எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – நான்கு

நான்கு

நீங்கள் நாலும் தெரிந்தவரா? என்று ஒரு மனிதரின் அறிவுக்கு சவால் விடும் வேலையை நான்கு என்ற எண்தான் துவக்கி வைக்கிறது. கோடிக்கணக்கில் தெரிந்தவரா என்று கேட்டால் கூட, பல புத்தகங்களை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டவர் போலிருக்கிறது என்று நினைத்து ஆச்சர்யப்படலாம். எவ்வளவோ எண்கள் இருந்தும், ஏன் நாலும் தெரிந்தவரா என்று கேட்கிறார்கள்? இந்த கேள்விக்கு, நான்கு தொடர்பான தகவல்களைத் திரட்டும்போது மனதில் தோன்றிய பதிலை சொல்கிறேன். அந்த பதில் சரிதானா என்ற முடிவை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நாலும் தெரிந்தவரா என்ற கேள்வியில் நாலு என்பது நான்கு திசைகளைக் குறிப்பதாக இருக்கலாம். நான்கு திசைகளிலும் நடக்கும் அனைத்தையுமே அறிந்தவரா நீங்கள்? என்ற விதத்தில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம். சுருக்கமாக சொன்னால், உலக நடப்புகள் அனைத்தையும் அறிந்தவரா? என்று கேட்பதாக பொருள் கொள்ளலாம். இணையத்தில் தேடுகையில், நாலும் தெரிந்தவரா என்றால், அறம், பொருள், காமம், வீடு என்ற நான்மறைகளையும் உணர்ந்தவரா என்று கேட்பதுபோல பொருள்படும் என்ற பதிலும் கிடைத்தது. அதுவும் நல்ல பதிலாகவே தோன்றுகிறது. ஒரு கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்கக்கூடாதென்று எந்த இலக்கிய வரம்பும் கிடையாது. ஆகையால் இரண்டு பதில்களையும் ஏற்றுக்கொண்டு, நான்கு தொடர்பான தகவல்களுக்குள் நுழைவோம்.

அது இருக்கட்டும். ஏன், அறம், பொருளுக்குப் பின் காமம் என்று எழுதியிருக்கிறீர்கள் என்று சிலர் யோசிப்பது புரிகிறது. திருக்குறளில், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றுதான் நான் படிக்கும்போது இருந்தது. தற்போது, இன்பத்துப்பால் என்று மாற்றி விட்டார்கள். இன்பம் என்ற சொல்லைவிட, காமம் என்ற சொல்தான் அந்த இடத்தில் இயற்கையாகவே பொருத்தமாக இருக்கும். உயிர்களின் பரிணாமத்தில், காமம் ஒரு இயற்கை உணர்வு. காமத்தில் விளைவில் இன்பம் இருப்பது உண்மை. ஆனால் அதனை இன்பம் என்ற வார்த்தையால் குறிப்பிடும்போது, அதனைக் கொச்சைப்படுத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழில் காமம் என்ற சொல்லுக்கு விருப்பம் என்ற பொருளும் உண்டு.

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்று துவங்கும் குறுந்தொகைப் பாடலில் காமம் என்ற சொல் விருப்பம் என்ற அர்த்தத்தில்தான் கையாளப்பட்டுள்ளது.

“நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்று ஒளவைப்பாட்டியும், காமம் என்ற சொல்லை விருப்பம் என்ற பொருளிலேயே பயன்படுத்தியிருக்கிறார். இதற்கு மேல் காமத்தைப் பற்றிப் பேசினால் கட்டுரையை இழுத்து மூடிவிட்டு கடைத்தெருவுக்கு கிளம்பிவிடுவோம் என்ற குரல்கள் கேட்பதால், பேசாமல் கட்டுரைக்குள் போய்விடுவோம்.


நான்கு வேர்ச்சொல் 

தமிழ் எண் நான்கு ௪ என்ற வடிவத்தில் இருக்கும். நான்கு என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேடி அலைந்து, கடைசியில் நிலத்தில் வந்து முடிந்தது. நிலத்துக்கும் நான்குக்கும் என்ன தொடர்பு? நிறைய இருக்கிறது. தமிழர்கள் நிலத்தை நான்காக பகுத்தார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலையை விட்டுவிட்டீர்களே! என்ற குரல் கேட்கிறது. பாலை என்பது இயல்பான நிலமில்லை, குறிஞ்சியும், முல்லையும் வறட்சிக்கு உள்ளாகும்போது, பாலை நிலமாகிறது என்கிறது சிலப்பதிகாரம். ஆகையால் நானிலம் என்பதுதான் நிலத்துக்கான வரையறை.

 முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து 
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் (சிலப்பதிகாரம்: காடுகாண் காதை)

நிலத்தின் மேல் நாம் நிற்பதால்தான் நில் என்று சொல் உருவாகிறது. நில் என்ற சொல்லே நிலத்தை ஒட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது, அதுவே நிலத்துடன் நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஒட்டி உறவாடியிருக்கிறார்கள் என்பதற்கான சான்று. நிலங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டதென்று பார்த்தோம். நிலம், நில் என்ற சொல்லை ஒட்டிதான் நால், நாலு என்ற சொல் உருவாகிறது. நால், நால்கு என்ற சொல்தான் நான்கு என்றாகிறது. நம் தாய்நிலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நான்கு என்ற சொல் உருவாகியிருக்கிறது. நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்ற சொல்லாடலை தமிழறிந்த குடிகள் நடுவில் நாள்தோறும் கேட்கலாம். நாயகன் கமல் கூட, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை என்று, நான்கு என்ற எண்ணுக்கு தன் பங்கை செலுத்தியிருக்கிறார். திசைகள் நான்கு என்பதை நாமறிவோம், ஆனால் திசைகளின் பெயர்களை வைத்தே, நமது நாட்டின் பூகோள அமைப்பைப் புரிந்துகொள்ள முடியுமென்றால் நம்ப முடிகிறதா?

