலங்குகளுக்கும் இல்லாத ஒரு  பலம். அது மூளை பலம்.

b07d0d66-f644-4813-92b9-32faf35c4357

காட்டில் வாழ்ந்தபோது பயம், பசி என்ற சிலவற்றைத் தவிர வேறெந்த உணர்ச்சிகளையும் அறிந்ததில்லை நாம். ஆனால் இன்று நம்மை விட நமது உணர்ச்சிகள் அதிக பரிணாம வளர்ச்சியை எட்டியிருக்கிறது. உணர்வுகள், சிந்தனைகளின்றி நம்மால் சில நொடிகள் கூட வாழ முடிவதில்லை. கவலை, பயம், கோபம், பரபரப்பு, இப்படி எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் வாழ்வதென்பது இன்று நமக்கு சாத்தியமேயில்லாத ஒன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முடனே சேர்ந்து வாழும் வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாத அளவுக்கு மனித இனம் மட்டும் ஏன் உணர்ச்சிப் பிழம்பாக மாறிப்போனது? அதற்கான தேடல்தான் இந்தக் கட்டுரை.

மனித மூளையும் விலங்குகள் மூளையும்

பொதுவாக பாலூட்டி விலங்குகளின் மூளைக்கும் நமது மூளைக்கும் பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால், மூளையின் எந்த அம்சங்கள் மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது?

  • பெரிய செரிப்ரல் கார்டெக்ஸ் (Cerebral Cortex)
  • அடர்த்தியான நியூரான்கள் (Neurons)
  • நெகிழ்வுத்தன்மை (Neuroplasticity)

மேற்சொன்ன காரணிகள், நமது மூளையை விலங்குகளின் மூளையிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. மற்ற எந்த விலங்குகளுக்கும் இல்லாத அளவுக்கு செரிப்ரல் கார்டெக்ஸ் நமக்கு பரந்து காணப்படுகிறது. இன்னொன்று அதில் இருக்கும் கோடிக்கணக்கான நியூரான்கள். வேறு எந்த விலங்குக்கும் இவ்வளவு அடர்த்தியான நியூரான்கள் கிடையாது. மற்றொரு முதன்மையான வேறுபாடு, நமது மூளையின் நெகிழ்வுத்தன்மை. புரியும்படி சொல்வதானால், உதாரணத்துக்கு, எழுத்தாளராக இருக்கும் நபர் எழுதுவதிலும், படிப்பதிலும் அதிக நேரத்தை செலவழிப்பார். அதன்விளைவாக, மொழி  தொடர்பான மூளையின் பகுதி அவருக்கு வளரும், அதாவது பெரிதாகும். உங்கள் மனைவி உங்களுக்கு சமைத்துத்தர ஆயத்தமாக இல்லை, நீங்களே தோசை ஊற்றிச் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சுட்ட முதல் தோசைக்கும் ஐந்தாவது தோசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். ஏனென்றால் தோசை சுடுவது தொடர்பான நியூரான்கள் உங்கள் மூளையில் அவ்வளவு வேகமாக உருவாகத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் மூளையின் நெகிழ்வுத்தன்மை.

நாம் உணர்ச்சிகளைப் பற்றி ஆராய எத்தனிக்கிறோம். ஆனால் இங்கு மூளையின் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு தோசை ஊற்றிக் கொண்டிருக்கிறோமென்று யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். நாம் ஆராய வேண்டிய உணர்ச்சிகளும் அந்த இடுக்குகளில்தான் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. ஆனால் ஆராய வேண்டிய பகுதி விலங்குகளிடமிருந்து வேறுபட்ட நமது மூளையின் பகுதிகளையல்ல, வேறுபடாத பகுதிகளை. அதாவது, விலங்குகளுக்கும் நமக்கும் அதிக வேறுபாடு இல்லாத மூளையின் பகுதிகளை. அதன் பெயர் லிம்பிக். ஒலிம்பிக்கிற்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கிடையாது, ஆனால் விளையாட்டில் வெற்றி, தோல்விகள் வரும்போது விளையாட்டு வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு சட்டையைக் கழற்றி சுற்றவோ, தரையில் புரண்டு அழவோ செய்கிறார்களே, அதற்கும் லிம்பிக் பகுதிக்கும் நிறைய தொடர்புண்டு. எதிரி கையில் கத்தியைப் பார்த்ததும் கதறி ஓடும் ஆட்கள் ஒருவகை. அதற்கு நேர்மாறாக “வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி” என்று டி.ராஜேந்தர் போல பாட்டுப்பாடுவோர் ஒருவகை. ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பயந்து ஓடுகிறார், ஒருவர் ஆபத்தைக் கண்டு அஞ்சாமல் பாடுகிறார், ஏன் இந்த வேறுபாடு?

