பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

“பல நூல் படித்து நீ அறியும் கல்வி,
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்”

என்ற பாடல் வரிகளை கேட்கும்போதெல்லாம் ஒருவித புல்லரிப்பை மனதுக்குள் உணர்ந்ததுண்டு. முன்பின் அறியாத யாருக்காவது நான் உதவியிருக்கிறேனா என்று திரும்பிப்பார்த்தால், என் வாழ்க்கையின் வழித்தடத்தில் அப்படி யாரும் என் கண்ணில் படவில்லை. ஒருவேளை, உதவி செய்திருந்தாலும் அதை சொல்வது முறையாகாது. முன்பின் அதிகம் பழக்கமில்லாத பலர் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள். அதை சொல்வதே முறை. நன்றி மறப்பது நன்றன்று என்பது தெய்வப்புலவர் வாக்கல்லவா.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே புத்தகம் எழுதும் முயற்சியில் இறங்கினேன். வேலைப்பளுவுக்கிடையில், அதனை எழுதி முடிக்கவே இரண்டு ஆண்டுகள் ஆனது. எழுதி முடிக்கும் வரை ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அதனைப் புத்தகமாக வெளியிடும் முயற்சில் இறங்கும்போது மனதுக்குள் ஒரு பயம், இலவச இணைப்பாக படபடப்பு. ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமென்ற எந்தவித அடைப்படைப் புரிதலுமின்றி தவித்துக் கொண்டிருந்தேன். எனது நண்பர்கள் யாருமே எழுத்துலகில் இல்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற உணர்வு.

தலைக்கு மேல் சுற்றும் கோள்களையும், தலையில் கிறுக்கப்பட்டதாக சொல்லப்படும் விதி என்ற கோல்மால்களையும் நான் ஒருபோதும் நம்பியதில்லை. அதனால், அன்று நடந்தது தற்செயல் நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு வாட்ஸாப்ப் குழுமத்தில் பகிரப்பட்ட செய்தி ஒன்று என்னைக் கவர்ந்தது. அது “புறநானூற்று வீரன்” என்று தலைப்பிடப்பட்ட புத்தகத்தைப் பற்றிய விளம்பர செய்தி. எழுதியவர் அன்புத் தம்பி திருமுருகன் காளிலிங்கம். அந்தப் புத்தகத்தை வாங்குவதற்காக அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அந்த உரையாடலில், புத்தகம் வெளியிட என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளை வழங்கினார். செந்தில் வரதவேலுவின் தொடர்பு அவர் மூலம்தான் கிடைத்தது. ஒருவேளை தம்பி திருமுருகன் காளிலிங்கத்திடம் அன்று நான் பேசியிருக்கவில்லையென்றால், இன்று எனது புத்தகம் வெளிவந்திருக்குமா என்பது சந்தேகமே.

புத்தகம் வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தியவர் அன்புத்தம்பி செந்தில் வரதவேலுதான். அவரின் உழைப்புக்குத் தலைவணங்குகிறேன். ஐயா ஏர் மகாராசன் அவர்களும் ஐயா வேலு சுபராசர் அவர்களும் புத்தகத்தைப் படித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவரவர் பணிச்சுமைகளுக்கு நடுவில் எனது புத்தகத்துக்காக அவர்களின் பொன்னான நேரத்தை செலவிட்டதற்கு தமிழ்மீது அவர்கள் கொண்ட காதலும், புது எழுத்தாளன் ஒருவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கமும்தான் காரணம்.

எனது நண்பர்கள் விஜய் ஆனந்த், மோகன் ரஞ்சித் சிங், குமரன் ராமஜெயம், இன்னும் பல அன்பு முகங்களின் அரவணைப்பில் உருவானதுதான் “நானிலம் தேடி”. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

“பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்” என்ற வரிகள் இவர்களைப் போன்ற தன்னலமற்ற உள்ளங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அண்மைக்கால வலைப்பதிவுகள்
தொடர்புடைய வலைப்பதிவுகள்