நான்கு திசைகள்

திசையின் பெயர்களை வைத்தே நமது நில அமைப்பைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது தமிழகத்தின் நில அமைப்பைப் புரிந்துகொள்ள முடியும். கிழக்கு என்றாலே கீழே என்றுதான் அர்த்தம். கிழக்குத் தெருவை நாம் பொதுவாக கீழத்தெரு என்றுதான் அழைப்போம். அதேபோல மேற்குத்தெருவை மேலத்தெரு என்றுதான் அழைப்போம். மேற்கு என்றால் மேலே என்றுதான் அர்த்தம். ஏன் கிழக்கு, மேற்கு என்பது கீழே, மேலே என்ற பொருளில் வருகிறது? தமிழகத்தின் பூகோள அமைப்பைப் பார்த்தால் அதற்கான விடை கிடைக்கும். தமிழகத்தின் கிழக்கில் கடல்தான் எல்லை. மேற்கில் மேற்குத்தொடர்ச்சி மலை. அதனால் இயற்கையாகவே கிழக்குப்பகுதி பள்ளமாகவும், மேற்குப்பகுதி மேடாகவும் அமைந்திருக்கிறது. அதனால்தான் கிழக்கு, மேற்கு என்ற பெயர்.

தென்றல் வீசும் திசை தென்திசை என்பார்கள். தென்திசையில்தான் கடற்கோள்கள் அதிகம் நிகழ்ந்தன. ஆகையால் தெற்கு திசையை தேயும் திசை என்றனர். கடல், நிலத்தை கவர்ந்ததால்தான், “தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது” என்ற பழமொழி உருவானது. தமிழகத்திற்கு வாடைக்காற்று வடக்கிலிருந்து வீசும். அதனாலே வடக்கு என்ற பெயர் வந்தது என்பார்கள். இன்னொன்று, வடக்கு என்பது பெரிய நிலப்பரப்பு, கன்னியாகுமரியில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியாவே வடக்கே இருப்பது போல தோன்றும். வியாபித்து இருப்பதால் அதற்கு வடக்கு என்றும் சொல்கிறார்கள்.

சங்ககாலத்தில், உண்ணா நோன்பிருப்பவர்கள் வடக்குதிசை நோக்கித்தான் அமர்வது வழக்கம், அதனால் உண்ணாநோன்பிற்கு “வடக்கிருத்தல்” என்று பெயர். அன்று வடக்கிருப்பவர்கள் பெரும்பாலானவர்கள், உணவு ஏதும் உட்கொள்ளாமலே இறந்துபோவார்கள். சேரமான் கணைக்கால் இரும்பொறை என்ற மன்னர், சோழமன்னன் செங்கணான் என்பவருடன் போரிட்டு சிறைப்பட்டார். சிறையில், காவலாளியிடம் தண்ணீர் கேட்டபோது, காவலன் கணைக்கால் இரும்பொறையை ஏளனமாகப் பேசியதால் வடக்கிருந்து இறந்து போனார் என்பது வரலாற்று செய்தி. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வடக்கிருந்து இறந்த வரலாற்று செய்தியை நாமறிவோம். தமிழக முதல்வர்கள் போல, காலையில் வயிறுமுட்டத் தின்றுவிட்டு, மதிய சாப்பாட்டு வேளை வரைக்கும் சாப்பிடாமல் இருப்பது உண்ணாநோன்பு அல்ல. மத்தியானம் வரை உண்ணாநோன்பு இருந்தது யாரென்று சிந்திக்காதீர்கள், தமிழர்கள் திசைகளுக்குப் பெயர் வைக்கும்போது கூட எவ்வளவு ஆழமாக சிந்தித்திருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்.

 நால்வர் 

மாதா, பிதா, குரு, தெய்வம். இதற்கு பல விளக்கங்களைச் சொல்லலாம். முதலில் இது ஒரு வரிசை. தாய் சொல்லித்தான் தந்தையை அறிகிறோம். தந்தை சொல்லித்தான் குருவை அறிகிறோம். குரு சொல்லித்தான் தெய்வத்தை அறிகிறோம். அதனால் இந்த வரிசையில் கூறப்பட்டிருக்கிறது என்பார்கள் சிலர். இதை ஏறுவரிசை போல கற்பனை செய்துகொண்டு, தாயை விட தந்தை உயர்ந்தவர், தந்தையை விட குரு உயர்ந்தவர், குருவை விட தெய்வம் உயர்ந்தது என்றொரு விளக்கமும் சொல்கிறார்கள்.

ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத நான் இதனைப் படிக்கும்போது எனக்கு வேறொரு பார்வை பிறந்தது. அதாவது தாய், தந்தை, ஆசிரியர் மூவரும் தெய்வங்கள். சற்றே விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தெய்வம் என்ற நான்காவதாக ஒன்று கிடையாது, தாய், தந்தை, ஆசிரியர் ஆகிய மூவரும்தான் தெய்வம். வள்ளுவரும் இதையே சொல்கிறாரென்று நினைக்கிறேன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். (குறள்: 50)

 நான்கு வர்ணங்கள் 

பகவத் கீதை, மனுஸ்மிருதி போன்ற வடமொழி நூல்கள் மனிதர்களை நான்கு வகைகளாகப் பிரிக்கிறது. பிராமணர் , சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கும் வடமொழி நூல்கள் சொல்லும் பிரிவுகள். வடமொழியில் இவை புதிதல்ல, ஆனால் இது போன்ற பாகுபாடுகள் தமிழ் நூல்களில் உண்டா என்றால், ஆம் என்பதுதான் பதில். அதுவும் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. பிராமணர், சத்திரியர், சூத்திரர் போன்ற பிரிவுகள் தொல்காப்பியத்தில் இல்லை. அரசர், அந்தணர், வைசிகர், வேளாளர் போன்ற பிரிவுகள் தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் என்னென்ன உரிமைகள் என்பதும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான தொல்காப்பிய பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசர், வைசிகர், வேளாளர் போன்ற மக்கள் பிரிவினர் குறித்து நாம் நன்கறிவோம். ஆனால் யார் இந்த அந்தணர்கள்? வடமொழியில் கூறப்படும் பிராமணர்களும், தொல்காப்பியத்தில் கூறப்படும் அந்தணர்களும் ஒன்றா? இல்லவே இல்லை. பிராமணர்கள் வேறு, அந்தணர்கள் வேறு. அப்படியானால் அந்தணர்கள் என்பது வேறு யாரைக் குறித்தது? தொல்காப்பியத்தில் கூறப்படும், அந்தணர்க்குரிய இயல்புகளைக் கூர்ந்து நோக்கினாலே புரிந்துவிடும். நூல் (ஓலைச்சுவடி), கமண்டலம், முக்கோல், மணை (இருக்கை) ஆகிவற்றை வைத்திருப்பவர் அந்தணர் என்கிறது தொல்காப்பியம். இவற்றில் நூல் என்பதை பூணூல் என்று தவறாகக் குறிப்பிடுபவர்கள் உண்டு. ஆகையால்தான் ஓலைச்சுவடி என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஆக அந்தணர் என்பது துறவறம் பூண்ட முனிவர்களைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் முனிவர்கள் என்றால் சித்தர்கள். அரசர்களைவிட சித்தர்களே தமிழ்நாட்டில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

ஆரியர்களுக்கு காலந்தோறும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. தாங்கள் குடியேறும் நிலப்பரப்பில், அந்தந்த மொழிகளில் உயர்வாகக் குறிப்பிடப்படும் குலத்தைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் நன்றாக அறிந்து வைத்துக்கொண்டு, பின்னாளில் நாங்கள்தான் அந்த வழித்தோன்றல்கள் என்று நிரூபிக்க முற்படுவார்கள். தொல்காப்பியர், அதங்கோட்டாசான், அகத்தியர் என்று அனைவைரையும் பிராமணர்கள் என்று கூச்சப்படாமல் பொய் சொல்வார்கள். அதை நம்புவதற்கும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யும். அந்தணர் என்ற வார்த்தைக்கு அவர்கள் உரிமைகோருவதும் அப்படித்தான்.

சரி, அந்தணர்கள் பிராமணர்கள் அல்ல என்று அவ்வளவு உறுதியாக எப்படி சொல்ல முடியும். ஏனென்றால், தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நூல். அந்த காலகட்டத்தில்தான் ஆரியர்கள் இந்தியாவுக்குள்ளே நுழைந்தார்கள் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் எப்படி தமிழ்க்குடிகளாக இருக்க முடியும். தமிழர்களுடன் ஒன்றாகக் கலந்து தமிழ்க்குடிகளுள் ஒன்றாக மாறிப்போனார்கள் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சில தமிழறிஞர்கள், தொல்காப்பியத்தில் இது போன்ற இடைச்செருகல்கள் பிற்காலத்தில் நடந்தன என்கிறார்கள். இடைச்செருகல்கள் உண்மைதானா என்ற ஆராய்ச்சி நமது கட்டுரையில் தேவையில்லை, ஏனென்றால் ஆரியர்கள் வந்தேறிகள் என்பது மரபணு ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டதே.

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (தொல்காப்பியம் மரபியல் – 71)

படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய (தொல்காப்பியம் மரபியல் -72)

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல்காப்பியம் மரபியல் – 78)

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி “ (தொல்காப்பியம் மரபியல் – 81)

 நான்கு குணங்கள் 

பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளை விதிக்கும் மனிதகுலத்தில் தமிழர்களும் விதிவிலக்கல்ல. தமிழர்களும் பெண்கள் மீது நிறைய கட்டுப்பாடுகளை திணித்திருக்கிறார்கள். அந்த வகையில் பெண்களுக்கென்று சில குணங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் பெண்களுக்கு இருக்க வேண்டுமென்கிறது தமிழ்ச்சமூகம். அச்சமென்றால் பயம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் எதைக்கண்டு அஞ்ச வேண்டுமென்று தெளிவாக கூறப்படவில்லை. ஒருவேளை தீயவற்றைக் கண்டு அஞ்ச வேண்டுமென்று எடுத்துக்கொண்டால், அது ஆண்களுக்கும் பொருந்துமல்லவா. மடம் என்பது மடமையைக் குறிக்கும், அதாவது அறிவின்மை. பெண்களுக்கு அறிவிருந்தாலும், முட்டாள்கள் போலவே நடந்துகொள்ள வேண்டுமென்கிறது நம் சமூகம். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நாணம் என்பது பெண்களிடத்தில் நாம் ரசிக்கும் ஒன்றுதான். ஆகையால் நாணத்தில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. பயிர்ப்பு என்ற சொல்லை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது கிடையாது. அதன் அர்த்தமும் பலருக்குத் தெரியாது. பயிர்ப்பு என்றால் தவறான தொடுதல் என்று பொருள். தவறான தொடுதலைப் புரிந்து கொள்ளவேண்டுமென்பது சரிதான். ஆனால் அதுவும் ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் சங்ககாலத்தில், பெண்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருந்ததா?