லிம்பிக் பகுதி (Limbic System)

பாலூட்டி விலங்குகள் இந்த பூமியில் பரிணமித்த காலம் முதல் அதன் மூளையுடன் பயணித்தது லிம்பிக் பகுதி. லிம்பிக் பகுதியின் முதன்மைப்பணி தற்காப்பு. புல்லைத் தின்று கொண்டிருக்கும் மான், தன் பின்னால் புலி வருகிறது என்று அறிந்ததும் துள்ளி ஓடுகிறதே, அது லிம்பிக் பகுதியின் உதவியால்தான். ஒருவேளை, அறுவைசிகிச்சை செய்து லிம்பிக் பகுதியை நீக்கிவிட்டால், அந்த மானுக்கு பயம் என்ற உணர்வு இல்லாமல் போகும். புலி அருகில் வந்தால் கூட பயமில்லாமல், ஓடாமல் நிற்கும், புலிக்கு இரையாகிப் போகும். மனிதன் காட்டுக்குள்ளே விலங்கோடு விலங்காக சுற்றித் திரிந்தபோது, லிம்பிக் பகுதி, அவனைத் தற்காத்துக்கொள்ளும் பணியை செவ்வனே செய்தது. அப்படியானால் தற்கால மனிதர்களிடம் லிம்பிக் பகுதி ஒழுங்காக செயல்படவில்லையா? அதனை ஆராயும் முன், லிம்பிக்கில் என்ன இருக்கிறதென்று மேலோட்டமாக தெரிந்துகொண்டால் நமது புரிதல் எளிதாகும். லிம்பிக் மொத்தம் நான்கு பாகங்களைக் கொண்டது.

  • தலாமஸ் (Thalamus)
  • ஹைப்போதலாமஸ் (Hypothalamus)
  • அமிக்டாலா (Amygdala)
  • ஹிப்போகேம்பஸ் (Hippocampus).

limbic

தலாமஸ் மோப்ப சக்தியைக் கண்காணிக்கிறது. அமிக்டாலா பயம், கோபம், கவலை ஆகியவற்றைக் கையாள்கிறது. ஹிப்போகேம்பஸ் குறுகிய நாள் நினைவுகளை  நீண்டநாள் நினைவுகளாக மாற்றுகிறது. ஹைப்போதலாமஸ் தாகம், உடல் வெப்பம், உடல் எடை, இதயத்துடிப்பு, தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இவை மேலும் சிலவற்றையும் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் இவைதான் முதன்மையானவை. இந்த புரிதல் போதுமானது. ஒரு கேள்வியோடு நாம் மேலும் பயணிக்கலாம். நாம் காட்டுக்குள் விலங்குகள் துரத்தும்போது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினோம். இன்று அத்தகைய ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்திருக்கிறதா? இந்தக் கேள்வியில்தான் அனைத்துமே அடங்கியிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது!

அமிக்டாலா (Amygdala)

லிம்பிக்கால் நமக்கு என்ன பயனென்று தெரிந்து கொண்டோம். லிம்பிக்கில் இருக்கும் அமிக்டாலாவை தோண்டிப்பார்த்தால் நமக்கான விடை கிடைத்துவிடும். அமிக்டாலாதான் பயம், கோபம், கவலை ஆகியவற்றைக் கையாள்கிறதென்று பார்த்தோம். இங்குதான் உணர்ச்சிக்குள் நுழைகிறோம். சற்று ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும். அமிக்டாலா பயம், கோபம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்களை மட்டும்தான் கையாள்கிறது. ஏன் எதிர்மறை எண்ணங்களை மட்டும் கையாள்கிறது? ஏனென்றால் எதிர்மறை எண்ணங்கள்தான் நம் உயிரைக்காத்தது. யானை மதம் பிடித்து ஓடி வருகிறது, நாம் பயத்தில் ஓடுகிறோம், நாம் உயிர்பிழைத்தோம். ஆனால் அந்த நேரத்தில், யானை ஏன் உணர்ச்சிவசப்படுகிறது, நான் புத்திமதி சொல்லி திருத்துகிறேன் பார் என்று கிளம்பினால் உயிர்பிழைப்பது கடினம். ஆக, பயம், கோபம் போன்ற எதிர்மறை எண்ணங்கள்தான் நம்மை பல இலட்சம் ஆண்டுகளாக நம் உயிரைப் பாதுகாத்தது என்பது மறுக்க முடியாத உண்மை. நமது உயிருக்கு ஆபத்து வரும்போது மூளை எப்படி செயல்படுகிறது?

amygdala_screenshot_116992

நாம் கண்ணால் கண்டோ, காதால் கேட்டோ உணரும் ஒவ்வொரு செய்தியும், உடனடியாக மூளையின் தலாமஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. நம்மை சுற்றி ஆபத்துகள் இல்லையென்றால், அந்தத் தகவல் நேரடியாக நியோகார்ட்டெக்ஸ் (Neocortex) பகுதிக்கு அனுப்பப்படுகிறது. மூளை நிதானமாக நம்மைச் சுற்றி நிகழ்வதை அசைபோடும். ஆனால் நாம் இருப்பது ஆபத்தான சூழ்நிலை என்றால், நியோகார்ட்டெக்ஸ் (Neocortex) பகுதிக்கு அனுப்பும் முன்னரே அமிக்டாலாவுக்கு தகவல் அனுப்புகிறது தலாமஸ். அமிக்டாலா, நாம் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமா அல்லது அங்கிருந்து தப்பி ஓடவேண்டுமா என்று முடிவு செய்கிறது. அமிக்டாலா செயலாற்ற சில நொடிகளுக்கும் குறைவான நேரமே ஆகிறது. தகவல் அமிக்டாலாவுக்கு வந்து, அது செயலாற்றத் துவங்குகிற வேளையில், அதே தகவலை நியோகார்ட்டெக்ஸ் (Neocortex) என்ற சிந்திக்கும் மூளைக்கும் அனுப்பி வைக்கிறது தலாமஸ். மின்சாரம் இல்லாதபோது செயலாற்றும் மின்மாற்றி (Inverter) போல துரிதமாக செயலாற்றுவதே அமிக்டாலாவுக்குக் கொடுக்கப்பட்ட பணி.

திருப்பி அடி அல்லது திரும்பி ஓடு (Fight or Flight)

நமக்கு ஆபத்து என்று உணர்ந்தவுடன், அமிக்டாலா மூளையின் பிற பகுதிகளுக்குத் தகவலைப் பகிர்ந்து கொள்கிறது. நாம் வேகமாக செயலாற்றுவதற்கு உதவியாக, நமது உடலில் சில இரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த இரசாயன மாற்றங்கள், ஒன்று ஆபத்தை எதிர்த்து சண்டையிடு அல்லது தப்பித்து ஓடு என்று நம்மைத் தூண்டுகிறது.  நாம் பெரிதாக விவரித்தாலும், இந்த செயல்கள் அனைத்தும் நாம் கண்ணிமைக்கும் நேரத்தைவிட குறைவான நேரத்திலேயே நடந்துவிடுகின்றது. மூளையின் உதவியால் சுரக்கும் இரசாயனங்கள் முதன்மையாக இரண்டு.

  • அட்ரினலின் (Adrenaline)
  • நாரட்ரினலின் (Noradrenaline)

இந்த இரசாயனங்கள் சுரந்து, ரத்தத்தில் கலந்தவுடன், இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, ரத்த ஓட்டம் வேகமாகிறது, உடலின் தசைகள் இறுக்கமாகின்றன, மூச்சின் வேகம் அதிகரிக்கிறது. இவையெல்லாமே சில நொடிப்பொழுதுகளில் நடந்து, நாம் எதிரியை எதிர்த்து சண்டையிடவோ அல்லது பின்னங்கால் பிடரி தட்ட ஓடவோ ஆயத்தமாகிறோம். இதை ஆங்கிலத்தில் Fight or Flight என்று சொல்வார்கள். இதை 1920ம் ஆண்டுவாக்கில் முதலில் கண்டறிந்தவர் அமரிக்காவைச் சேர்ந்த வால்டர் பிராட்ஃபோர்ட் கனான் (Walter Bradford Cannon) என்ற மருத்துவர். ஆகமொத்தம் ஆபத்துக் காலங்களில் நமக்கு பெரும் உதவியாக இருப்பது லிம்பிக் பகுதி, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், அமிக்டாலா. இப்போது நாம் மீண்டும் அந்த கேள்விக்குள் நுழைவோம். இன்று நம்மை அத்தகைய ஆபத்துகள் நம்மைச் சூழ்ந்திருக்கிறதா?