தொல்காப்பியர் நமது சந்தேகங்களைத் தீர்க்கிறார். பயிர்ப்பு நீங்கலாக மற்ற மூன்று குணங்களும் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. இந்தப்பாடல், களவியல் பகுதியில், தலைவியின் இயல்பைக் குறிப்பிடுகிறது.

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (தொல்காப்பியம் களவியல் – 96)

தலைவனும், தலைவியும் புதிதாக அறிமுகமாயிருக்கிறார்கள்; தலைவனைப் பற்றி முழுதாகத் தெரியாது. இருப்பினும், தலைவனை சந்திக்க, தலைவி தனியாக வந்திருக்கிறாள். இந்த சூழலில், ஒரு தலைவியின் இயல்பு எப்படி இருக்குமென்று இந்தப்பாடல் விளக்குகிறது. நன்கு அறிமுகமில்லாத ஒருவருடன் தனிமையில் இருக்கிறோம் என்று எண்ணுகிறபோது ஒரு அச்ச உணர்வு இயல்பாகவே வரும். நாம் ஒருவேளை தவறு செய்கிறோமோ, என்ற மனதின் எச்சரிப்பையும் மீறி தலைவனை சந்திப்பதில் கொஞ்சம் மடமையும் கலந்திருக்கிறது. தனது அச்சத்தையும், மடமையையும் நினைக்கும்போது தலைவிக்கு நாணமும் வருகிறது. ஆக, பெண்ணுக்கு அச்சம், மடம், நாணம் எப்போதும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தவில்லை. சில குறிப்பிட்ட தருணங்களில் பெண்களுக்கு இது போன்ற குணங்கள் வருவது இயல்பு என்று தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார். தொல்காப்பியத்தில் பயிர்ப்பு பற்றி குறிப்பிடவில்லை, அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் சொன்னது மூன்று குணங்கள்தான். யாரோ சிலர், பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் நோக்கில், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பது அனைத்துப் பெண்களுக்கு எப்போதும் இருக்க வேண்டுமென்று தவறாக வழிகாட்டி விட்டார்கள். பலர் அதை நம்பிக்கொண்டு, பெண்களை இழிவாக நடத்துகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

இது போன்ற குணங்கள் ஆண்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறதா? ஆம். அறிவு, ஓர்ப்பு, கடைப்பிடி, நிறை என்ற நான்கும் ஆண்களின் நற்பண்புகளாகக் கூறப்படுகின்றன. அறிவு என்பதற்கு விளக்கம் தேவையில்லை. ஓர்ப்பு என்றால், ஒன்றை ஆராய்ந்து உணரும் அறிவு. கடைப்பிடி என்றால் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது. நிறை என்றால், நிறைகுறைகளை ஆராய்ந்து உணரும் அறிவு.

 நான்கு பா வகைகள் 

தமிழில் பாக்கள் மொத்தம் நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா. ஒவ்வொரு பாவுக்கும் நிறைய உட்பிரிவுகள் உண்டு என்றாலும், மேல்வாரியாக மொத்தம் நான்கு பாக்கள்தான். ஓவ்வொரு பாவுக்கும் ஒரு குறிப்பிட்ட ஓசை உண்டு.

வெண்பா – செப்பலோசை
ஆசிரியப்பா – அகவலோசை
கலிப்பா – துள்ளலோசை
வஞ்சிப்பா – தூங்கலோசை.

தமிழ்மொழியில் பழமை மற்றும் சிறப்பை அதன் ஓரெழுத்து வார்த்தைகளை வைத்தே புரிந்துகொள்ள முடியும். இயற்கையை ஒட்டி வளர்ந்த ஒரு மொழியில் ஓரெழுத்து சொற்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும். ஒரு மொழியைத் தழுவி உருவாகிற மற்றொரு மொழியில் ஓரெழுத்து சொற்கள் அதிகம் இருக்காது. ஓரெழுத்து சொற்கள் என்பது ஒரு மொழியுடைய பழமையின் அளவீடு என்றே சொல்லலாம். அந்த வகையில், பா என்று வார்த்தையும் மிகச்சிறப்பு வாய்ந்த சொல். தமிழில் பா என்ற சொல்லுக்கு பத்துக்கும் மேற்பட்ட பொருள் உண்டு. பாட்டு என்பது முதன்மையான பொருள். பாட்டு என்பது பேச்சின் இசை வடிவம். பேசும் திறனற்ற ஒருவர் கூட பா என்ற சொல்லை உச்சரிக்க முடியுமென்றால் அந்த சொல்லின் சிறப்பைப் புரிந்துகொள்ளுங்கள். தமிழில் சொல்லும் நான்கு வகை என்பது மற்றொரு சிறப்பு. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். இலக்கணம் போதும், இலக்கியத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

 நாலடியார் 

ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்பார்கள். இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கிறது. இந்த சொல்லாடலிலேயே நாலடியாரின் பெருமை விளங்கும். நாலடியார் ஒரு தொகைநூல். தொகைநூல் என்றால், பல புலவர்கள் பாடிய பாடல்களை ஒரு தொகுதியாகத் தொகுப்பது. நாலடியாரும் திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நாலடியார் உருவானதற்கு பின்னணியில் ஒரு கதை உண்டு.