உணர்ச்சிகளின் பிடியில்

காட்டை விட்டு நாட்டுக்குள் வாழத்துவங்கியதும் நம்மை சூழ்ந்திருந்த ஆபத்துக்கள் நம்மைவிட்டு விலகிவிட்டது. ஆனால் அமிக்டாலா தனது வேலையை செவ்வனே செய்கிறது. சரி அதனால் என்ன பிரச்னை? நாம் காட்டுக்குள் பல இலட்சம் ஆண்டுகள் ஆபத்துக்கு நடுவில் வாழ்ந்து வந்தோம். ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளில் காடுகளில் எதிர்கொண்ட ஆபத்துகளைக் கடந்துவிட்டோம். நம்மை மறைந்திருந்து விலங்குகள் தாக்குவதென்ற சூழல் இப்போது இல்லை. காட்டுக்குள் நமக்கு ஆபத்து இல்லை, அதனால் அமிக்டாலாவே ஒரு ஆபத்தாக மாறிப்போனது. எப்படி?

அமிக்டாலா எதிர்மறை எண்ணங்களைத்தான் கையாள்கிறதென்று முன்பே பார்த்தோம். அந்த எதிர்மறை எண்ணங்கள், காட்டுக்குள் நமக்கு நன்மையே அளித்தது, ஆனால் அது நாட்டுக்குள் தேவையில்லையென்றாலும் அமிக்டாலா தனது பணியை நிறுத்தவில்லை.  முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமிக்டாலாவுக்கு, ஆபத்துகள் வேண்டும், அதிலிருந்து நம்மைக் காப்பாற்ற வேண்டும். விளைவு, நாம் அன்றாடம் வாழ்வில் எதிர்கொள்ளும் சிறுசிறு பிரச்னைகளுக்கெல்லாம் அமிக்டாலா குறுக்கே வந்து நின்றது. அப்பா திட்டி விட்டார், காதல் தோல்வி, பரிட்சையில் தோல்வி, மனைவியின் பிறந்தநாளை கணவன் மறந்து விட்டான், இப்படி எது நடந்தாலும், நீ இப்போது ஆபத்தில் இருக்கிறாய் திருப்பி அடி அல்லது திரும்பி ஓடு என்று அமிக்டாலா நம்மை இயக்கத் துவங்கியது. அமிக்டாலா உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டத்துவங்கியது, நாம் அதன் பிடியில் சிக்கிகொண்டோம்.

நாம் காட்டுக்குள் இருக்கும்போது, நமது உயிருக்கே ஆபத்து வரும் வேளையில் மட்டும் நமக்கு உதவிய அமிக்டாலா, நாட்டுக்குள் வந்தபிறகும் அதேவேலையைச் செய்யும்போது அதன் விளைவுகள் கொடூரமாக இருக்கிறது. நண்பன் நம்மிடம் சற்றுக் கோபமாக பேசியதும் பளாரென்று அறைந்துவிடுகிறோம். சிறிது நேரம் கழித்து, அவனை அடித்திருக்கக் கூடாதென்று உணர்கிறோம். நாம் அடித்ததற்கு காரணம் அமிக்டாலா. நம் உயிருக்கே ஆபத்து வந்தது போல நம்மை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நாமும் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைக்கிறோம். அமிக்டாலாவால் தூண்டப்பட்ட இரசாயன மாற்றங்கள் அடங்கி நாம் இயல்பு நிலைக்கு வர சில மணி நேரங்கள் ஆகும். நாம் ஒவ்வொரு முறை உணர்ச்சிவசப்படும்போதும் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது, ரத்த ஓட்டம் வேகமாகிறது, என்று பார்த்தோம். இதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம், மன உளைச்சல் போன்ற வியாதிகளுக்கு ஆளாகிறோம். நம் உயிரைக் காத்த அமிக்டாலாவால் நாம் இன்று நோயாளிகளாக மாறிப்போனோம்.

மேம்படுத்தப்படாத மூளை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் காலத்துக்குத் தகுந்தாற்போல் மாறிக்கொண்டே வருவதுபோல நமது மூளையும் தன்னை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு பல இலட்சம் ஆண்டுகள் ஆகும். நாம் ஏற்கனவே பார்த்தபடி, நாம் காட்டில் உள்ள ஆபத்துக்களை சில ஆயிரம் ஆண்டுகளில் கடந்து விட்டோம். அதனால் மூளையின் லிம்பிக் பகுதி இன்னும் மேம்படுத்தப்படாமலே இருக்கிறது. உதாரணத்தோடு சொல்ல வேண்டுமானால், ஒரு தொலைக்காட்சி பெட்டியை (Television) வாங்கி வந்து அதில் வானொலி (Radio) கேட்பது போல. நமது மூளையின் லிம்பிக் பகுதியும் இப்படித்தான் இருக்கிறது. ஒரு உதாரணம் சொன்னால் நம் மூளையின் லிம்பிக் பகுதி எவ்வளவு பின்தங்கியிருக்கிறது என்று விளங்கும்.