தமிழகத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தால், 8000 புலவர்கள் பாண்டிய நாட்டில் தஞ்சம் புகுந்தனர். பாண்டிய மன்னர் அவர்களுக்கு ஆதரவளித்து உதவினார். மன்னரின் பெயர் சரியாகத் தெரியவில்லை. பாண்டிய மன்னர் உக்கிரப்பெருவழுதி என்று சில பதிவுகள் சொல்கின்றன. ஆனால் உறுதியான தகவல் கிடைக்கவில்லை. சில ஆண்டுகளில், தங்கள் நாட்டில் பஞ்சம் தீர்ந்துவிட்டது என்றறிந்ததும், புலவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல விரும்பினார்கள். மன்னருக்கு அவர்களைத் திருப்பியனுப்ப மனமில்லை. ஒருநாள் இரவு, மன்னரிடம் சொல்லாமலே புலவர்கள் நாட்டைவிட்டுக் கிளம்பி விட்டார்கள், போகும்போது தலையணைக்கடியில் ஆளுக்கொரு பாடல் எழுதி வைத்துவிட்டுப் போயிருந்தார்கள். புலவர்கள் மேலிருந்த கோபத்தால், மன்னர், 8000 ஓலைகளையும் வைகையாற்றில் வீசியெறியச் சொல்லிவிட்டார். அவற்றில் 400 ஓலைகள் மட்டும் நீரை எதிர்த்து மேலே வந்தனவென்றும் அவைதான் நாலடியார் பாடல்கள் என்றும் சொல்கிறார்கள்.

 நான்மணிக்கடிகை

நாலடியார் போலவே நான்மணிக்கடிகையும் நான்கடி கொண்ட பாக்களை உடையது. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் பெயர் விளம்பி நாகனார். நான்கு மணிகள் போன்ற கருத்தை ஒவ்வொரு பாடலும் கொண்டிருப்பதால் அப்பெயர் பெற்றது. நான்கு மணிகள் எவையென்று தேடினால் முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்ற விடை கிடைக்கிறது. ஒன்பது வகை ரத்தினங்களில் இவை நான்கு மட்டும் எவ்வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. பெற்றெடுத்த அன்னையை விட வேறொரு கடவுளில்லை என்று தாயின் சிறப்பை ஒரு பாடலில் எடுத்துரைக்கிறது நான்மணிக்கடிகை.

கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்
துன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்
என்ன கடவுளும் இல். (நான்மணிக்கடிகை -54)

 நால்வகைப் பொன்

சங்ககாலத்தில், தங்கத்தில் நான்கு வகை இருந்ததென்று அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என நால்வகை தங்கத்தின் பெயர்களை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். தங்கத்தில் கலக்கப்படும் உலோகத்தைப் பொருத்து அதன் நிறம் மாறும். அதன் நிறத்திற்கு ஏற்றாற்போல அதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. உதாரணமாக கிளிச்சிறை என்ற பொன் கிளியின் சிறகு போல பச்சை நிறமாக இருக்கும். தங்கத்தில் பச்சை நிறம் வருவதற்கு என்ன உலோகத்தைக் கலப்பார்கள் என்று தெரியவில்லை. தங்கத்துடன் வெள்ளியைக் கலந்தால் அது சற்று பச்சை நிறம் போல மாறும், அதுதான் கிளிச்சிறை என்று இணையத்தில் சில எழுதியிருக்கிறார்கள், அது உண்மைதானா என்று தமிழ் ஆய்வாளார்களிடமோ, தங்க நகை செய்பவர்களிடமோ கேட்டால் விடை கிடைக்கலாம் அல்லது “என் தங்கம் என் உரிமை” என்று பொங்கும் சின்னத்தம்பி பிரபுவிடம் கேட்டுப்பார்க்கலாம்.

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம்
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையில்
பொலம்தெரி மாக்கள் கலைஞர் ஒழித்து ஆங்கு
இலங்கு கொடி எடுக்கும் நலம்கிளர் வீதியும் (சிலப்பதிகாரம்)

 நால்வகை உபாயங்கள் 

சாமம், தானம், பேதம், தண்டம் ஆகிய நான்கும் நால்வகை உபாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர்களைச் சொன்னதும், அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யன் (சாணக்கியன்) சொன்னது என்று நிறைய பேர் சொல்வார்கள். இன்றும் சாணக்கியத்தனம் என்ற சொல் அறிவும், தந்திரமும் கலந்த செயலுக்கு சொல்லப்படுகிறது. யார் இந்த சாணக்கியர், அவரை எனக்கே பார்க்க வேண்டும் போல் இருக்கிறதே என்ற ஆவல் பலருக்கு பொங்கி எழுவதைப் பார்க்க முடிகிறது. உங்கள் ஆர்வத்தை சிறிது நேரம் ரங்குப்பெட்டிக்குள் பூட்டி வையுங்கள், அப்புறம் திறந்துகொள்ளலாம்.

நீங்கள் ரங்குப்பெட்டிக்குள் பூட்டி வைத்த கௌடில்யன், ஒருநாள் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி போல தனநந்தர் அவையில், ஒரு வேலைக்கான விண்ணப்பத்தோடு போய் நின்றார். அவரது ஒல்லியான உருவத்தைக் கண்ட மன்னரும், மந்திரிகளும் அவரைக் குரங்குபோல இருக்கிறானென்று கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்கள். என்னை அவமானப்படுத்திய உன்னை அழிக்காமல் விடமாட்டேனென்று மனதுக்குள்ளே கமுக்கமாக சபதமெடுத்தார் கௌடில்யன். ஏனென்றால் மன்னரிடம் நேருக்கு நேராக சொன்னால் தலை போய்விடுமல்லவா, அதனால் மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டார்.

பழிக்குப்பழி, புளிக்குப்புளி என்று வீண் சபதம் வேறு போட்டாகிவிட்டது. இனி இந்த தனநந்தனை யாரை வைத்துப் பழிவாங்குவது என்று யோசித்த சாணக்கியர் கையில் கிடைத்தவர் சந்திரகுப்தன் என்ற சிறுவன். அவனை வைத்துதான் நந்த வம்சத்தை கௌடில்யர் அழித்தார் என்று நமக்கு கதை சொல்கிறார்கள். சந்திரகுப்த மௌரியர் பற்றி வரலாற்றுக் குறிப்புகள், ஆவணங்கள் நிறைய உண்டு. ஆனால், சந்திரகுப்த மௌரியருக்கு பாலூட்டி, மோரூட்டி, தயிரூட்டி, சோறூட்டி வளர்த்து ஆளாக்கிய சாணக்கியனைப் பற்றி வரலாற்று சான்றுகள் எதுவுமே இல்லை. ஒருவேளை நாம் காலப்பொறியைப் (Time Machine) பயன்படுத்தி, சந்திரகுப்த மௌரியரிடமே நேரில் போய் கேட்டாலும், சமாசாரம் அது மின்சாரம் படத்தில் “இந்த அம்மையப்பனைத் தெரியலையா, அந்த அம்மையப்பனைத் தெரியலையா” என்று விசு கேட்கும் அத்தனைக் கேள்விகளுக்கும் தெரியல தெரியல தெரியல என்று கத்தும் ரகுவரன் போல சந்திரகுப்த மௌரியரும் கத்தினால் ஆச்சர்யமில்லை. சந்திரகுப்த மௌரியர் அவ்வளவு நன்றி கேட்ட ரகுவரனா என்று உங்களுக்கு கோபம் வரலாம். ஏனென்றால், அப்படி ஒருவர் இருந்தால்தானே அவருக்கு நினைவிருக்கும்.

என்ன? ஏன் வரலாற்றுக்குள் போய் வடை போடுகிறீர்கள் என்று குழம்ப வேண்டாம். உண்மையில் சாணக்கியர் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம். சந்திரகுப்த மௌரியர் அவைக்கே வந்து குறிப்புகள் எழுதி, இண்டிகா என்ற நூலை எழுதி வெளியிட்ட மெகஸ்தனிஸ் கூட, சாணக்கியர் பற்றி குறிப்பிடவே இல்லை. மௌரிய வம்சத்தை உருவாக்கியதே சாணக்கியன்தான் என்ற அளவுக்கு புகழப்படும் கௌடில்யர் என்ற சாணக்கியரைப் பற்றி ஒருவரி கூடவா எழுதவில்லை. இல்லை என்பதுதான் உண்மை. சரி சாணக்கியர் எழுதியதாக சொல்லப்படும் அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் சந்திரகுப்த மௌரியர் பற்றி ஏதாவது எழுதி வைத்திருக்கிறாரா என்று தேடினால், அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சாணக்கியர் நூல் எழுதினால், அதில் சந்திரகுப்த மௌரியர் பற்றி குறிப்பிட வேண்டுமா என்ன? என்ற கேள்வி நியாயமானதுதான். சரி, நந்த வம்சத்தையே வேரறுத்த சாணக்கியரைப் பற்றி அவர்களாவது ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா என்றால், அதுவுமில்லை. சாணக்கியர் என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்ற முடிவுக்கு நான் மட்டுமல்ல, பல வரலாற்றாய்வாளர்களும் வந்துவிட்டார்கள். இனிமேல் சாணக்கியன் சொல் என்று ஏதாவது செய்தித்தாளில், குறிப்புகள் ஏதேனும் படிக்க நேர்ந்தால், அதன் பின்னால் இருக்கும் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.

 நால்வகை விரகுகள் 

பொதுவாக, தமிழ் இலக்கியங்களைத் திருடி வடமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு, எல்லா வேலையும் முடிந்தபின்னர் தமிழ் இலக்கியங்களை அழித்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து, இந்த கருத்துக்களை உலகுக்கு சொன்னதே நாங்கதானுங்கோ என்று கேவலமாக பொய்சொல்வது ஆரியர்களின் வழக்கமான திருட்டுத்தனங்களில் ஒன்று. உதாரணமாக, பூஜை என்பது தமிழ்ச்சொல் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். இறைவனுக்கு பூக்களைத் தூவி வழிபாடு செய்தது, பூ செய் என்று அழைக்கப்பட்டு, சொல் திரிந்து பூஜை என்றாகி விட்டது. இதேபோல் நமது சொற்களைத் திருடி நம்மிடமே மீண்டும் வேறுவிதமாக சொல்லப்பட்டவைதான் இந்த நால்வகை உபாயங்கள்.