சாலையில் நடந்து செல்லும்போது, ஒருவர் தன் பின்னால் வரும் பேருந்தை கவனிக்காமல் சாலையைக் கடந்து விட்டார், பேருந்து ஓட்டுநர் ஒலிபெருக்கியை (Horn) அழுத்துகிறார், சுற்றி நிற்கும் மக்கள் எல்லோரும் கத்துகிறார்கள், அவர் பதட்டத்தில் ஓடி, பேருந்தில் மோதி விட்டார் என்று வைத்துக்கொள்வோம். சிறு காயங்களோடு அவர் பிழைத்துக்கொண்டார். சில நாட்கள் கழித்து அவர் அதே சாலையில் நடந்து போகும்போது பேருந்து ஒலிப்பெருக்கியின் (Horn) சத்தம் கேட்டாலே, அவர் உடலில் மீண்டும் விபத்து நடந்தது போன்ற உணர்வு ஏற்படும், மனம் பதறும். ஏனென்றால், விபத்து நடக்கும்போது அவரைச் சுற்றி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கும், ஆனால் அவற்றில் ஏதோ ஒன்றை எதிர்கொள்ளும்போதே, அவர் உள்ளம் விபத்து நடந்தது போலவே பதறுகிறது. இதற்குக் காரணம் மேம்படுத்தப்படாத லிம்பிக் பகுதிதான்.

இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வரும் மனிதர்களின் மூளையில் லிம்பிக் பகுதி மேம்பட வாய்ப்பிருக்கிறது. அன்று வாழும் மனிதர்கள் நம்மை விட சிறப்பாக உணர்ச்சிகளைக் கையாளலாம். அந்த மாற்றம் நிச்சயம் நடக்கும். ஆனால் அவ்வளவு காலம் காத்திருக்காமல் இன்றே ஒட்டுமொத்த லிம்பிக் பகுதியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.

அமிக்டாலாவை எப்படிக் கட்டுப்படுத்துவது

உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்க அமிக்டாலாவைக் கட்டுப்படுத்த வேண்டும். அமிக்டாலா நம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் எதிர்மறை எண்ணங்கள் நம்மை ஆட்கொள்ளாது. எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டால் லிம்பிக் பகுதியின் செயல்பாடுகள் சீரடையும். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டியவர்கள்தான் நமது சித்தர்கள், புத்தர், மகாவீரர் போன்ற ஞானிகள்.

brainmeditation-mindfulhappioness

அமிக்டாலா எதிர்மறை எண்ணங்களுக்கு உடனே செயலாற்றும். எதிர்மறை எண்ணங்களை, நேர்மறை எண்ணங்கள் கட்டுப்படுத்தும். நேர்மறை எண்ணங்களை எப்போதும் சிந்தியுங்கள் என்று நம் முன்னோர் உணர்த்தியதன் காரணம் இதுதான். நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், அவரவர் கோயிலுக்கு சென்று வந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். கோயில் கடவுளை வழிபடுவதற்காக கட்டப்பட்டதல்ல, நேர்மறை எண்ணங்களை விதைக்கக் கட்டப்பட்டது. மேலும் தியானம், மூச்சுப்பயிற்சி, யோகாசனம் மூலமாகவும் அமிக்டாலாவைக் கட்டுக்குள் வைக்க முடியும். கோயில்களில் எழுப்பப்படும் மணியோசை, அங்கு ஏற்றப்படும் தீபம் ஆகியவற்றுக்கும் அமிக்டாலாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு. உணர்ச்சிகளின் நுண்ணறிவைப் புரிந்துகொண்டால் அதனை அடக்கி ஆளலாம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால் நாம் ஒவ்வொருவரும் புத்தர்தான்.

பின்னிணைப்புகள்

  1. https://www.youtube.com/watch?v=_7_XH1CBzGw
  2. http://www.youngdiggers.com.au/fight-or-flight
  3. https://newtonsapple.club/biology/difference-human-animal-brains/
  4. https://en.wikipedia.org/wiki/Walter_Bradford_Cannon
  5. Emotional Intelligence  by  Daniel Goleman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்