விரகு என்ற தமிழ்ச்சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அடுப்பில் வைக்கும் விறகு தெரியும். அது என்ன விரகு? விரகு என்றால் வழிவகை என்று பொருள். சற்று புரியும்படி சொல்வதானால் உபாயம். நால்வகை உபாயங்கள் என்று நமது கற்பனை கதாபாத்திரம் சாணக்கியர் சொன்ன சாம, தான, பேத, தண்டம் என்பதற்கு மூலம் தமிழில் சொல்லப்படும் நால்வகை விரகுகள்தான்.

இன்மொழி, தருமொழி, புகழ்மொழி, ஒறுப்பு என்ற நான்கும்தான் நால்வகை விரகுகள். ஒருவரை சற்று புகழ்ந்துபேசி, தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வது இன்மொழி. அன்பளிப்பு, பரிசு ஏதேனும் தருவதாகச் சொல்லி குழந்தைகளுக்குப் படிக்கும் ஆசையை உருவாக்குகிறோமே, அதுதான் தருமொழி. பக்கத்து வீட்டுப் பிள்ளையை விட நீ எவ்வளவு நல்ல பையன், அம்மா சொல்வதை எல்லாம் கேட்கிறாய் என்றெல்லாம் புகழ்ந்து பேசி திருத்துவது புகழ்மொழி. ஒருவேளை இதற்கெல்லாம் வழிக்கு வரவில்லையென்றால், ஒழுங்காக படிக்கவில்லையென்றால் உதைவிழும் என்று மிரட்டி பணியவைப்பது ஒறுப்பு. இவைதான் நால்வகை உபாயங்கள் என்று நமக்கே சொல்லப்படுகிறது.

 நான்கு யுகங்கள் 

வடமொழி நூல்கள் உலகத்தின் காதுகளில் பூசுற்றும் செய்திகளில் ஒன்று இந்த யுகங்கள் பற்றிய கணக்கு. தசரதன் 60,000 ஆண்டுகள் வாழ்ந்தான், ராமன் 11,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் ராமாயணத்தில் படிக்கிறோம். இவர்களுக்கு ஆண்டுக்கும், நாளுக்குமான வேறுபாடு கூட தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால் இவர்கள் நான்கு யுகங்கள் இருக்கிறந்தென்று ஒரு கணக்கு சொல்கிறார்கள். கிருதயுகம், திரேத யுகம், துவாப்பர யுகம், கலி யுகம். கிருதயுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. கிருத யுகத்திலிருந்து 4,32,000 ஆண்டுகளைக் கழித்தால் திரேத யுகம் வந்து விடும். அப்படியே கழித்துக்கொண்டு வந்தால் கலியுகம் வரைக்கும் வந்துவிடலாம்.

மொத்தமாக கூட்டினால் 43,20,000 ஆண்டுகள் வரும். ஆனால், அவ்வளவு தூரம் பின்னோக்கிப் போனால் பூமியில் மனிதர்களே இருக்க மாட்டார்களே, குரங்குகள்தான் இருக்கும் என்று அறிவியல் ஆதாரங்கள் எல்லாம் சொன்னால் அவர்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். நாங்கள் ஆயிரம் பொய் சொல்வோம், அதையெல்லாம் உண்மையா என்று கேள்வி கேட்கக்கூடாது, மீறிப்பேசினால் ஒட்டுமொத்த பூமியையும் அலேக்காக தூக்கிக் கொண்டுபோய் கடலுக்குள் போட்டுவிடுவோம் என்று அவர்கள் புராணக்கதைகளை சொல்லி மிரட்டுவார்கள். கோபத்தில் கூட நீங்கள் உண்மையைப் பேச மாட்டீர்களா அறிவாளிகளே என்று ஒதுங்கிக் கொள்ளவேண்டியதுதான்.

கிருத யுகம் – 1728000
திரேத யுகம் – 1296000
துவாப்பர யுகம் – 864000
கலியுகம் – 432000

 நான்கு படைகள் 

மன்னர்களுக்கு நான்குவகை படைகள் உண்டு. யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை. நான்கு படைகள் போக, உளவுவேலை செய்பவர்களை ஐந்தாம் படை என்று சொல்வார்கள். நான்கு படைகளும் போரில் நேரடியாகப் போர்க்களத்தில் ஈடுபடும். ஆனால் உளவுப்படை போரில் பங்கேற்க மாட்டார்கள், மேலும் உளவுவேலை செய்பவர்கள் பெரிய எண்ணிக்கையில் இருக்கமாட்டார்கள். அதனால் உளவுப்படையை பொதுவான படைகளோடு சேர்த்துக்கொள்வது கிடையாது. மற்ற படைகளில் இருப்பவர்களுக்கு போர்க்காலங்களில் மட்டும் உயிருக்கு நேர வாய்ப்பிருக்கும். ஆனால் ஒற்றர் வேலை பார்ப்பவர்களுக்கு என்றுமே உயிருக்கு ஆபத்துதான்.

 நான்முகன் 

பிரம்மனுக்கு நான்கு முகங்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் இடையில் அவர் ஐந்தாவது முகத்தை தானே உருவாக்கி அதை அநியாயத்துக்குப் பறிகொடுத்தும் விட்டார். அடடா அது என்ன சோகக்கதை என்று வருத்தப்படாதீர்கள். அது சோகக்கதையல்ல, பிரம்மா சொக்கிப்போன கதை. பிரம்மா உயிர்களைப் படைக்கத் துவங்கியபோது முதன்முதலில் படைத்தது ஒரு பெண், அவள் பெயர் சதரூபா. பிரம்மா சதரூபாவின் அழகைப் பார்த்ததும், சொக்கிப்போய் “என்ன அழகு, எத்தனை அழகு, கோடிமலர் கொட்டிய அழகு” என்று விஜய் போல உற்சாகத்தில் ஆடிக்கொண்டே சதரூபாவை துரத்தத் துவங்கிவிட்டார். சதரூபா அதிர்ச்சியடைந்தாள். தாங்கள் என்னைப் படைத்தவர், ஆகையால் தந்தை போன்றவர் என்று சொன்னாலும், பிரம்மா விடுவதாக இல்லை. சதரூபா பூமியில் எங்கு என்று சென்றாலும், நான்கில் ஒரு தலையை வைத்து நோட்டமிட்டுக்கொண்டே இருந்தார்.

மனிதனுக்கு பிரச்னை என்றால், கடவுளைக் கூப்பிடலாம். ஆனால் பிரச்னை செய்வதே கடவுள்தான் என்றால் யாரிடம் போய் முறையிடுவது? நான்கு திசைகளில்தானே பிரச்னை, ஆகாயத்துக்கு சென்றால் பிரம்மாவிடம் தப்பித்து விடலாம் என்றெண்ணி, ஆகாயத்தை நோக்கிப் பறந்துபோய் விட்டார் சதரூபா. விடுவாரா நம்மாள் பிரம்மா. ஆகாயத்தை நோட்டமிடுவதற்கு, ஐந்தாவதாக ஒரு தலையை உருவாக்கிக் கொண்டார். நொந்து நூடுல்ஸ் ஆகிப்போனார் சதரூபா. இதுவரை பொறுத்துக்கொண்ட சிவனுக்கு, ஐந்தாவது தலையை உருவாக்கி, ஈவ் டீசிங் செய்ததும் பிரம்மா மீது பொல்லாத கோபம் வந்துவிட்டது. கோபத்தில், ஐந்தாவது தலையைப் பிய்த்து எறிந்துவிட்டார். கதை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லையே என்று சலிப்படைவது புரிகிறது. அதுதான் ஆரிய ஆன்மீகத்துக்கும், தமிழர்களின் ஆன்மீகத்துக்குமுள்ள வேறுபாடு.

 நான்மறை 

நான்மறை அல்லது நான்கு வேதங்கள் என்றவுடன், எழுந்து நின்று கையைக்கட்டிக்கொண்டு, பள்ளியில் ஆசிரியரிடம் ஒப்பிப்பதுபோல “ரிக், யஜுர், சாமம், அதர்வணம்” என்று அனைவரும் கூச்சலிடுவது வழக்கம், தமிழர்கள் உட்பட. அமரகோசம் என்ற வடமொழி நிகண்டு வேதங்கள் மூன்று என்று சொல்கிறது. அமரகோசத்தில் மட்டுமல்ல, தடுக்கி விழுந்தால் கூட வடமொழிக்காரர்கள் குறிப்பிடும் மனுஸ்மிருதி நூலில் மூன்றாம் பகுதியின் முதல் பாடலே, வேதங்கள் மூன்று என்று பதிவு செய்கிறது. அதர்வணத்தை அவர்கள் என்றுமே வேதமாக ஏற்றுக் கொண்டதேயில்லை. இந்தியாவின் கலாச்சாரத்தைப் பற்றிய ஆய்வு நூலை எழுதிய ரொமேஷ் சந்தர் தத் அவர்களும் வேதங்கள் மூன்றுதான் என்று குறிப்பிடுகிறார். ஆக வடமொழியில் நான்கு வேதங்கள் என்பது காலத்தால் மிகவும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டுத் திணிக்கப்பட்ட கருத்து.

நான்மறை என்பது தமிழ் தொடர்பானது. தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தில் “நான்மறை என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. தொல்காப்பியம், நிலந்தரு திருவின் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனது அவையில் அதங்கோட்டாசான் என்பவர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. அதில் குறிப்பிடப்படும் அதங்கோட்டாசான் நான்மறையும் முழுவதுமாக கற்றவர் என்று குறிப்பிடப்படுகிறது.

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு (தொல்காப்பியம்: சிறப்புப்பாயிரம்)

அகநானூறு 181ம் பாடல் “நான்மறை முதுநூல்” என்ற சொல்லைப் பதிவு செய்கிறது.

ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன” (அகநானூறு: 181) 

சங்க காலத்திலேயே தமிழில் நான்மறை என்ற சொல் வழக்கில் இருந்தது தெளிவாகிறது. அப்படியானால் தமிழின் நான்கு வேதங்களுக்குப் பெயர்கள் இருக்கிறதா என்ற கேள்விகளுக்கு “அறம், பொருள், காமம், வீடு” என்று நான்கும்தான் நான்மறைகள் என்று திரு.சத்தியவேல் முருகனார் போன்ற தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். திரு.சத்தியவேல் முருகனார் அவர்கள் நான்மறைகளைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இனி ஒருபோதும் நான்கு வேதங்கள் என்றவுடன் ஆரியர்களின் வேதங்களைச் சொல்லாதீர்கள்.


பின்னிணைப்புகள் 

  1. https://www.sacred-texts.com/hin/manu/manu03.htm
  2. http://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post17-punishments-four-types.html?m=0
  3. https://en.wikipedia.org/wiki/Shatarupa
  4. https://www.thequint.com/voices/opinion/chanakya-niti-amit-shah-sharad-pawar-indian-democracy-maharashtra-election-drama

http://www.isec.ac.in/History_%20of_%20civilisation_%20in_%20ancient_%20India.pdf

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்